வணக்கம் ஜெ
ஒரு தங்க நாணயத்தை எடுத்து சமர்ப்பிக்கும் கவனத்துடனும் உறுதியுடனும் ஒரு ரோஜா மலரை எடுத்து புத்தரின் முன் அமர்த்தி வணங்கினார், குரு தில்லை செந்தில்பிரபு. அந்த மென்மையும் அமைதியும் அவரின் அத்தனை அசைவுகளிலும் அடுத்த மூன்று நாட்களும் வெளிப்பட்டன. உடனடியாக எங்களிடமும் மெல்ல மெல்ல பரவத்தொடங்கின. அவரைத் தொடர்ந்து, நாங்களும் மலர்களை தூவாமல், கவனமாக ஒரு மலர் எடுத்து புத்தர் முன் வைத்து மூன்று நாள் உளக்குவிப்பு பயிற்சியைத் தொடங்கினோம்.
‘யோகா என்றால் என்ன?’ என்ற கேள்வியில் தொடங்கிய குரு, மரபிலிருந்து விளக்கங்களை அளித்து, பின் அஷ்டாங்க யோகத்தை விவரித்தபோது அவற்றில் ஆசனம், பிராணயாமம், தியானம் ஆகியவற்றின் இடங்களைப் புரிந்துகொண்டோம். பிராணாயாமம் என்பது மூச்சுப்பயிற்சி அல்ல; அது மூச்சை ஒரு கருவியாகக்கொண்டு உயிர் சக்தியைத் தொடுவது என்ற தெளிவு பிராணயாம பயிற்சிகளின் மீதான பார்வையையே மேம்படுத்தியது. அதன்பின் நிகழ்ந்தவை எல்லாம் உடல், மூச்சு, மனம் தாண்டிய உயிர் தேடல் என்றே சொல்லவேண்டும். பெரும்பாலும் பயிற்சிகளிலேயே மூன்று நாளும் நிறைந்தது. இது முழுக்க முழுக்க அனுபவ வகுப்பு. இன்ன இன்ன கற்றோம் என்று சொல்வதை விட இப்படி உணர்ந்தோம் என்றே சொல்லத்தகும். ஒவ்வொரு பயிற்சிவகுப்புக்குப் பின்னும் அகம் நீராடிய அனுபவம். ஒரு மாலை நேர யோக நித்ரா அனுபவத்தின்போது உடலை விட்டு சற்றே மேலே நீரில் மிதப்பது போல உணர்ந்தேன். இந்த வகுப்பை ‘உளக்குளிப்பு‘ என்று சொன்னால் கூட பொருந்தும்.
காலை மாலை பயிற்சி வகுப்புகளின் இடையே சில விளக்க வகுப்புகளும் இருந்தன. இவற்றில் மனம், கவனம் பற்றிய விளக்கங்களும், நம் அன்றாட வாழ்க்கை சூழல்களை கையாளுவதற்கான கருவிகள் பலவும் கொடுக்கப்பட்டன. அவற்றை வார்த்தைகளில் விவரித்தால் தெரிந்ததை சொல்வதைப் போலவே தான் தோன்றும். ஆனால் ஒரு கற்றல் சூழலில், ஏற்கும் மனநிலையை உருவாக்கி, ஒரு குருவின் முன் அமர்ந்து, அவர் வழி கேட்கும் போது அதுவே வேத வாக்கியம் ஆகிறது. புரிதலே மாறுகிறது. புரிதலைத்தாண்டிய உணர்தல் ஏற்படுகிறது. மூன்று நாள் நிறைவில் உடல் லேசாகவும், மனம் அமைதியாகவும், நான் உட்பட மொத்த குழுவுமே சற்று பேச்சைக் குறைத்து உள்நோக்கி திரும்பியதாகவும் உணரமுடிந்தது.
நித்யவனத்தில் எனக்கு இது ஐந்தாவது வகுப்பு. மற்ற வகுப்புகளிலிருந்து இந்த வகுப்பு சில வழக்கங்களில் வேறுபட்டிருந்தது. முதலாவதாக, குருவுக்கு துணையாக தன்னார்வலர்கள். ரவி குமார் மற்றும் செல்வ குமார் இருவரும் வகுப்பை தயார் படுத்தும் அத்தனை வேலைகளையும் மிகுந்த அமைதியுடன் செய்தனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இரண்டாவதாக இசை. ஒவ்வொரு முறை வகுப்புக்குள் நுழையும்போதும் இசை பன்னீர் தூவி வரவேற்றது. நனைந்தவண்ணம் வந்தமர்ந்தோம். நித்யவனம் வகுப்புகளில் அமைதியாய் வந்தமர்வது வழக்கம்தான். ஆயினும் வெளியிருக்கும் அமைதியை உள்கடத்த இசை பெரிதும் உதவியது. மூன்றாவதாக, வகுப்பு இடைவெளிகளில் வழங்கப்பட்ட பானம். வழக்கமான தேநீரை தவிர்த்து சூடான எலுமிச்சை சாறு வழங்கப்பட்டது. சுவையாகவும் ஆரோக்கியமாகவும் எளிமையாகவும் இருந்த இதுவே எல்லா வகுப்புகளிலும் கிடைக்குமா என்று ஆசை பட்டோம். ஆனால் தனியே அத்தனை எலுமிச்சைகளையும் பிழிந்து தயார் செய்வது சரஸ்வதி அம்மாவிற்கு கடினம் என்பதை பின்பு உணர்ந்தோம். கருவிகளும், சில மாணவ கரங்களும் உதவலாம்.
நித்யவனத்தில் எப்போதும் பல்லுயிர் பெருக்கத்திற்கு பஞ்சமில்லை. இந்த முறை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உயிர்கள் தென்பட்டன. பட்டாளம் பாட்டாளமாய் பட்டாம்பூச்சிகள், தும்பிகள், பல வித பறவைகள், பூச்சிகள், மலர்கள் என எங்கும் உயிராற்றல் உணரமுடிந்தது. ஓங்கி நிற்கும் புரசை மரத்தின் மீது ஐந்து நிமிடங்களுக்குள் ஐந்து வெவ்வேறு பறவை இனங்கள் வந்தமர்ந்து சென்றன. மைனா, தவிட்டுப்புறா, சின்னான், இரட்டைவால் குருவி, தையல் சிட்டு என பறவைகளின் ஃபேஷன் ஷோவே நடந்தேறியது. மதியம் மூன்றரை மணியளவில் போர் முடிந்து திரும்பும் விமானப்படை போல ஒரு பெரும் தும்பிக்கூட்டம் பள்ளத்தாக்கு திசையிலிருந்து நம் மலைப்பகுதி நோக்கி வந்து நம்மைத்தாண்டி சென்றன. புரசை மரத்தருகே எனக்கென ஒரு பாறை உண்டு, பள்ளத்தாக்கை நோக்கிய படி. அதன் மீது சற்று கண்ணயர்ந்து தூங்கி விழித்தபோது விரலின் மூன்றில் ஒரு பங்களவு பெரிய ஈ என் முகத்தருகே அமர்ந்திருந்தது. படுத்தபடியே சில நேரம் அதனைக் கண்ணோடுகண் பார்த்திருந்தேன். பெரிய சிவப்பு கண்ணாடி அணிந்தது போன்ற அதன் கண்கள். அத்தனை நெருக்கமாய் அதுவரைக் கண்டதில்லை. வகுப்பறைக்குள் ஒரு விசித்திரமான பூச்சியைக்கண்டு நண்பர் சிசுபாலனும் நானும் ஆச்சரியப்பட்டோம். கருப்பு உதட்டுத்தோல் உதிர்ந்து விழுந்தது போன்ற உருவம். ஆறு கால்களாலும், பின்பக்கம் தன் உடலால் உந்தியும் நகர்ந்து கொண்டிருந்த அந்த பூச்சியை நாங்கள் அதுவரைக் கண்டதில்லை. சில நண்பர்கள் தொட்டாச்சிணுங்கி இலைகளோடு விளையாடுவதை கவனித்தேன். நண்பர் கவிநிலவன் செங்காந்தள் மலர்களை படம்பிடித்து வந்து காண்பித்தார். எஸ்.ரா ஒரு கட்டுரையில் அவற்றைத் தேடி காட்டுக்குள் பயணங்கள் செய்ததாக குறிப்பிட்டிருந்ததைச் சொன்னார். உள்ளும் புறமும் உயிராற்றல் உணர்ந்த வகுப்புகள் நிறைவுபெற்று கடைசி வண்டியில் ஏறி கையசைத்த போது மணியண்ணன் மட்டும் ஒரு பெரும் பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பின்னால் திண்ணையில் நின்றபடி கையசைத்தார். கொஞ்சம் பொறாமையுடனேயே அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.
திரும்பும்போது இளம் நண்பர்கள் சந்தீப்பும் வெங்கடேஷும் அறிமுகம் ஆயினர். எங்கள் மூவருக்கும் நேரம் இருந்ததால் தாமரைக்கரையில் மாலை வரை இருந்து செல்லலாம் என முடிவு செய்தோம். போன முறை அல்லிகளால் ஆளப்பட்ட தாமரைக்குளம் இம்முறை வெண்தாமரைகளால் அமைதி கொண்டிருந்தது. கரைமேட்டில் அமர்ந்தபடி வகுப்பை பற்றியும் வாசித்தவை பற்றியும் உரையாடினோம். இதய வடிவம்போல வளைந்த கொம்புகளோடு மேய்ந்து கொண்டிருந்த எருமைகள், கருப்பும் வெள்ளையுமாய் கரையைக்கடந்த ஆட்டுமந்தை, தரையில் ஓடும் சரளத்துடன் நீரின் மீது தாமரை இலைகளில் தாவி ஓடிய நீர்க்கோழிகள், வெண்தாமரைப் பின்னணியில் பளிச்சென்று தெரிந்த மீன்கொத்திகள், கருப்பு வாத்தைப் போன்று நீந்தியும் சிவப்பு அலகுடைய கோழியைப்போன்று கொத்தித்திருந்தும் இருந்த பெயர் தெரியாத பறவை, இன்னும் பல பெயர்தெரியாத பறவைகள் என குளம் எங்கள் கவனம் கரையைக்கடக்காமல் தன்வசம் குவித்துக்கொண்டது. மாலை அந்தியூர் பேருந்தில் மழைக்கு முன் இடம்பிடித்து மலையிறங்கினோம்.
எங்கள் நேர மிகுதியை அறிந்த சரஸ்வதி அம்மா, கூடுதுரை கோயில் செல்ல ஆலோசனை தந்திருந்தார். அவ்வாறே சென்றோம். சிற்பங்களைக் கண்டு களித்தோம். ரசிப்பதற்க்கு ஆலயக்கலை பயிற்சி தேவை. சங்கமேஸ்வரரை வணங்கிய பின் வகுப்பில் கற்ற தியான பயிற்சிகளை செய்ய இடம் தேடிய எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கோயிலில் ஆளில்லாத ஆற்றங்கரையோடு ஒரு படித்துறை. காவிரிக்கரையில் கோயில் அமைந்திருந்ததை பின்பே அறிந்தோம். சரஸ்வதி அம்மாவிற்கு நன்றி சொல்லி மூவரும் படித்துறையில் அமர்ந்து பயிற்சிகளை ஆரம்பித்தோம். மூவரும் மதியம் தான் பெயர்கள் பரிமாறிக்கொண்டோம். மாலை கூடுதுறையில் கூட்டு தியானம். ஒத்த உணர்வுடையவர் அறிமுகத்திலேயே சுற்றம் ஆகிறோம். பிராணயாம பயிற்சிகள் வரை செய்து கொண்டிருந்தபோது ஆலயம் மூடும் வேளை வந்ததால் வெளியேற்றப்பட்டோம். சீக்கிரம் வந்திருக்கலாமோ?.. பரவாயில்லை தொடங்கிவிட்டோம். அந்த கணம் மாற்ற முடியாதது.
முன்னதாக நித்யவனத்திலிருந்து புறப்படும் முன் அங்கிருந்து புத்தகம் வாங்கினேன். இப்போது அது வழக்கமாகிவிட்டது. இந்த முறை ‘தங்கப்புத்தகம்‘. ஒரு இளம்துறவி தவம் செய்வது போன்ற அட்டைப்படத்தைக் கண்டதும் எடுத்துக்கொண்டேன். நேராக குரு. தில்லை செந்தில்பிரபுவிடம் சென்று அதில் கையெழுத்துக் கேட்டேன். ‘நான் பின்பக்கம் இடுகிறேன். முன்பக்கம் ‘ஜெ‘யிடம் வாங்குங்கள்‘ என்றார். நான் முன்பக்க அட்டையை காண்பித்து ‘இது நம் தியானத்தின் நினைவாய். முன்பக்கமே இடுங்கள்‘ என்று கேட்டுக்கொண்டேன். ஒப்புக்கொண்டார். கிளம்பும் நிலையில் இருந்தவர், திண்ணையில் ஒரு நாற்காலியைத் தேடி அமர்ந்து, புத்தகத்தின் முன் பக்கம் தலைப்பு பக்கத்தை விட்டுவிட்டு, இடபுறம் அமைதியாய் இருக்கும் வெள்ளைத்தாளில் மிகுந்த கவனத்துடன் அழகாய் கையெழுத்திட்டார் – புத்தர் முன் மலர் வைத்தது போல. புன்னகையோடு தங்கப்புத்தகம் கைகளில் கிடைக்கப்பெற்றேன். நிலை, செயல், பொருள்.
நன்றி
பாபநாச கார்த்திக்