நம்மை நாம் ஆளமுடியாமலாவது…

ஓர் இளம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இருந்து

இந்தக் கடிதத்தைப்போன்ற கடிதங்களை அவ்வப்போது பெறுகிறேன். திரும்பத் திரும்ப ஏறத்தாழ ஒரேவகையான வரிகளை அவர்களுக்குப் பதிலாக அனுப்பவும் செய்கிறேன். இந்தப்பிரச்சினை பரவலாக இருப்பதனால்தான் இவ்வகை கடிதங்கள் அடிக்கடி வருகின்றன. இப்பிரச்சினை மிக அடிப்படையானது என்பதனால்  மிக எளிமையான பதில்தான் இதற்கு. அதை திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியுள்ளது.

உங்கள் கடிதம் வழியாகத் தெரிவது இதுதான். இரண்டுவகையான போதைகளுக்கு நீங்கள் அடிமை. ஒன்று குடி. இன்னொன்று, கவனம் நிலைக்காமல் மேலோட்டமாக ஓடிச்செல்லும் வாழ்க்கை. குடிதான் முதன்மைப்பிரச்சினை என்று தோன்றும். ஆனால் மேலோட்டமான வாழ்க்கையினால்தான் குடிக்குச் சென்றுள்ளீர்கள். 

மிக இளம் வயதிலேயே வசதியான வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்துள்ளீர்கள். நீங்கள் கற்றது ஒரு சாதாரண தொழிற்கல்வி. அது ஒருவகைபயிற்சிதானே ஒழியகல்விஅல்ல. பயிற்சியில் பலசமயம் உழைப்பு மட்டும்தான் உள்ளது. கண்டடையும் இன்பம், கற்றுக்கொள்ளும் நிறைவு, ஆளுமை வளர்ச்சியின் மலர்ச்சி இல்லை. ஆனால் கல்வி முடிந்துவிட்டது என்னும் உளநிலையை அடைந்தீர்கள். ஆகவே கல்வியின் இன்பம் என்பதையே அறியாதவராக இருந்தீர்கள்.

உங்கள் வேலை என்பது மேலோட்டமான பார்வைக்கு உயர்குடி வாழ்க்கையின் பாவனை கொண்டது. ஆனால் எதையும் உருவாக்கும் மகிழ்ச்சியை அளிக்காதது. தொடர்ச்சியான, சலிப்பூட்டும் உழைப்பு கொண்டது. ஆகவே கேளிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினீர்கள். மேலோட்டமான கொண்டாட்ட வாழ்க்கை. விளைவாகக் குடி வந்து சேர்ந்தது.

ஒரு கட்டத்தில் நீங்கள் உங்கள் உடல்நிலை மோசமாவதை உணர்ந்தீர்கள். விடுபட விழைகிறீர்கள். ஆனால் எந்தப்போதையும் விடுவது எளிதல்ல. இந்த பலவீனத்தை மறைக்கவே உங்கள் மிகநீண்ட கடிதம். குடிப்பழக்கத்தை நியாயப்படுத்த குடும்பம், சமூகம், அரசியல், மதம் என எல்லா காரணங்களையும் கண்டுபிடித்து அடுக்குகிறீர்கள். 

இதெல்லாமே பாவனைகள்தான். நீங்கள் இரண்டு பழக்கங்களுக்கு அடிமை. குடியை, தீவிரம் அற்ற மேலோட்டமான வாழ்க்கையை நீங்கள்தான் உதறவேண்டும். ஆன்மிகம், அறிவியக்கம் எல்லாமே தன் மூளைமேல் தனக்கென கட்டுப்பாடு கொண்ட ஒருவருக்குரியவை. நீங்கள் ஸ்டீரிங், பிரேக் இல்லாத ஒரு காரில் பயணம் செய்பவர். சாலையைப்பற்றிய விவாதம் செய்யும் தகுதி ஏதும் உங்களிடமில்லை.

என் இதுவரையிலான அனுபவத்தில் போதைக்குள் செல்பவர்களில் மிகமிகமிகச் சிலரே மீள முடியும். மீள்பவர்கூட பலசமயம் உடலும் உள்ளமும் குலைந்தவராகவே பலசமயம நீடிக்க முடியும். அவர்களில் உண்மையான சாதனைகளை செய்பவர்கள் மிக அரிதானவர்கள்.

சபைநாகரீகம், கெத்து என்றெல்லாம் சொல்லி குடி முதலியவற்றுக்குள் போகாமலிருப்பதே நன்று. குடி போன்றவை இயல்பான அறிவுத்திறனும் கற்பனைத்திறனும் குறைவான சராசரிகளுக்குரியவை. அவர்கள் குடிக்காமலிருந்தும் பெரிதாக எதுவும் சாதிக்கப்போவதில்லை.

அறிவும் கற்பனையும் கொண்ட ஒருவருக்கு குடியில் இருக்கும் மகிழ்ச்சி என்பது மிக அற்பமானது. உண்மையான பெரிய மகிழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் அவர் அறிந்திருப்பார். தன் மூளைமேல் அவர் எந்த மண்ணையும் அள்ளிப்போட்டுக்கொள்ள மாட்டார். அதை மேலும் அனல்கொள்ளச் செய்யும் வழிகளையே நாடுவார்.

எப்படியோ போதைக்கு அடிமையானவர்கள் அவர்களே தங்களை அறுத்துக்கொண்டு வெளிவந்தால்தான் உண்டு. அவர்கள் தங்கள்மேல் கட்டுப்பாடு கொண்டவர்களாக ஆனபின்னரே அவர்களிடம் ஏதாவது பேசமுடியும்.

ஒரு போதையடிமை அதற்குரிய நவீன மருத்துவ உதவியையே நாடவேண்டும். அது ஒரு நோய். அவர் தன்னை நோயாளி என உணர்ந்து முறைப்படி குணப்படுத்திக்கொள்ள வேண்டும். குணமான பிறகு மேலே யோசிக்கலாம். நோயில் இருப்பவர் இலக்கியம், தத்துவம், ஆன்மிகம் என்றெல்லாம் பேசுவது நமக்கு நேர விரயம், அவருக்கு நோயைப் பெருக்குவது. ஒருவரால் தான் கற்பவை, ஏற்றுக்கொண்டவை எவற்றையும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியாது என்றால், அவருக்கு தன் மேல் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றால், அவரிடம் விவாதித்து ஒன்றை கற்பித்து ஏற்றுக்கொள்ள வைப்பது போல வீண் உழைப்பு வேறு உண்டா என்ன?

நான் குடி உட்பட எதற்காவது அடிமையானவர்களிடம் எதையும் பேச விரும்புவதில்லை. அவர்களை மீட்பதற்கு எதையும் செய்வதில்லை. எனக்கு அவர்கள் மேல் ஒவ்வாமையோ வெறுப்போ இல்லை, மிகச் சாமானியர் என்னும் எண்ணம் மட்டுமே உண்டு. அதன் விளைவான மெல்லிய அனுதாபமும் விலக்கமும் உண்டு. எப்படியோ வாழ்வை வாழ்ந்து தீர விதிக்கப்பட்ட சிறிய மனிதர்கள் அவர்கள்.

குடி அல்லது அதைப்போன்ற அடிமைகளிடம் விவாதிப்பதனால் எந்தப்பயனும் இல்லை, முழுமையாகவே நேர வீணடிப்புதான். அவர்கள் தங்கள் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தவே எல்லா விவாதங்களையும் வளைக்க முயல்வார்கள். நான் தன் மூளைமேல் கடிவாளம் கொண்டவர்களிடம் மட்டுமே பேச விரும்புகிறேன். ஆற்றலும் இளமையும்கொண்ட எத்தனையோ பேர் போதிய வாய்ப்பும் வழிகாட்டலும் இன்றி இருக்கிறார்கள். கவனம் கோரி நிற்கிறார்கள். அவர்களே எதிர்காலத்தை உருவாக்குபவர்கள்.

அப்படியென்றால்  போதையடிமைகள் என்ன செய்வது என்று கேட்கலாம். அவர்களே மீளவேண்டும். இல்லையேல் அழியவேண்டியதுதான். இயற்கையில் எந்த அழிவும் ஒரு பொருட்டே அல்ல. சிதைவுற்றதை அழித்துக்கொண்டுதான் இயற்கை முன்செல்கிறது. இயற்கை மிகக்குரூரமானது. அள்ளி இறைத்து, வீணடித்துக்கொண்டே இருப்பது. பலகோடி மலர்களில் சூலுறுபவை சிலவே. கனியாகி விதையாகி பெருகுபவை மேலும் சிலவே. இயற்கையின் ஆணை ஒவ்வொரு உயிருக்கும் ஒன்றே, ‘போராடுக, நிலைகொள்க, இயலாதெனின் அழிக!’.

முந்தைய கட்டுரைஉளக்குவிப்பின் நாட்கள்
அடுத்த கட்டுரைஇஸ்லாம், சூஃபி மரபு- வகுப்புகள்