அன்புள்ள ஜெ
உங்கள் முழுமையறிவு அமைப்பில் நவீன மருத்துவ முகாம் நிகழ்வது ஆச்சரியமாக உள்ளது. மருத்துவம் போல பலவகையான அறிவுத்துறைகள், தொழில்துறைகள் உள்ளன. அவற்றை அறிமுகம் செய்ய வாய்ப்புண்டா?
ராஜீவ்
அன்புள்ள ராஜீவ்,
மருத்துவம் வெறும் ஓர் அறிவுத்துறை அல்ல. அது நம் வாழ்க்கையுடன் ஒவ்வொரு நாளும் கலந்துள்ளது. நமக்கு மருத்துவம் பற்றி தெரியாததனால் அந்த அறியாமையை போலி அறிவியலைக்கொண்டு நிரப்பிக்கொள்கிறோம். எந்த பிழையான அறிவும் மேலும் பிழையான அறிவை அளிப்பத்தான். ஒருவரின் மருத்துவப் புரிதல் பிழையானது என்றால் அவருடைய தியானம்,யோகம், ஆன்மிகம் சார்ந்த அறிதல்களும் பிழையாக இருக்கவே வாய்ப்பு.
அதேசமயம் ஒரு மெய்யான அறிதல் மேலும் பல அறிவுகளை துலங்கச் செய்யும். நவீன மருத்துவம் என்பது ஒரு மாபெரும் அறிவுத்துறை. அதைப்பற்றிய ஓர் எளிமையான அடிப்படைப் புரிதலே நம்முடைய மெய்யியல் ஞானத்தையே துலங்கவைப்பது. நம் அன்றாட வாழ்க்கையே புதியவகையில் தெளிவடையச் செய்வது
மிகமிக அவசியமான வகுப்பு இது. நாம் துளித்துளியாக அறிய வாய்ப்புள்ளவற்றை ஒரே வகுப்பாக, ஒட்டுமொத்தமாக அறிகிறோம். அது ஒரு பெரிய திறப்பு. மேலும் நவீன இலக்கிய வாசிப்புள்ள ஒரு நிபுணரிடமிருந்து அதை அறிகிறோம். மிகப்பெரிய வாய்ப்பு
ஜெ