அன்புள்ள ஜெ,
வணக்கம், நான் சென்ற பிப்ரவரியில் ஆலயக் கலை வகுப்பிற்கு வந்திருந்தேன் வருவதற்கு முன் ஆயிரம் யோசனைகள், தயக்கங்கள். சென்ற வருடம் இந்த வகுப்புகள் ஆரம்பிக்கும் போதே இதற்கு வர வேண்டும் என்கிற ஆவல் இருந்தது. ஒரு முறை விசாரித்து மின்னஞ்சலும் அனுப்பினேன். உடனடியாகப் பதில் வந்தது. ஆனால் அப்போது வர முடியவில்லை.
பின்னர் இரண்டாம் முறை விசாரித்த போது மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. அந்தியூர் மணியை அழைத்தேன். அவர் மீண்டும் மின்னஞ்சல் அனுப்புங்கள் என்றார். நான் உங்கள் ஐடிக்கும் சேர்த்து விவரங்கள் வேண்டி மெயில் அனுப்பினேன். மேலும் சென்னையிலிருந்து அந்தியூருக்கு வந்து திரும்புவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தேன்.
‘We can’t entertain these kind of enquiries. People have these questions never attend anything. They simply waste our time. Please stay out’ என உங்களிடமிருந்து பதில் வந்தது.
சத்தியமாக அப்படியொரு காட்டமான பதிலை எதிர்பார்க்கவில்லை. ‘ஸ்டே அவுட்’ எனும் வார்த்தை திரும்பத் திரும்ப என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்போதுதான் ‘தயக்கமெனும் நோய்’ தளத்தில் வெளிவந்து இருந்தது.
நான் இல்லாமல் குழந்தைகள் இருக்காது, தெரியாத ஊருக்குத் தெரியாத நபர்களுடன் போனால் கணவர் திட்டுவார், அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காது இவையெல்லாம் தான் என் முன்னால் இருந்த புறத் தடைகள். ஆனால் நீங்கள் சொல்வது போல என்னுடைய தயக்கமும் சோம்பலும் அதைவிடப் பெரிய தடையாக இருக்கிறதோ எனும் கேள்வி ஆழமாக எழுந்தது.
முதல் வேலையாக வகுப்பில் சேர்வதற்குப் பணம் கட்டி ஸ்கிரீன் ஷாட்டை மெயில் அனுப்பினேன். அடுத்து அலுவலகத்தில் இரண்டு நாள் உறவினர் திருமணம் என்று சொல்லி விடுப்பிற்கு விண்ணப்பித்தேன்.
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அம்மாவிற்கு டிக்கெட் போட்டேன். பிறகு கணவரிடம் பேசினேன். ‘தெரியாத ஊர், தெரியாத மனிதர்கள்’ என்றவரிடம், ‘வேணா நீங்கத் துணைக்கு வாங்க, பிள்ளைங்களைப் பார்த்துக்கதான் அம்மா வராங்களே’ என்றேன். ‘எனக்கு லீவெல்லாம் கிடைக்காது’ என நழுவிக் கொண்டார்.
துணிந்து ஈரோட்டிற்கு டிக்கெட் போட்டு விட்டேன். அந்தியூர் மணியிடம் பேசினேன். ‘வரவங்க எல்லாரையும் சேர்த்து ஒரு வாட்ஸப் க்ரூப் ஃபார்ம் பண்ணுவோம், சென்னையிலேர்ந்து வரவங்க இருப்பாங்க. அவங்களோட சேர்ந்து பிளான் பண்ணிக்குங்க’ என்றார். அதுபோலவே வாட்ஸப் குழுவில் ஈரோட்டிலிருந்து போய் வர வேன் ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் நாலைந்து பெண்களும் இருந்ததால் நிம்மதியானது.
அவ்வளவுதான்… அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த அழகிய கனவொன்று சட்டென மடியில் வந்து விழுந்தது போல் இருந்தது. ஆனால் கிளம்பும் நேரம் வரையில் எதுவும் உறுதி இல்லை. திடீரென வீட்டில் யாருக்காவது உடம்புக்கு முடியாமல் போய்விட்டால், திடீரென அலுவலகத்தில் பெரும் பிரச்சனை வந்து விட்டால் நகர முடியாது.
மனம் கற்பனை செய்ததைப் போன்று அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அம்மா உட்பட எல்லோரும் தினம் ஒருமுறை ‘குடும்பத்தை விட்டுட்டு, இது ரொம்ப முக்கியமா? இதுனால பைசா புரோஜனம் உண்டா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் தினமும் ‘தயக்கமெனும் நோயையும் உங்கள் மெயிலையும் திரும்பத் திரும்பத் திரும்பப் படித்து மனத்தை உறுதிப் படுத்திக் கொண்டிருந்தேன்.
ஒரு வழியாகக் கிளம்பிவிட்டேன். இரவும் ரயிலில் தனியே பயணம். நான் பயந்தது போல எந்தப் பேயும் வந்து என்னைக் கடித்துத் தின்று விடவில்லை. பிறகு இரண்டரை மணி நேர வேன் பயணம்.
மொபைல் சிக்னல் கிடைக்காதது அங்கு பெரிய வரம். எந்த கவனச் சிதறலும் இல்லை. யாருக்கும் நம் இருப்பு குறித்த அறிவிப்பைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை
அங்கு வந்த ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு கதை இருந்தது, ஒரு கனவு இருந்தது, ஒரு நோக்கம் இருந்தது. ‘நாம் மட்டும் வெந்ததைத் தின்று வெட்டிக் கதைப் பேசி எத்தனை சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?’ என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
இரண்டரை நாளும் உச்சி வெயிலில் உள்ளங்கையில் ஏந்திய பனிக்கட்டி போலக் கரைந்து போனது. ‘ஒரு கிளாஸுக்கு எத்தனை பேரு? ஒரு ரூம்ல எத்தனை பேரு? என்ன சாப்பாடு? வெந்நீ கிடைச்சுதா?’ போன்ற கேள்விகளை எதிர் கொண்டு அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பியபோது அழுகையாக வந்தது.
‘தயக்கத்தை உடைத்து வந்து விட்டேன் பார்த்தீர்களா?’ என உங்களுக்கு அப்போதே எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு சாதனையா என்ன? ஏதாவது ஒன்றை உருப்படியாகச் செய்யாவிட்டால் அங்கு வந்து பயின்றதற்கு அர்த்தமே இல்லை.
நான் கோயில்களைக் குறித்து இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். அதைக் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் பயிற்சிக்கு வந்தேன். ஆனால் நான் தல வரலாறு என கூகுளில் தேடி எழுதியதெல்லாம் ‘புனையப்பட்ட கதைகள்’ என்றும் உண்மையான வரலாறு உடைந்து நிற்கும் சிற்பங்களிலும், தூண்களிலும் மறைந்திருக்கிறது என்பதையும் ஜெயக்குமார் புரிய வைத்தார். அதை எழுதுவதற்கு இமாலயப் படிப்பும் பயணங்களும் தேவை. மேலோட்டமாக எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
எனவே ஆலயங்களைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விட்டேன். முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது என் ஆசிரியர் ஓர் அபுனைவு புத்தகத்திற்கான யோசனையைச் சொன்னார். இருபத்தைந்தாயிரம் வார்த்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும், இரண்டரை மாதங்கள் கெடு என்றார். ‘எழுதுகிறேன்’ என உடனே ஒப்புக் கொண்டு விட்டேன்.
‘வீட்டு வேலையெல்லாம் யாரு பார்க்கறது? இதையெல்லாம் ஒத்துக்காத’ என்றனர் கணவரும் மாமியாரும். ‘காலைல நாலு மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம், ராத்திரி ஒரு மணி நேரம் எழுதறேன். இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது. கொஞ்சம் சப்போர்ட் பண்ணினா போதும்’ என்றேன்.
தேவையான புத்தகங்களை கிண்டிலில் தரவிறக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். ஆசிரியரிடமும், எங்கள் குழுவில் ஏற்கனவே புத்தகம் எழுதியிருந்த சிலரிடமும் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டேன்.
ரயிலில் பயணிக்கும் நேரங்களில், அலுவலகத்தில் இடைவெளி கிடைக்கும்போது படித்துக் கொள்வது, வீட்டில் வந்து எழுதுவது என இரண்டு நாட்கள் போயிருக்கும். நாலு மணிக்கு எழுந்து கொள்வதில் சிரமம் இல்லை. ஆனால் குளித்துவிட்டு ஆறு மணிக்குச் சமையலறைக்குள் புகும்போது கைகள் நடுங்கின. மதிய நேரத்தில் அலுவலகத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றியது. மாலை, பிள்ளைகளுடன் செலவழிக்கும் நேரம் குறைந்து போனது.
சமாளித்து ஒரு வாரம் ஓட்டினேன். பின்னர் அலாரம் அடிக்கும் முன்பே மனம் எழுப்பி விட்டுவிடும். ஒருவாறு உடலும் இந்த அன்றாடத்துக்குப் பழகிக் கொண்டு வந்த போது, மாமியாருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த நேரம் பார்த்து வீட்டில் விருந்தினர்கள் வந்திருந்தனர்.
‘பெருஞ்செய்கள் செய்யும் போது அப்படித்தான் தடைகள் வரும். உங்க உறுதியை அசைச்சுப் பார்க்கும். தொண்ணூறு சதவீதம் பேர் அதைக் கண்டு முடங்கிப் போறவங்கதான். நீங்க எவ்வளவு தூரம் அதைப் பொறுத்துகிட்டு தொடர்ந்து செய்யறீங்கங்கறதுலதான் விஷயம் இருக்கு.’ என்றார் நண்பர். அவரும் உங்கள் வாசகர்தான், தத்துவ வகுப்புகளுக்கு வந்திருக்கிறார். இப்படி இந்த புத்தகம் எழுதும் போது இரண்டு பேர் கிடைத்தார்கள். தடை வரும்போது, குடும்பத்தில், அலுவலகத்தில் பிரச்சனை வரும்போதெல்லாம் அவர்களிடம் தான் கொட்டுவேன்.
எல்லா நாட்களிலும் காலையில் எழுந்து அரை மணி நேரமாவது விடாப்பிடியாக எழுதிக் கொண்டிருந்தேன். ரயிலில் படித்தேன். பின் மாமனார் படுத்துக் கொண்டார். மகளுக்கும் ஜுரம் வந்தது. உதவிக்கு அம்மா வந்தார். கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. எழுத்தும் படிப்பும் ஒரு அன்றாடச் செய்கையாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு மாதம், பதினைந்தாயிரம் வார்த்தைகள் எழுதிய பிறகு ஒரு பெரும் மனத்தடை வந்தது. குறிப்புகளுக்காக நான் படித்து வந்த புத்தகங்கள் அத்தோடு முடிந்து விட்டன. நிகழ்காலத்தில் இணையத்தில் வரும் கட்டுரைகளை வைத்துதான் தொடர வேண்டும் எனும் நிலை வந்த போது தடுமாறிப் போய் விட்டேன். மேலே எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை.
‘புதுசா புக் எழுதற எல்லாருக்கும் இப்படியொரு பிளாக் வரத்தான் செய்யும். முடியாதுன்னு விட்டாச்சுன்னா அப்பறம் அப்டியே நின்னு போயிடும். எழுதவே முடியாது’ என்றனர் நண்பர்கள். ‘நிறையா படிங்க… ரெண்டு நாள் பிரேக் எடுத்துட்டு எழுதுங்க’ என்றார் ஆசிரியர்.
எழுதியதைப் படித்துப் பார்த்தால் சிறுபிள்ளைத் தனமாகத் தெரிந்தது. ‘அய்யய்யோ… எல்லாம் வீணா? முதல்லேர்ந்து மாத்தி எழுதனுமா? நம்மளால முடியுமா?’ என ஆயாசமாக வந்தது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு இமயமலைப் பக்கம் ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது. எனது குடும்பமும், முடியாமல் நான் எழுதுவதை நிறுத்திவிடும் தருணத்தைத் தான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
எழுதியவற்றை விட்டுவிட்டு, புதிதாகப் படித்தவற்றை எழுத ஆரம்பித்தேன். எழுத எழுதப் பிடி கிடைத்தது. முன்னால் எழுதியவற்றில் எங்குச் சறுக்கி இருக்கிறோம் என்பது புரிந்தது. இரண்டரை மாதங்களில் புத்தகம் ஒரு முழு வடிவத்திற்கு வந்தது.
எங்கள் குழுவிலேயே ஒருவர் தகவல்களைச் சரி பார்த்துக் கொடுத்தார். நண்பர்களில் ஒருவர் திருத்தம் செய்தார். திருத்திய வடிவத்தைப் பார்த்த போதுதான் எங்கெங்கு தவறு செய்திருக்கிறோம் என்பது புரிந்தது.
‘இப்போ எல்லாம் புரிஞ்ச மாதிரிதான் தோணும். அடுத்ததா ஒண்ணு எழுதும்போது திரும்ப முட்டிகிட்டுதான் நிப்போம். நிறையா எழுதிப் பழகனும்’ என்றார் நண்பர். அந்த இரண்டு நண்பர்களோடு மட்டும் தொடர்ந்து உரையாடவில்லை என்றால் என்னால் இதை எழுதி முடித்திருக்கவே முடியாது.
ஒரு நிறைவு வந்திருக்கிறது. கூடவே அடுத்து பெரிதாக ஒன்றும் தொடங்கவில்லையே எனும் பதற்றமும் இருக்கிறது. மீண்டும் இதுபோல ஒரு செயலைத் தொடங்கிச் செய்ய முடியுமா? என்று மலைப்பாகவும் இருக்கிறது.
இதற்கான தொடக்கப் புள்ளி என்றால் கொரானா காலத்தில், தற்செயலாகக் கண்டடைந்த உங்கள் இணையதளத்தைத் தான் சொல்ல வேண்டும். அதன் வழியாக நான் தேடிப்போன எழுத்துப் பயிற்சி வகுப்பு. பின்னர் கலந்து கொண்ட ஆலையக்கலைப் பயிற்சி. அதற்கு முந்தைய உங்கள் திட்டு மெயில், சாக்கு சொல்லிக் கொண்டிருக்கும் மனத்தை நோகடிக்கச் செய்யும் உங்கள் எழுத்துக்கள் என எல்லாமே அந்த முனைப்புக்குப் பாதையமைத்துக் கொடுத்தன.
புத்தகக் கண்காட்சிக்குள் அச்சிட்டு புத்தகம் வந்துவிடும் என்று நம்புகிறேன். என் மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு, சுற்றி இருப்பவர்களால் காயப்பட்டு செயலற்று நிற்கும் போதெல்லாம் களிம்பு பூசிவிடும் மானசீகக் குருவான உங்களிடம், நீங்கள் பொருட்படுத்தும் ஒரு செயலைச் செய்து முடித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி. தொடர்ந்து செயலூக்கத்துடன் இயங்க ஆசீர்வதியுங்கள்.
அன்புடன்
அ
அன்புள்ள அ,
என்னுடைய எரிச்சல் என்பது ஒரு தனிநபரிடமல்ல. நான் எதிர்கொண்டுகொண்டிருப்பது ஒரு சமூகத்தை, அதன் அடிப்படையான சில எண்ண ஓட்டங்களை. ஒன்று தயக்கம். இன்னொன்று அறிவார்ந்த எதன்மேலும் மதிப்பின்மை. உங்கள் வீட்டில் கேட்கிறார்கள் அல்லவா, இதனால் என்ன பயன் என்று. மகிழ்ச்சி, சாதனையுணர்வு, வாழ்க்கைக்கு பொருள் உருவாகும் நிறைவு- இதெல்லாம் பயனே அல்ல என்றுதானே நினைக்கிறார்கள். அத்தகையோர்தான் பெரும்பாலும் எனக்கும் எழுதுகிறார்கள்.
சென்றமுறை பேரா.முரளி அவர்களின் தத்துவ வகுப்பு பற்றிய செய்தியை அவர் தன் காணொளி வழியாக அறிவித்தார். ஆர்வத்துடன் விசாரித்தவர்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள். எவருமே கலந்துகொள்ளவில்லை- காரணம் அவர்களில் பலர் சொன்னது, “கட்டணம் உண்டா? இலவசம் கிடையாதா”
உண்மையில் இங்கே கல்விக்கு கட்டணமே இல்லை. உணவு, தங்குமிடத்துக்கே கட்டணம். அதுவும் மிகக்குறைவாக. “தெரியாமல் கேட்கிறேன், உங்களுக்கு நான் ஏன் இலவசமாகச் சோறுபோடவேண்டும்?” என்று ஒருவரிடம் கேட்டேன். “நாங்க வரோம்ல?” என்றார்.
தயக்கமும் அதேபோலத்தான். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். வருகிறேன் என ஒப்புக்கொண்டுவிட்டு வராமலிருந்துவிடுபவர்களால் தமிழகத்தில் ஏராளமான நிகழ்வுகள் இழப்பு ஏற்பட்டு முடங்கிவிட்டிருக்கின்றன. பணம் கட்டாதவரை நாங்கள் வருகை உறுதி செய்வதில்லை. ஆனால் அதன்பின்னரும்கூட வராமலிருந்துவிட்டு பணத்தை திரும்பக் கேட்கிறார்கள்.அந்தப் பணப்பரிமாற்றத்துக்கான கட்டண இழப்பும் சேர்ந்துகொள்கிறது.
ஆர்வம் அற்றவர்களை ஈவிரக்கமில்லாமல் தவிர்த்தாலொழிய இந்த இயக்கத்தை முன்னெடுக்க முடியாது என்று எண்ணியே அக்கடுமை. இவர்களின் தயக்கத்தால் ஆர்வமுள்ளவர்களின் வாய்ப்பும் இல்லாமலாகிவிடலாகாது.
உங்கள் தயக்கத்தைக் கடந்து நீங்கள் செய்து காட்டியிருப்பது பெரிய விஷயம். முதல்நூல் எவருக்கும் முழுமையாக அமையாது. அந்நூலில் நாம் உணரும் குறைகளே இரண்டாம் நூலுக்கான அடிப்படை. அப்படிப்பார்த்தால் கடைசிவரை அந்த நிறைவு உருவாகாது. அதுவே செயலை ஊக்குவிக்கிறது.
நீங்கள் எழுதியிருப்பதுபோல சில நூறு நூல்கள் நமக்குத் தேவையாகின்றன. நீங்கள் ஆற்றியிருப்பது பெரும்பணி. வாழ்த்துக்கள். உங்களை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.
ஜெ