அன்புள்ள ஜெ,
அஜிதனின் மேலைத்தத்துவ வகுப்பு குறித்த செய்தியை வாசித்தேன். பங்குகொண்டவர்களும் மிக அபாரமான வகுப்பாக இருந்தது என்றார்கள். செறிவானதாகவும், ஆனால் மிகச்சுவாரசியமானதாகவும் இருந்தது என்றனர்.மேலைத் தத்துவம் பற்றிய முழுமையான வகுப்பு என்றார்கள். ஆனால் தத்துவம் கற்பிப்பதற்கு ஒரு நீண்ட அனுபவமும் வயதும் தேவை என்ற எண்ணமும் எனக்கு உள்ளது. அதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ராகவ்
அன்புள்ள ராகவ்,
தத்துவம் எனக்குப் பிரியமான, நான் 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் துறை. மேலைத்தத்துவம் சார்ந்த ஆழமான அறிமுகம் உண்டு. இந்திய தத்துவம் சார்ந்த முறையான பயிற்சியும் தெளிவும் உண்டு. அந்த வகையில் தத்துவத்தை கற்றல், கற்பித்தல் சார்ந்து சில புரிதல்கள் எனக்குண்டு. அவற்றை நித்ய சைதன்ய யதி சொல்லி அறிந்தேன். பின்னர் அச்சொற்களை நானே புரிந்துகொண்டேன்.
தத்துவம் மூன்று வகையில் அதைக் கற்பவர்களை அறியாமையில் ஆழ்த்தும் மாயம் கொண்டது. அதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்று, தத்துவம் விரிவான ஒரு பாடமாக நமக்குள் நுழைந்து நம் மூளையை முழுமையாக ஆட்கொண்டுவிடும். கருத்துக்கள், ஆளுமைகள், காலகட்டங்கள் என நாம் தகவல்களின் தொகுப்பாக ஆகிவிடுவோம். தகவல்களை மட்டுமே அறிவோம், அவற்றை மட்டுமே தேடுவோம், அவற்றையே பேசிக்கொண்டிருப்போம்.
இரண்டு, தத்துவம் உண்மையின் நுணுக்கமான உட்சிக்கல்களைப் பற்றி பேசுவது. அதைப் பயில ஆரம்பிப்பவர் முதிர்ச்சியற்றவர் என்றால் உடனடியாக ஓர் ஆணவத்தை அடையக்கூடும். அவர் எல்லா சிந்தனைகளையும் சிடுக்காக்கிக் கொள்வார். சிடுக்காக இருப்பதே சிந்தனை என்னும் மாயத்தை அடைவார். தன்னை சிக்கலாகச் சிந்திப்பவர் என்றும் ஆகவே மெய்யான சிந்தனையாளர் என்றும் கருதிக்கொள்வார்.
மூன்று, தத்துவம் தர்க்கத்தை வலுப்படுத்தும். அந்த தர்க்கத்தைக்கொண்டு தன் தரப்பை மிக ஆணித்தரமாக நிலைநாட்டிக்கொள்ள முடியும். விளைவாக தத்துவம் பயில்பவர் மிகமிக உறுதியான ஒற்றை நிலைபாடுகளும், ஒற்றைப் பார்வையும் கொண்டு பிற அனைத்தையும் நிராகரிப்பவராக ஆகக்கூடும்.
இந்த மூன்று நோய்க்கூறுகளில் முதல் இரண்டையும் கொண்ட தத்துவ மாணவர் தெளிவாகச் சிந்திக்கவோ பேசவோ முடியாதவராக ஆவார். மூன்றாவது நோய்க்கூறு கொண்டவர் மூர்க்கமான வாதகதிகளில் திளைப்பார். மூன்று நோய்க்கூறுகளுமே ஒருவரை இளக்காரம் கொண்டவராக, கசப்பு மண்டியவராக ஆக்கிவிடும்.
அந்த இயல்புகள் கொண்ட ஒருவரின் கல்வி மேலும் அறியாமையையே வளர்க்கும். தத்துவம் பயின்றவர்களில் பலர் ஒன்று கற்று ஒன்பதைச் சொல்பவர்கள். தங்களை மிகையாக முன்வைப்பவர்கள். என்னைப் போன்ற ஒருவர் தொடக்கத்திலேயே அவர்களை அடையாளம் காணமுடியும்
ஆகவே என் அளவுகோல்கள் இவை.
அ. தத்துவத்தை அடிப்படை வினாக்கள், அவற்றுக்கான தேடல்கள், கண்டடைதல்க என்னும் கோணத்தில் அணுகுபவரே தத்துவத்தை மெய்யாகக் கற்றவர். அவருக்கு தனக்கான சொந்த தத்துவத்தேடல் இருக்கவேண்டும். அதையொட்டி அவர் விரிவாக வாசித்திருக்கவேண்டும். அதே சமயம் ஒருவர் தான் கற்றவற்றைப் பற்றி சற்றே மிகைப்படுத்திக்கொண்டாலும் அவர் தத்துவம் கற்பிக்கத்தக்கவர் அல்ல என்று அடையாளம் காணப்படவேண்டும்.
இ. எல்லா நிலையிலும் தெளிவே மெய்யான தத்துவக் கல்வியின் அடையாளம். கற்றவற்றில் தெளிவும், மேற்கொண்டு முன்னகரும் தெளிவின்மையும் என அதைச் சொல்லலாம். நான் சந்தித்த மாபெரும் தத்துவ ஞானிகளிடமெல்லாம் இருந்த பண்பு இது.
உ. மற்றவற்றை பார்க்கும் விழி, மூர்க்கமான நிராகரிப்புகள் இல்லாமலிருக்கும் சமநிலை அவசியம்.
இப்பண்புகள் கொண்டவர்களையே நான் முன்வைக்கிறேன். அவருடைய அகவை முக்கியம் அல்ல. அவருடைய கற்றலின் பின்புலமும் அவர் அடைந்திருக்கும் இடமும்தான் முக்கியமானது. முறையான சீரான கல்வி அவசியம். அவருடைய கல்விநிலையம் என்ன, அவருடைய ஆசிரியர்கள் எவர் என்பது பார்க்கப்படவேண்டும். அவர் கல்வியினூடாக அடைந்த தெளிவும் முக்கியம்.
நான் அஜிதனின் கல்விப்புலம், அவன் அடைந்துள்ள தெளிவு இரண்டின்மீதும் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். அவனிடம் கற்பவர் எவரும் அவன் தகுதியை உணரலாம். எனக்கு என்னைவிட அகவை குறைந்தவர்களிடம் கற்றுக்கொள்ள தயக்கமே இல்லை. சொல்லப்போனால் அதுவே எளிது, மரியாதைகள் ஏதுமில்லாமல் ஒரு சகஜநிலையை உணரமுடியும்.
ஜெ