வணக்கம்,
என் பெயர் விவேக், சென்னையைச் சேர்ந்த 28 வயது ஓவிய கலைஞன் மற்றும் கட்டிடக் கலைஞன்.சமீபத்தில்தான் தமிழ் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன்.எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் யூடியூப் காணொளிகளை புத்தகப் பரிந்துரைக்காக பயன்படுத்தினேன. அப்போதுதான் நான் Unified Wisdom பற்றி அறிந்தேன். குறிப்பாக முதல் நிலை தத்துவ முகாம் மற்றும் ஆலய கலை குறித்து நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
தத்துவம் கற்க இது ஒரு அரிய மற்றும் தவறவிட முடியாத வாய்ப்பு என்பதை ஜெயமோகனின் காணொளிகளில் இருந்து என்னால் உணர முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக நான் இதைப் பற்றி ஓரிரு ஆண்டுகள் தாமதமாகத் தெரிந்து கொள்கிறேன் என்று நினைக்கிறேன்.
இணையதளத்தில் வரவிருக்கும் அமர்வுகள் பற்றிய எந்த விவரங்களையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.அடுத்த ஆண்டுக்கான அட்டவணை பற்றிய எந்த விவரங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் எவ்வாறு இணைவது என்பது பற்றிய விவரங்களும் உதவியாக இருக்கும்.
நான் படித்த உங்களின் முதல் புத்தகம் “Abyss” ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு. அடுத்து தமிழ் புத்தகங்களை தமிழில் படிக்க முடிவு செய்தேன். இன்றுதான் அராம் படித்து முடித்தேன். என் தாய்மொழி தமிழாக இருந்தாலும் நான் என் வாழ்நாளில் தமிழில் எதையும் எழுதியதில்லை. அறம் படிக்கும் போது தமிழில் சிந்தித்து கற்பனை செய்து எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். நான் கிரியேட்டிவ் ரைட்டிங் சொல்லவில்லை. இந்த கடிதத்தை எழுதுவது போன்ற சாதாரண எழுத்து கூட.இது என் முதல் முயற்சி. தவறுகள் இருந்தால் ஏன் என்று உங்களுக்கே புரியும்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
அன்புடன்
விவேக் கண்ணன்
அன்புள்ள விவேக்,
தமிழில் வாசிப்பதும், காலப்போக்கில் எழுதுவதும் ஒன்றும் அரிய விஷயம் அல்ல. வாசிப்பை தொடர்வதும், வாசிப்புச்சூழலில் இருப்பதுமே முக்கியமானது. தமிழில் ஒரு கடிதம் எழுத முடியாமல் ஆங்கிலத்தில் எழுதி அறிமுகமானவர்கள் இப்போது சைவ, வைணவ மரபிலக்கிய வகுப்புகளில் செய்யுட்களைப் படிக்கிறார்கள். தொடர்ச்சியான முயற்சியே முக்கியம். நம் சூழலில் அது இயல்பாக நிகழ்வதில்லை. ஏனென்றால் திசைதிருப்பங்கள் அதிகம். எதிர்மறை விசைகளும் உண்டு. உரிய சூழலையும் சுற்றத்தையும் அடைந்தால் மிக எளிதாக நாம் நம்முள் இருந்து நமக்கான ஆற்றல்களை வெளியே எடுக்கமுடியும். இவ்வகுப்புகள் அதன்பொருட்டே.
எங்கள் நிகழ்வுகள் அதிகபட்சம் இரண்டு மாத இடைவெளியில் அறிவிக்கப்படுகின்றன. அவை www.jeyamohan.in மற்றும் www.unifiedwisdom.guru ஆகிய இணையதளங்களில் அறிவிப்பாக எப்பொதுமே மேலே இருந்துகொண்டிருக்கும். நீங்கள் விரும்பும் நிகழ்வைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் எழுதி வகுப்புகளில் சேர்ந்துகொள்ளலாம்.
ஜெ