அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழாவுக்கு வரவேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் இருக்கிறேன். ஆனால் நான் கிளம்ப மாட்டேன் என்று எனக்கே தெரிகிறது. ஏனென்றால் எனக்கு கூட்டம் ஒவ்வாமையை அளிக்கிறது. கூட்டத்தில் நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன். என்னால் எவரிடமும் பேசவோ, ஒட்டவோ முடிவதில்லை. கூட்டங்களில் நான் கடைசியில் சோர்வைத்தான் அடைகிறேன். இது என்னுடைய மனநிலை என்று நினைக்கிறேன். கூட்டங்கள் ஏன் தேவையானவை என்றுகூட தோன்றுகிறது.
அ
அன்புள்ள அ
உங்கள் பிரச்சினை என்ன என்பதை நீங்கள் வகுத்துக்கொள்ளலாம். உங்களை நீங்கள் அகவயமானவர் (இன்டிரோவெர்ட்) என்று அடையாளப்படுத்திக்கொண்டால் இந்த இயல்புகள் எல்லாம் அந்த அடையாளத்தின் இயல்புகளாக ஆகிவிடுகின்றன. அப்படியே அதை ஒரு மனப்பழக்கமாகக் கொண்டுசெல்லலாம்.
ஆனால் அப்படி அகமவயமாக இருப்பது எதனால் என்று யோசித்தால் சில பதில்களை நீங்களே கண்டடையமுடியும்.
அகவயமாக இருப்பது, கூட்டங்களை தவிர்ப்பது, மிகக்குறைவானவர்களுடன் மட்டுமே இருக்க விரும்பது, தனிமையை நாடுவது போன்றவை ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே ஏற்கத்தக்கது. நீங்கள் படைப்பாளியாகவோ சிந்தனையாளராகவோ இருந்தால். உங்கள் அகத்தே அப்படைப்பின் அல்லது சிந்தனையின் உருவம் திரண்டுகொண்டிருக்கும் என்றால். மற்ற பொழுதுகளில் அகவயமாக இருப்பதென்பது உலகை மறுப்பதும், இன்பங்களையும் விடுதலையையும் நிராகரிப்பதும்தான்.
படைப்பு மனநிலை, சிந்தனை இல்லாத நிலையில் ஏன் புறவுலகைத் தவிர்க்கிறோம் என்று எண்ணிப்பாருங்கள். நாம் நம்மைப்பற்றி பெரியதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். நாம் உண்மையில் எவ்வளவோ அதைவிடக் கூடுதலாக. நாம் நம்மைப்பற்றி கொண்டிருக்கும் இடத்தை புறவுலகம் அளிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம். அந்த இடம் அளிக்கப்படுமா என பதற்றம் கொள்கிறோம். அளிக்கப்படவில்லை என்றால் சோர்வு அடைகிறோம்.
ஆகவேதான் கூட்டம் என்றாலே முன்னரே சுருங்கிக்கொண்டு அதைத் தவிர்க்கிறோம். பிறரை எதிர்கொள்கையில் அவர் நம்மை எப்படி நடத்துகிறார் என்பதை மதிப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். பிறர் நம்மை ‘மதிக்கவில்லை’ என நினைக்கிறோம். (அதாவது நாம் நம்மைப்பற்றி நினைப்பதுபோல அவர் நம்மைப்பற்றி நினைக்கவில்லை) ஆகவே உளச்சோர்வு அடைகிறோம்.
இது எந்தவகையிலும் ஆரோக்கியமான மனநிலை அல்ல. இந்த உளநிலை கொண்டவர்கள் எங்கும் எதையும் சாதிப்பதும் இல்லை. இப்படியே வாழ்ந்து முடிவார்கள். இதை உடைத்தே ஆகவேண்டும். இதிலிருந்து வெளிவந்தே ஆகவேண்டும்.
நாம் இங்கே விரிந்துள்ள வாழ்க்கையின் ஒரு துளி மட்டுமே. நாம் நமக்கு அளித்துக்கொள்ளும் ‘இடம்’ எல்லாம் நம்முடைய பிரமைகள். அதை வெளியுலகம் அளிக்கவேண்டியதில்லை. வெளியுலகிலுள்ள ஒவ்வொருவரும் அவ்வாறு சிறு துளிகள் மட்டுமே. அந்த துளிகள் இணைந்த பெருக்குதான் கூட்டம். அல்லது சமூகம். அங்கே நாம் நம்மை இணைத்துக்கொள்கையில் நம்மிடம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் தனிமையை கடக்கமுடிகிறது. அது ஒரு கொண்டாட்டம்.
எவரும் கூட்டங்களிலேயே வாழமுடியாது. அதேபோல எவரும் தனிமையிலேயே வாழவும் முடியாது. தனிமையில் நாம் நம்மை குவித்து தீட்டிக்கொள்ளமுடியும். கூட்டங்களில் நாம் நம்மைக் கரைத்து மகிழ முடியும். இரண்டுமே நமக்கு அவசியமானவை.
ஜெ