அன்புள்ள ஜெ,
மொழி பிறிதொன்றிலாத ஒன்றைச் சுட்டுகையில் தெய்வத்தன்மை பெறுகிறது என்பது கெளதம சிரகாரியின் கூற்று. சூரியனை கண்டவுடனே கேள்விகள் இன்றி நம்புவது போல், முதல்–முடிவற்ற அது–இது என்றில்லாத இறையின் இருப்பை உணர்த்தும் சொற்களை கேட்டவுடனேயே கண்டறிந்து கொள்ளலாம். அது நேரடியாக நம் ஆன்மாவைத் தீண்டுகிறது. அதன் ஆசிகள் நம் துயரை அழிக்கிறது.
சென்ற வாரம் நித்யவனத்தில் நிகழ்ந்த விவிலிய அறிமுக வகுப்பில் இறைவாக்கின் வீச்சினை அறிய முடிந்தது. கடவுள் மனிதனிடம் இன்னமும் கருணையோடு இருக்கிறது என்பதற்கான அத்தாட்சிகளுள் ஒன்று விவிலியம். இறைத்தன்மை பொருந்திய அவரது சொற்களை கேட்கையில் நமது ஐயங்கள் அனைத்தும் கலைந்து பேரொழுக்கின் விசையில் மென்மையாக கொண்டு செல்லப்படும் இலைகள் என இருக்கிறோம். கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வியே எவ்வளவு அபத்தமானது என்பதும் தெரிய வரும்.
சிறில் சார் இது விவிலிய அறிமுக வகுப்பு தானே ஒழிய இறையியல் வகுப்பு அல்ல என்று தெளிவாக கூறிவிட்டார். துல்லியமாக காலவரையறை செய்யப்பட்ட பழைய ஏற்பாட்டில் ஆரம்பித்து வகுப்புகள் தொடங்கின. விவிலியம் என்ற சொல்லின் பொருள் நூல்கள் என்பது. பல காலகட்டத்தைச் சேர்ந்த, பல குடிகளின் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட 81 நூல்களின் தொகுப்பே விவிலியம். இயேசு மரித்து சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக பிரதியாக தற்போதுவரை வழக்கில் உள்ளது.
ஜோடர்ன் பீட்டர்சன் கூற்றின்படி விவிலியம் தாவோயிஸ கொள்கையாகிய ஒழுங்கு மற்றும் குழைவின் (Order and Chaos) சரியான உதாரணம். முழு குலைவு என்பது அழிவிற்கும் முழு ஒழுங்கு தேக்கத்திற்கும் வழிவகுக்கும். சரிவிகிதத்தில் கலந்திருக்கும் ஒழுங்கும் குலைவுமே நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மொத்த விவிலியத்தில் கிட்டத்தட்ட எழுபது சதம் பழைய ஏற்பாடும் மீதமே புதிய ஏற்பாடுமாக அமைந்துள்ளது. மானுடமகன், “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என எண்ண வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல , நிறைவேற்றவே வந்தேன்” (மத் 5:17) கூறியபடி அவர் புதிய மதத்தினை ஸ்தாபிக்க வரவில்லை, மாறாக இருக்கும் மதத்தினை சீர்திருத்தவே வந்திருந்தார்.
விவிலியத்தின் மொழி அழகானது . ஆனால் சரியான அறிமுகமோ பின்புலம் அறியாமல் வாசிக்கப் புகுவது என்பது நேராக முட்புதரில் மாட்டுவது போலத்தான். தொன்மங்கள் , வரலாறு, கவிதைகள் , போதனைகள் , கதைகள் , சடங்கு முறைகள் , வம்ச வரிசைகள் , பிரசங்கங்கள் , இறையியல் விளக்கங்கள் மற்றும் பேரழிவு இலக்கியங்கள் என பலவகையான எழுத்து வகைகளைக் கொண்ட பெரும் தொகை நூல். இலக்கிய நோக்கில் எதிர்பாராத கதை நாயகர் எழுந்து வருதல் , கதைகளுக்குள் கவிதைகள் வருதல் என சில பண்புகளைக் காணலாம். விமர்சன நோக்கில் பிற இனத்தவர் குறித்த இழிவான கற்பிதங்கள் புறந்தள்ளப்பட வேண்டியவை. அதே போன்று அரேமிய , கிரேக்க மற்றும் ஹீப்ரு மொழியிலிருந்து மொழிபெயர்த்ததால் வரும் பொருள் இழப்புகளும் , மத்திய கிழக்கின் வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்த அறிதல் இல்லாததாலும் வரும் சிக்கல்களும் வாசிப்பிற்கு தடையாகும்.
யூதர்களது விவிலியம் தோரா , நெவியும் , கெட்டுவிம் என மூன்று நூல்களை உள்ளடக்கிய தனாக் (TaNaK) எனப்படுகிறது. மொத்தமாக 24 நூல்களை உடையது. கத்தோலிக்கர்களின் பழைய ஏற்பாடு 45 நூல்களைக் கொண்டிருக்கிறது. சீர்திருத்த சபையினர் அதில் சில பிற்கால நூல்களை நீக்கிவிட்டு பின்பற்றுகின்றனர்.
தற்போதைய ஈராக் தொடங்கி சிரியாவை உள்ளடக்கி இஸ்ரேல்–ஜோர்டான் வரையிலான பிறை வடிவிலான வளம்பிறை (Fertile Crescent ) நிலப்பரப்பே பழைய ஏற்பாட்டின் நிலம்.
பழைய ஏற்பாடு உண்மையில் அரசர், இறைவாக்கினர் மற்றும் பூசகர்களது கதைகளே. Patriots என்னும் சொல் முதுதந்தையரை குறிக்கிறது. அது போலவே உடன்படிக்கை என்பது covenant என்பதன் மொழியாக்கம் . பழைய ஏற்பாட்டின் இறையியல் மையமாக ஆபிரஹாமின் உடன்படிக்கையில் தொடங்கி மோசஸ் மற்றும் தாவீதின் உடன்படிக்கைகளுடன் வளர்கிறது. மிக விரும்பி தன் உருவில் மனிதனைப் படைத்து அவனை உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் தலைவனாகச் செய்த கடவுள் விலக்கப்பட்ட கனியை உண்டதனால் அவனை சபித்து ஈடன் தோட்டத்திலிருந்து துரத்தினார். பிறகு அவனது வாரிசுகளிடம் செய்து கொள்ளும் உடன்படிக்கை , அதை அவர்களது வழித்தோன்றல்கள் மீறுகையில் தண்டனையளித்தல் என செல்கிறது.
சுவர்க்கம் , நரகம் என்னும் கருதுகோள்கள் பழைய ஏற்பாட்டில் இல்லை – ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துகிறது. இவ்வுலக வாழ்விற்கு , அதன் வெற்றிகளுக்கான உடன்படிக்கையே கடவுள் – மனிதனுக்கு இடையே உள்ளது. கடவுள் மனிதனைத் தேடி வருகிறார். மனிதன் – அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய யூத இனம் – சற்றேறக்குறைய 613 கட்டளைகளை பின்பற்றுவதே அவனது லட்சியம். ஆதாம் ஆடையணிவதை மனித நாகரீகத்தின் தொடக்கம் , படைப்பின் நான்காம் நாளில் கடவுள் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார் என்பதை பெருவெடிப்பிற்கு பிறகு காலம் தோன்றியதான கருதுகோளின் ஆதாரமாக சிலரால் கொள்ளப்படுகிறது .
காம வேட்கையையே முதற் பாவமாக பழைய ஏற்பாடு கருதுகையில் ஜாரெட் டயமண்ட் அது மிக பின்னர் வந்த ஒன்று என்கிறார். மனிதன் விவசாயத்தை கைக்கொண்டதே அவனது மிகப்பெரிய பிழை என்கிறார்., ஜாரெட்டின் கருத்துக்களை இணைத்து சிறில் இதை விளக்கிய விதம் நன்றாக இருந்தது.
பழைய ஏற்பாட்டின் சமகால நூலான கில்காமெஷ், எனுமா எலிஷ் போன்ற நூல்களுடன் ஒப்பிட்டு விளக்கியதும் நன்றாக இருந்தது. கில்காமெஷின் என்சிடின் பாவத்துக்கு இணையானது ஆதாம் – ஏவாளின் காம வேட்கைப் பாவம் . ஜென்ம பாவம் என்பது பாவம் செய்யும் தன்மை மற்றும் சூழ்நிலை சார்ந்தது. கன்னி வயிற்றில் இயேசு பிறந்தார் என்பது இந்த ஜென்ம பாவம் தீண்டாமல் அவதரித்தார் என்றே அர்த்தப்படுத்தப் படுகிறது.
தொடக்க நூலில் விவசாய மற்றும் மேய்ச்சல் நில பண்பாட்டிற்கு இடையேயான முரண்பாடுகள் ( காயின் மற்றும் ஆபேல்), மீண்டும் மீண்டும் பாவத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் மற்றும் சகோதரத்துவம் – அதன் முரண்பாடுகள் கூறப்படுகின்றன ( நான் என் சகோதரனின் காவலனா? தொ.நூ 4:9) . மேலும் நோவாவின் கதை கில்காமெஷ் , என்கிடு , உட்னபிஷ்டம் என இரு மரபுகளின் ஒன்றிணைந்த கதையே. பெருவெள்ளம் வடிந்த பின்னர் ஆலிவ் இலையுடன் புறா வந்திறங்குவது மீண்டும் மீண்டும் வரும் தொன்மம். நோவாவுடனான உடன்படிக்கைக்கு அடையாளமாக கடவுள் தனது வில்லினை வானத்தில் வைக்கும் காட்சியும் அருமை . அது போக மனிதனின் மாமிச உணவிற்கு ஆதாரமாக தொ.நூ 9:3 வசனமும் அடிமைத்தனத்திற்கு 9:25 வசனமும் காட்டப்படுகின்ற. ஓரின சேர்க்கை பாவம் என்பதற்கான குறிப்பு தொ.நூ 19:5 ல் கிடைக்கிறது.
பாபேல் கோபுரத்தின் அழிவை ஒரே மொழி பேசும் மக்களை பல மொழிகள் பேசுபவர்களாக கடவுள் மாற்றுகிறார். இது பல மொழிகளின் கலப்பால் பாபிலோன் அழிந்ததற்கான புராண விளக்கம்.
ஆபிரஹாம் 30000 ஒட்டகங்கள் வைத்திருந்தார் என நூலில் கூறப்படுகிறது . ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் ஒட்டகமே இல்லை. இதை anachromatism – கடந்த காலத்தைப் பற்றி எழுதுகையில் அப்போது இல்லாதவர்களைப் பற்றி எழுதும் தன்மை என்பர்.
பழைய ஏற்பாட்டு நூல்களை ஆவனவியலின் படி நான்காக பிரிக்கின்றனர். யாவே , எலோஹிம் , இணைச்சட்ட மற்றும் குரு மரபினர். சொற்களை வைத்தும் ஓரளவு மரபினை கண்டறியலாம் – ஆண்டவர் என்றால் யாவே , கடவுள் என்றால் எலோஹிம் மரபினர். இங்கு கடவுள் என்பது மரியாதைப் பன்மையினை குறிப்பது. தொடக்க நூலினை எழுதியது இணைச்சட்ட மரபினர் (ஆண்டவராகிய கடவுள்).
***
இவ்வாறாக ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் வகுப்புகள் நடந்தன. சிறில் மிகக் கவனமாக நூலின் புனிதத் தன்மையை ஒதுக்கி வைத்து விட்டு விளக்கினாலும் நூலின் மொழியே அதன் கனத்தினை காட்டி விடுகிறது.
வகுப்பின் உச்சம் என்பது புதிய ஏற்பாட்டின் மலைப் பிரசங்கம். சர்வ நிச்சயமாக இவை இறைமகன் மானுடத்தினை நோக்கி சொல்லப்பட்ட மகத்தான சொற்களுள் முன்னிற்பவை. ஊன்றுகோல் ஏதுமின்றி துன்பத்தில் உழலும் மக்களுக்கு இவை தரும் ஆறுதலும் ஊக்கமும் விவரிக்க இயலாதவை. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ” என உறுதியுடன் இறைகுமாரன் சொல்வது வெளிப்புற மாற்றமல்ல. மாறாக மனமாற்றம் – மனந்திரும்புதலைச் சொல்கிறார். ஏற்கனவே உள்ள யூத சட்டங்களை உள்முகமாகக் திருப்பி விடும்படி மறுவிளக்கம் அளிக்கிறார்.
இவற்றைக் குறித்து மிக விரிவாகவே எழுத வேண்டும்.
அழைக்கப்பட்டவர் பலர் , தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிலர் என்கிற வாசகத்தின் படி , இந்த வாய்ப்பினை அளித்தமைக்கு உங்களுக்கும் , புதிய வழியினை அறிமுகப்படுத்திய சிறில் சாருக்கும் நன்றிகள் பல.
சங்கரன்