மலப்பிரபா நதிக்கரையில்…..

 

அன்புள்ள ஜெ,

நலமாக இருக்கிறீர்களா? நான் நலம். சிங்கப்பூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மூன்று நாட்களாக நண்பர் ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்த சாளுக்கிய ஆலயப் பயணத்தில் பங்கேற்று திரும்புகிறேன். மனம் ஆனந்த தாண்டவமாடுகிறது.

இலக்கியத்தில் உங்களை வந்தடைந்த பிறகு நானும் தோழி பாரதியும் சிற்பங்கள் குறித்தும், ஆலயங்கள் குறித்தும் நாங்களாகவே வாசித்து, எங்களுக்குள்ளாகவே தப்பும் தவறுமாக ஏதேதோ விவாதித்து தஞ்சை, காஞ்சி, இலங்கை, யோக்யகர்த்தா, ஹொய்சாலர் ஆலயங்கள் என்று பல பயணங்களை மேற்கொண்டுவிட்டோம். ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் எல்லாம் அறிந்துவிட்டோமென்ற இறுமாப்புடன் இருக்கையில் அடுத்த பயணம் ‘மக்குகளா! உங்களுக்கு என்னதான் தெரியும்?’ என்று எங்களைப் பார்த்து நகைக்கும். இந்தப் பயணமும் அப்படித்தான் இருந்தது.

அதுவும் ஓர் ஆசிரியன் உடன் வருகையில் நமது அறிதலின் தரம் தெளிவாக விளங்கிவிடும். ஆசிரியர் ஜெயக்குமாரோடு ஆலயங்களைச் சுற்றி வருகையில் அதை மிகத் தெளிவாக உணர்ந்தேன். கிட்டத்தட்ட முப்பது பேர் இணைந்த இந்தப் பயணத்தில் நாங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக உளறியவற்றையும், முட்டாள்தனமாக கேட்ட கேள்விகளையும் சகித்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் பதிலளித்த ஜெகேயின் பொறுமை அசாத்தியமானது. தனது துறை குறித்த அவரது ஆழ்ந்த வாசிப்பும் நினைவாற்றலும் என்னை வியப்புக்குள்ளாக்கியது.

பாதாமியின் முதல் குடை வரையில் பதினெட்டு கரங்களோடு சதுர தாண்டவமாடும் நடராஜரின் முன்னால் தொடங்கிய எங்கள் பயணம் பட்டடக்கல்லில் விதானத்தில் அமைந்துள்ள அதே சதுர தாண்டவத்தோனின் கீழே நிறைவு பெற்றது. மூன்று நாட்கள் காலத்திலும் வரலாற்றிலும் பின்னோக்கிச் சென்று மலப்பிரபா நதியோரத்தில் சாளுக்கிய தேசத்தில் நின்றபோது  வார்த்தைகளில் விவரிக்க இயலாத உணர்வுகளால்  மனம் நிரம்பியது. ஒவ்வொரு சிற்பத்தின் முன்னால் நிற்கையிலும் அந்தக் கலை உச்சத்திற்கு காரணமான ஸ்தபதிகளின் முன்னால் மனம் மண்டியிட்டுத் தொழுதது.

இராவணப்பாடியில் தென்னிந்தியவின் ஆகப் பழமையான நடராஜ சிற்பமென்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்ற சதுர தாண்டவமாடும் ஆடல்வல்லானின் முன்னால் அமர்ந்து ஜெகே ‘ஆனந்த நடமாடுவார் தில்லை’ பாடலைப் பாடியத் தருணத்தில் அருவும் உருவும் சங்கமமாகி அருவுருவாய் நின்ற சிவலிங்கத்தைக் கண்டபோது கண்ணீர் மல்கியது.

அடுத்ததாக நண்பர் பொன் மகாலிங்கம்

‘ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண கண் ஆயிரம் வேண்டாமோ’  பாடலைப் பாடினார்.

‘ஆர நவமணி மாலைகள் ஆட

ஆடும் அரவம் படம் விரித்தாட’ என்ற வரியைப் பாடியபோது தலையாட்டி ரசித்துக்கொண்டிருந்த நண்பர் தேஜஸின் அரவக்காதணி அசைந்தாட வெளியே மண்ணிலிருந்து விண் வரை விஸ்வரூபமெடுத்து அம்மையுடன் அருவமாய் ஆடிக்கொண்டிருந்த அப்பனைக்காண ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாது.

நானும் தோழி பாரதியும் குழுவோடு இணைந்து செய்யும் முதல் பயணம் இது. கற்றல் களிப்புடன் நிகழவேண்டுமென்று நீங்கள் எப்போதும் சொல்வதை அனுபவத்தில் உணர்ந்த மூன்று நாட்கள். ஒத்த ரசனை உடையவர்கள் ஒன்று கூடினால் களிநடனம்தான் என்று கண்டுணர்ந்த நாட்கள். ஐந்து வயதிலிருந்து அறுபது வயது வரையிலான நபர்களைக் கொண்டிருந்த குழுவில் அனைவரும் பள்ளிச்சுற்றுலாவுக்கு சென்றிருப்பது போல சிறார்களாக மாறிய அற்புதமான நாட்கள்.

நண்பர் தாமரைக்கண்ணனின் ஐந்து வயது மகள் தாரா எனது கணவரிடம் ‘எனக்கு ஏரோபிளேன் ஓட்டத்தெரியும். நான் ஓட்டுறேன். நீ பின்னால் உட்கார்ந்துக்க’ என்று மழலையில் அளந்து கொண்டிருக்க அருகில் மகிஷனைக் காலடியில் மிதித்தவாறு முகத்தில் புன்னைகை தவழ நின்றிருந்த துர்கையைக்  கண்டபோது மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். நண்பர் வீரராகவனின் மகள் நிவேதிதா “ஆன்ட்டி! அந்தத் தூணில் மார்கண்டேயன் சிற்பம் இருக்கு. வாங்க. வந்து பாருங்க” என்று என்னை அழைத்துச் சென்று காட்டியபோது என் குழந்தைக்கு எல்லாம் கிடைத்துவிட வேண்டுமென்று எண்ணி அருளும் அம்மையாகத்தான் அவளைக் கண்டேன்.

கடைசி நாளில் நண்பர் சேதுராமன் பட்டடக்கல் விதானத்தில் அமைந்துள்ள சதுர தாண்டவத்தானின் கீழே அமர்ந்து ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ,எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ’ என்று பாடியபோது காலத்தில் நாங்கள் உறைந்து போனோம். அடுத்ததாக ஜெகே குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் என்று பாடி முடித்தபோது ‘போதும் இந்த மனிதப் பிறவி’ என்று மனம் அமைதியடைந்தது. இலக்கியம் வழியாகவும் கலையின் வழியாகவும் ஆன்மீக தரிசனம் பெற்ற நாட்கள்.

வாழ்நாளுக்கும் இது போதும் ஜெ. இத்தனைக்கும் விதை நீங்கள்தான் ஜெ. நான் காலடி வைத்த இடங்களெல்லாம் நீங்கள் மனதுக்குள் இருந்தீர்கள். அத்தனை ஆலயத் தரிசனங்களுக்குப் பிறகும் ஆசானாகிய உங்களை மானசீகமாக வணங்கினேன். உங்கள் வழியாகத்தான் ஆசிரியர் ஜெயக்குமாரைக் கண்டடைந்தோம். ஜெகேக்கு பலகோடி நன்றிகள்.

மூன்று நாட்கள் மூன்று நிமிடங்களாய் கரைந்து மறைந்தன. அடுத்த பயணத்தில் சந்திப்போம் என்ற உத்தரவாதத்துடன் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். “தொடுவது நல்லது. தொடுங்கள். தினசரி சில தோள்களையாவது. சில கைகளையாவது” என்ற வண்ணதாசனின் வரிகளை தீவிரமாகப் பின்பற்றுபவள் நான். அனைவரது கைகளையும் பற்றி விடைபெற்றேன். இறுதியாக ஆசிரியர் ஜெயக்குமாரின் கைகளை இறுகப்பற்றி நன்றி சொன்னேன். அதன் வழி உங்களையும் தொட்டு மீண்டேன்.

இந்தப் பயணம் தந்த உற்சாகத்தோடு 2025 ஆம் ஆண்டு தொடங்கவிருக்கிறது. நீங்கள் அளித்த அத்தனைக்கும் உங்கள் தாள் பணிந்து வணங்குகிறேன். உங்களுக்கும் ஆசிரியர் ஜெயக்குமாருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

அன்புடன்

அழகுநிலா

சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைபுதிய புல்வெளிகள்…
அடுத்த கட்டுரைகனவும் ஞானமும்