யோகம் என்னும் திறவுகோல். தினேஷ்குமார்

மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு

அன்புக்கும் பணிவுக்கும் உரிய வணக்கங்கள்.

வாசிப்புக்கொரு பெரும் திறப்பாக பேராசான் திரு. ஜெயமோகன் அவர்களை கண்டடைந்ததுபோல, அவரது தளத்தின் வாயிலாக தங்களை 2024 மார்ச் மாதம் கண்டடைந்ததும் என் வாழ்வின் ஒரு பெரும்பேறு என எண்ணுகிறேன்.

என்றைக்குமான ஞானத்தின் அடையாளமாகவும், யோகத்தின் சஹஸ்ரார சக்கர உச்சமாகவும் விளங்கும் தாமரை பயண வழியில் குளம் முழுதும் விரிந்து மலர்ந்திருந்த அந்தக் காட்சியில் லயித்த மனம், தங்களுடனான மூன்று தினங்களிலும் பிறழ்வோ மறுசிந்தனையோ இன்றி ஒன்றியிருந்தது.
யோகம்இலக்கியம்பயணம்உளவியல்பொருளாதாரம் (முதலீட்டு ஆலோசனை) என, எனக்கான குருவை அன்றே அடையாளம் கண்டுகொண்டேன்.

முதல் ஒரு மணி நேர அமர்விலேயே வரலாறு தொட்டு அறிவியலில் உச்சம்பெற்று, பாரம்பரியத்தில் முடித்து, “யோகா என்பது வெறும் உடற்பயிற்சிஎனப் பார்ப்பது எவ்வளவு பெரும் அறியாமை என்பதைக் கூர்மையாக உணர்த்தினீர்கள். அதன் பின்வந்த ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொரு பயிற்சியும், முற்றிலும் வேறொரு தளத்திலும் கோணத்திலும் அமைந்திருந்தது.

அன்று தங்களிடம் பெற்ற அடிப்படை 10 ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை, காலையிலும், பிராணயாமம் மற்றும் பிரத்யாகாரப் பயிற்சிகளை மாலையிலும், பெரும்பாலும் தவறாது தினந்தோறும் பயின்று வருகிறேன். தாங்கள் கூறியதுபோல, முதல் மூன்று மாதங்களில் உடல் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டதை தெளிவாக உணர முடிந்தது.

உடலை நன்கு கவனிக்கத் தொடங்கியபோது, அதுவரை கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளுக்குக் காரணம் என எண்ணியிருந்த பலவற்றை மறுநிர்ணயம் செய்ய வேண்டியிருந்தது. உடல் வலி, பசி, அவசரம் ஆகியவையே மிகப் பெரும்பாலான நேரங்களில் கோபத்தைத் தூண்டியவை என்பதை உணர்ந்தேன்.
8
மணி நேரத்திற்கும் மேலாக உறங்கி எழுந்தபோதும் நீங்காத உடல்வலி, பயிற்சியின் 4–5 மாதங்களில் முழுமையாக நீங்கியது.

ஒவ்வொரு நாளும் சரிகட்டப்படாத உணர்வுகளின் நீட்சிகளே அடுத்தடுத்த நாட்களின் மன உளைச்சலுக்குக் காரணமாக அமைகின்றன என்பதையும் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். பயிற்சியின் தொடக்கத்தில் ஒவ்வொரு அசைவும் மனக் கவனத்துடன் நடந்தது. முதல் ஆண்டு முடிவுறும்போது, உடல் இயக்கங்கள் தன்னச்சையாகவும் ஒழுங்காகவும் நிகழ்ந்தாலும், மனம் வேறெங்கோ உலாவிக் கொண்டிருந்ததை, பாரத் யோக யாத்திரையில் சுவாமி நிரஞ்சனானந்த சரஸ்வதி அவர்களின் உரைகளின் வழி உணர்ந்தேன்.

அன்றிலிருந்து பயிற்சியின்போதே மனக்குவிப்பிற்காக மகா மிருத்யுஞ்ஜெய மந்திரமும் காயத்ரி மந்திரமும் மனஉச்சரிப்பாக செய்து வருகிறேன். உடல் பழகி, மூச்சு நிதானமடைந்த பின், உணவு மீதான கவனம் தானாகவே அதிகரித்தது. தேவைக்கு அதிகமாகவோ, மிகக் குறுகிய இடைவெளிகளிலோ உணவு எடுப்பது இயல்பாகவே நின்றுவிட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான அடிப்படை பயிற்சியில் நடைமுறை பலன்களாக நான் உணர்ந்தவை:

  1. நாளொன்றுக்கு 6–7 மணி நேர ஆழ்நிலை உறக்கம் பெரும்பாலான நாட்களில் சாத்தியமாகியுள்ளது.
  2. உணர்ச்சிவசப்பட்ட முடிவெடுப்புகள் கிட்டத்தட்ட இல்லாமலாகியுள்ளன.
  3. ஒவ்வொரு செயலிலும் கவனமும் ஒழுங்கும் அதிகரித்துள்ளது.
  4. ஒழுங்கற்ற வாசிப்பு, இப்போது தெளிவான கட்டமைப்புடைய தேர்ந்த வாசிப்பாக மாறியுள்ளது.
  5. தங்களால் அறிமுகமான ஆண்ட்ரூ ஹபர்மேன் பாட்காஸ்ட் வழியாக நரம்பியல்உளவியல் சார்ந்த வாசிப்பையும் தொடர்ந்து வருகிறேன்.
  6. பயிற்சி தவறும்போது உடலும் மனமும் ஒரு வித அசௌகரியத்தையும் நிறைவின்மையையும் உணர்கின்றன.
  7. மொத்தத்தில், யோக அறிமுகத்திற்கு முன்பிருந்த வாழ்க்கை, இப்போது ஒரு structured, patterned, composed life ஆக மாறியுள்ளது.

ஆயினும், சில போதாமைகளையும் உணர்கிறேன்:

  1. நாளிறுதியில் அந்தர்மௌனத்தில் அடங்கும் மனம், மறுநாள் காலை யோக மூச்சுப் பயிற்சியின் வழி மீண்டும் தன்னியல்புக்கு ஒழுகிவிடுகிறது.
  2. தங்களது யோகப் புத்தகத்தில் குறிப்பிட்டபடி, பித்தம் சார்ந்த உடல் அமைப்புள்ள எனக்கு, தற்போது பயின்று வரும் பொதுவான அடிப்படை பயிற்சிகளில் எவற்றைத் தொடர வேண்டும், எவற்றை மெல்ல விலக்க வேண்டும் என்பதிலும், மேலதிக இரண்டாம் நிலை யோகப் பயிற்சிகள் குறித்தும் தெளிவான வழிகாட்டல் வேண்டுமென நினைக்கிறேன். நேரில் வந்து கேட்க வேண்டிய அளவிற்கு ஐயங்கள் உள்ளன.

ஆசிரியர் அறிவை அளித்து அகம்பாவத்தை அகற்றுகிறார்;
குரு ஞானத்தை அளித்து, வாழ்நாளுக்கான வழிகாட்டியாகிறார்.”

அந்த நீண்ட நெடும் பாரம்பரிய ஞானகுருக்களின் தொடர்ச்சியான என் குருவிற்கு, என் பணிவான வணக்கங்களுடன்,

உங்கள்
தினேஷ் குமார்

முந்தைய கட்டுரைபுதிய புல்வெளிகள்…
அடுத்த கட்டுரைமலப்பிரபா நதிக்கரையில்…..