நா கொட்டி ரசித்தல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

சென்ற செப்டம்பரில் நடந்த மரபிலக்கிய வாசிப்பு பயிற்சியில் கலந்து கொண்டிருந்தேன். வகுப்பிற்கு முன்னர் துவங்கப்பட்ட வாட்ஸாப் குழுவில் ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்து கொள்ள சொன்னார். எதன் பொருட்டு மரபு இலக்கியம் பயில வந்திருக்கிறோம் என்று கேட்டு தெரிந்து கொண்டார். கடலூர் சீனு முதலில், தான் ஏன் இந்த வகுப்பிற்கு வந்தார் என்பதை இவ்வாறாக அறிமுகம் செய்து கொண்டார்,

நவீன கல்வி நவீன இலக்கியம் வழியே வாசிப்புக்குள் வந்த வகையில்மரபு இலக்கியம் சார்ந்து ரசிக்க வேண்டிய பல பல விஷயங்களை தவற விட்டு விட்டோம் என்று ஜெ நடத்தும் மரபு கவிதைகள் முகாம்களை தொடர்ந்து வந்து அறிகிறேன். எனவே மரபிலக்கியம் சார்ந்த அடிப்படைகளை ரசனை கொண்ட ஆசிரியர் வழியே  அறிந்து கொள்ள கிடைத்தஇந்த  வாய்ப்பை தவற விடுவதில்லை என்று முடிவு செய்து கலந்து கொள்கிறேன்“. அதன் பின்னர் எல்லோரும் தங்கள் அறிமுகத்தையும் வகுப்பிற்கு வந்த நோக்கம் குறித்தும்  பகிர்ந்து கொண்டோம் .

என்னுடைய அறிமுகம் இவ்வாறாக இருந்தது. “நான் சரண்யா. ஊர் திருவள்ளூர். தற்போது பெங்களூரில் வசிக்கிறேன். பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியர்கள் மரபு இலக்கியம் வகுப்பு எடுக்கும்போது அவர்கள் ரசித்துப்ச்என்று உச்சு கொட்டுவதின் ருசியின் பொருட்டு எனக்கு மரபு இலக்கியம் வாசிக்க வேண்டும்  என்ற ஆர்வம் வந்தது. சில ஆண்டுகள் முன் நான் முயற்சித்த போது உரைகள் வழி அதன் விளக்கத்தை புரிந்து கொள்ள முடிந்ததே ஒழிய அந்தஉச்எனக்கு வரவேயில்லை. அதனால் கைவிட்டு விட்டேன்ஆசிரியர் வழிகாட்டுதல் உதவும் என்று வகுப்பில் கலந்து கொள்கிறேன்“.

வகுப்பு எவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்று தெரியாததால்வகுப்பிற்கு வருவதற்கு முன்னர், ஏதேனும் பாடல்கள் பிரிண்ட் அவுட் எடுத்து வருவது உதவமா என்று குழுவில் கேட்டிருந்தேன்.அதற்கு ஆசிரியர் பதில்வணக்கம். ஏதாவது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்தால் மறக்காமல் வீட்டிலேயே வைத்து விட்டு வரவும்.அப்போதுதான்உச்கிடைக்கும்” . குழுவில் சிரிப்பலை. அங்கேயே புரிந்தது மூன்று நாள் கொண்டாட்டம் தான்

வகுப்பின் ஆரம்பித்ததில்நீச்சல் குளத்தில் மெதுவாக ஒவ்வொரு அடியாக இறங்குவதா மேலிருந்து டைவ் அடிக்கிறீர்களா ? எது உங்கள் விருப்பம் என்று கேட்டார் . எல்லோரும் ஒரே பதில் தான்படிப் படியாக“. சரி, சம காலத்தில் தொடங்கி சங்க காலம் வரை செல்லலாம் என்று சொன்னார்

கதை சொல்வது போல ஆரம்பித்து சம காலத்தில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்தார்சென்னை தமிழ் , ஆங்கிலம் உட்பட மரபிலக்கிய வடிவில் பாடப்பட்டிருப்பதைச் சொல்ல சொல்ல ஆச்சரியமும் சிரிப்புமுமாக நாங்கள் இருந்தோம். சமகாலம் தொடங்கி

ஆகாசம்பட்டு சேஷாச்சலம், கண்ணதாசன், பாரதிதாசன், பாரதியார், வள்ளலார், வில்லிபாரதம், கம்ப இராமாயணம், ரசிக மணி டி.கே.சி வளர்த்து எடுத்த ரசனை மரபு, சிலப்பதிகாரம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் வரை  எல்லாவற்றையும் ஓசை நயத்தோடு பாடி சிரிக்கும் படி எளிமையாக விளக்கினார்

வில்லிபாரதத்தின் காட்சி, கர்ணன் இறக்கும் தருவாயில் குந்தியின் மடியில் இருக்கிறான். பலமுறை கேட்டு இருப்பினும் எல்லோரும் சோகத்தில் அமைதியாக அமர்ந்து இருந்தோம். சட்டென தர்மன் சொன்னதாக ஒரு நகைச்சுவையை எடுத்து வீசினார். எல்லோரும் சிரித்து விட்டோம். இந்த தருணத்திலும் நகைச்சுவையா என்று கேட்டதற்கு, “ஆம், வில்லிபாரத்திலேயே அப்படித்தான் இருக்கிறது, அவ்வளவு எடையை யார் தாங்குவதுஎன்றார்.

கவி உளம் அறிதல், சொல் தேர்வுகள், ஓசை நயம் பாராட்டல், குறிலை குறிலாக வாசிப்பதும் நெடிலை நெடிலாக நீட்டி வாசிப்பதும் பொருளுக்கு எவ்வளவு அழுத்தம் சேர்க்கிறது என்று விளக்கினார். திருமூலனாதன் அவர்கள் திருக்குறள் ஏன் கவிதை ஆகிறது என்று சிறு வகுப்பாக எடுத்தார். மற்றும் ராம்குமார் பல பாடல்களை இசையோடு பாடியது கூடுதல் சிறப்பு

வகுப்பு நிறைவில்தினமும் நா கொட்டி ரசிக்கும் படி எதையாவது வாசித்தால், கேட்டால் போதும் என்று இருந்தது. மூன்று நாளும் பெரும் கொண்டாட்டம். நண்பர் ஜெயராம் செய்தவை குறித்து தனியாகவே எழுதலாம். ஆசிரியரேஅடப்பாவிகளாஎன்று ஆச்சரியப்பட்டு வாயடைத்துப் போய்விட்டார்

வகுப்பு முடிந்த பின்னர், நானும் பெங்களூரில் வசிக்கும் ஸ்வேதா மயூரியும் சிலப்பதிகாரம். சரவணன் உரை மற்றும் நா.மு.வேங்கடசாமி நாட்டார் உரையின் உதவி கொண்டு வாரம் ஒரு முறை காலையில் கூடி வாசித்து வருகிறோம்

இவ்வகுப்பு மரபிலக்கியத்தை மிக எளிமையாக அணுகி அதன் சுவையைக் கடத்தும் நோக்கம் கொண்டிருந்தது. இங்கிருந்து நம் வாசிப்பை விரிவுப்படுத்திக் கொள்ள பரிந்துரைகள் வழங்கப்பட்டனஇம்முறை நடக்கவிருக்கும் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கும் மரபின் மைந்தன் முத்தையா சார் அவர்களுக்கும் நன்றி.

நன்றி,

சரண்யா

முந்தைய கட்டுரைகனவும் ஞானமும்
அடுத்த கட்டுரைமதம் கடிதம்