தாவர உலகம், கடிதம்

அன்புள்ள ஜெ,

இன்று அதிகாலை எனக்கு ஒரு கனவு வந்தது . இந்திய தோட்டக் கள்ளன் அதன் இருப்பிடத்தோடு கனவில் வந்தது. இதற்கு முன்பாக கனவில் பறவைகள் மட்டுமே closeup shot போல வரும். இன்று மொத்த காடும் என் கனவில்.அதன் அதிர்விலேயே விழிப்பு வந்துவிட்டது சரியாக 5 மணி இருக்கும்.

நேற்று தாவரவியல் வகுப்பின் முதல் தேர்வில் உலகின் மிக சிறிய செடியான பாறையில் படர்ந்து வளரும் பெரணி வகை தாவரத்தை எடுத்தோம். சல்லி வேருக்கு மிகப் பெரிய புல் வகை ஒன்றை கொண்டு சென்றோம்நீல விதைகள் கொண்ட, சதை பற்றுள்ள இலைகள் உள்ள,கொடி போல வளரும் செடி ஒன்றை சிறப்பு பகுதியில் வைத்தோம்

இரண்டு நாள் வகுப்பில் மிக அதிக தாவரங்களை பார்த்த, தேடிய குழு நாங்கள் தான் என நினைக்கிறேன். தாவர உலகம் திறந்துவிட்டது .அதன் ஒரு துளி காற்று எங்கள் மேல் பட்டுவிட்டது உண்மை.

முதல் பறவைகள் வகுப்பு, முதல் தாவரவியல் வகுப்பில் கலந்து கொண்டது என் நல்லூழ் என்றே கொள்கிறேன். மூன்று நாளும் காலையும், மாலையும் பறவைகள் பார்க்கவும் சென்றோம் ஆசிரியர் அனுமதியுடன். செடிகளை, கொடிகளை, மரங்களை, பூக்களை மட்டுமே பார்க்க முதல் நாள் மிகுந்த சிரமமாக இருந்தது. பறவைகளின் சத்தம் கேட்ட உடன் திரும்பி பார்க்க எண்ணிய என்னை இழுத்து பிடித்து நிறுத்த வேண்டியிருந்தது. மறுநாள் பயின்று விட்டேன். மூன்றாம் நாள் இரண்டும் இணைந்து விட்டன கனவிலும், நனவிலும்.

மிகச் சிறந்த ஆசிரியரின் கீழ் கற்பது என்றால் என்ன என குழுவில் அனைவரும் உணர்ந்து கொண்டனர் என்பதற்கு சான்று, வகுப்பு முடிந்த பின் எழுந்து நின்று வணக்கமும், கைதட்டலும் தந்ததே.

பேராசிரியர் லோகமாதேவி போல ஒருவரை காண்பது, அவ்வளவு அற்புதமாக இருந்தது. மடை திறந்தது போல ஒவ்வொன்றுக்கும் அச்சான விளக்கங்கள், எங்களுக்கு புரியும் படி. ஒரு சிறிதும் விலக்கமில்லாமல், அத்தனை புன்னகையுடன் அனைத்துக்கும் பதில்கள். ஆசிரியருக்கு என் பாத வணக்கங்கள்

அறிதல் அத்தனை இனிமையானது என மீண்டும் மீண்டும் உணர்ந்த கணங்கள்.Microscope மூலமாக பூக்களின், மகரந்தங்களின் விதம் விதமான ஓவியங்களை பார்த்தோம். மிகத் தேர்ந்த ஓவியனின் கை வண்ணம், அழகான வண்ண நேர்த்தியுடன் ஊசியில் கூட தொட்டு எடுக்க முடியாத நுண்ணிய கருப்பையில் இருக்கும் கருமுட்டைகளின் அடுக்கு. மெய்மறந்து நிற்க வைத்த அறிதல்.

நீரில், காற்றில் பல நூறு காதம் பயணித்து தனக்கான பெண்ணை தேடி கருவுறுதல் நிகழ்த்தும் ஆண்மலர், அதற்காகவே காத்திருக்கும் பெண் மலர். தென்னம் பாலையின் ஒரு பெண் பூவிற்காக தவமிருக்கும் நூற்றுக்கணக்கான ஆண் மலர்கள். ஒரு அதிசயத்தை நேரில் கண்டதை உணர்ந்த அறிதல்.

80 மில்லியன் ஆண்டுகளாக வெளியுலகம் அறியாமல், கருவுறச் செய்து பாதை அமைத்து அத்தி பழத்தின் உள்ளேயே செத்து மடியும் வண்டின் வாழ்வு என்னுள் எதையோ புரட்டி போட்டு விட்டதை உணர்த்தியது இந்த அறிதல்.

ஒரு போதும் என்னால் முழுதாக வகுப்பை விளக்க முடியாதுஎன்னுள் என்ன சென்றது என்பதை காடே எனக்கு காட்டும் என்று கொள்கிறேன்.புறம் அகத்தை வடிவமைக்கும்.

பிரியமுடன்,

சரண்யா

திண்டுக்கல்.

முந்தைய கட்டுரைஆலயக்கலை- கனவுகள், திட்டங்கள்: ஜெயக்குமார்
அடுத்த கட்டுரைமானுடவரலாறு, கடிதம்