அன்புள்ள ஜெ,
வணக்கம்
இந்த பிப்ரவரி 19ஆம் தேதியுடன் வெள்ளிமலை ஆலயக்கலை வகுப்புகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்களை சந்தித்தபோது வெள்ளிமலையில் ஆலய கலை வகுப்புகள் நடத்த வேண்டும் என்று நீங்கள் சொன்ன போது, நிச்சயம் செய்யலாம் சார் என்றேன். அன்று வீட்டிற்கு வரும் வழியில், வெள்ளி மலைக்கு அவ்வளவு தூரம் பயணம் செய்து வருவார்களா என்று சிறு ஐயம் எனக்கு இருந்தது. ஆனால் இன்று 500க்கும் மேற்பட்ட நண்பர்கள் ஆலயக் கலை முகாமில் கலந்து கொண்டு அதில் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள் குழுவாக பல இடங்களுக்கு தொடர்ச்சியாக பயணங்கள் செய்து பல ஆலயங்களை விரிவாக கண்டு அதில் சிலர் கட்டுரைகளையும் தமிழ் விக்கி பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு நன்றி.
ஆலயக்கலை வகுப்புகளின் மூலமாக ஒரு பத்து பேராவது விரிவாக வாசித்தால் கூட போதும் என்று எண்ணியிருந்த எனக்கு, இதை ஒரு இயக்கமாக மாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆரம்பம் முதலே இந்த முகாம்களில் என்ன மாதிரியான அமர்வுகளை நிகழ்த்த வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டுக் கொண்டு அதிகம் அறியப்படாத வாஸ்து மரபு, சிற்ப மரபு, ஆகம மரபு என்று அறிமுகம் செய்து வைத்து பின்பு குடைவரைகள் தொடங்கி பெரும் ஆலயங்களாக அவை விரிவடையும் காலகட்டம் வரை ஒரு வரலாற்றுச் சித்திரத்தை வழங்க முடிந்தது.
இந்த அளவிற்கு விரிவாக அறிமுகம் செய்யக்கூடிய ஒரு வகுப்பு இன்றைக்கு தமிழகத்தில் எங்கும் இல்லை என்பதை நான் உறுதியாக சொல்ல முடியும். கட்டிடக்கலை சிற்பக்கலை இதைத் தவிர அவற்றுடன் சேர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய இலக்கியங்கள், இசை, நடன, நாடக மரபுகள் குறித்தும் தொடர்ச்சியாக உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இதுவே முழுமையான அணுகுமுறை என்று எனக்கு காலம் சென்ற தொல்லியல் அறிஞர் திரு நாகசாமி அவர்கள் சொல்வதுண்டு. சைவ, வைணவ, சாக்த ஆகம மரபுகள் தவிர, சமண, பௌத்த ஆகம மரபுகளை குறித்தும் ஒரு சிறு அறிமுகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக பௌத்த, சமண படிமவியல் (Iconography) குறித்தும் விரிவான அமர்வுகளை சேர்க்கும் எண்ணம் உண்டு.
சிற்பச் செந்நூல் தொடங்கி ஆகம சிற்ப மரபுகள் தொடர்பாகவும் ஆலயங்கள் சார்ந்த நூல்களையும், விரிவான ஆராய்ச்சி கட்டுரைகளையும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்.
நண்பர்கள் பலரும் தொடர்ச்சியாக குழுவாகவும் தனித்தனியாகவும் கட்டுரைகளையும் நூல்களையும் வாசித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாம்களின் மூலம் இந்தியவியல் அறிஞர்கள் பலரையும் கோயில் கட்டிடக்கலை நிபுணர்களையும் ஆய்வாளர்களையும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்.
சிலப்பதிகாரம், நாட்ய சாஸ்திரம் தொடங்கி பேரிலக்கியங்கள், பரதர், இளங்கோ தொடங்கி அபிநவகுப்தர் வரை பல பேரறிஞர்களை குறித்து விரிவான வாசிப்பு இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வகுப்புகளில் மூல நூல்கள் வாசிக்கும் பழக்கம் நமக்கு அறவே இல்லாமல் போனது குறித்தும் நிறைய உரையாடியிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, மூல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். அதன் தொடக்கமாக சிலம்பு கூட்டாக பேராசிரியர் மாரியப்பன் அவர்களுடைய முயற்சியால் இணையத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதைத்தவிர சிற்பம் ஓவியம் கோயில் கட்டிடக்கலை சார்ந்த நூல்களை கூட்டாக வாசித்து, உரையாடல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆலயக் கலை முகாமை ஒட்டி தொடர்ச்சியாக வரலாற்று இடங்களுக்கு பயணங்களையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். வெறும் பயணமாக அமையாமல் அங்கேயே அவை குறித்து விரிவான தமிழ் விக்கி பதிவுகள் எழுதப்பட வேண்டும் என்றும் முயன்று கொண்டிருக்கிறோம்.
நண்பர் கலைவாணி எழுதிய புதுக்கோட்டை ஆலயங்கள் குறித்தான விக்கிப்பதிவுகள் ஒரு சிறந்த தொடக்கம்.அப்பதிவுகளை சில அறிஞர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆய்வுக் கட்டுரை தரத்தில் இருப்பதாக எனக்கு பதில் கிடைத்தது பெரு மகிழ்ச்சி அளித்தது.
கலைவாணி, ஸ்வேதா சண்முகம், லால்குடி தினேஷ், திருச்சி மனோஜ், வேலாயுதம், அவிநாசி தாமரைக்கண்ணன், என்று பல நண்பர்களும் தங்களை மிக விரிவாக தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள். பதிவுகளாகவும் கட்டுரைகளாகவும் பின்னர் நூல்களாகவும் விரித்தெடுக்கும் பெரும் திட்டமும் இருக்கின்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் பெரும்பாலும் பொதுப் பரப்பில் அறியப்படாமல் உள்ளது. எங்கள் பயணங்களில் அத்தகைய கல்வெட்டுகளை முன்னதாகவே மொழி பெயர்த்து நண்பர்கள் பயணத்தின் பொழுது அந்த கல்வெட்டுகள் முன் அமர்ந்து, அதை வாசிப்பதை கூட்டாக வாசிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். சாளுக்கியர் காலத்து ஆலயங்களை காண்பதற்காக பாதாமி பயணத்தின் பொழுது, ஐஹோலே மெக்குட்டி மலை சமண ஆலயத்தில் உள்ள புகழ்பெற்ற ரவிகீர்த்தியின் கல்வெட்டை ஸ்வேதா சண்முகம் அழகாக மொழிபெயர்த்திருந்தார். அதை கூட்டாக ஓர் அந்தி வேளையில் அமர்ந்து வாசித்த அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அதேபோல அஜந்தாவின் 17 ஆவது குடைவரையில் உள்ள
வாகாடகர் காலத்து கல்வெட்டு சுதா சீனிவாசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நண்பர்களுடன் பகிரப்பட்டது. இதுபோல பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை தொகுத்து கட்டுரைகளாக ஆகும் பணியில் சில நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தேகங்களை போக்கிக் கொள்ள பல அறிஞர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன். விரைவில் கல்வெட்டுக்கள் தமிழ் விக்கிப்பதிவுகளாக வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வகுப்புகளில் ஆவணப்படுத்துவதிலும், நூல்களை பதிப்பிப்பதிலும். எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறேன்.குறிப்பாக ஆகமம் குறித்த அமர்வில் நான் புதுவை பிரெஞ்சு நிறுவனம் ஆகம ஓலைச்சுவடிகளை சிறந்த முறையில் பாதுகாத்து வருவது குறித்தும், தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக ஆகம நூல்களை சமஸ்கிருதம் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளில் பல ஆகம நூல்களை பதிப்பித்து வருவதை கூறினேன்.
அங்கே பணிபுரிந்த நம் காலத்து மிகப்பெரும் ஆகம அறிஞர் சம்பந்த சிவாச்சாரியார், தற்போது பணிபுரிந்து வரும் பல அறிஞர் பெருமக்கள் ஆகியோர் குறித்து விரிவாக உரையாடும் பொழுது ஏன் நமது கலாச்சார பண்பாட்டு துறை இதை செய்வதில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. கோயில் கட்டிடக்கலை என்று வரும் பொழுது அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் ஸ்டடிஸ்(AIIS), என்ற நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன் பல அறிஞர் பெருமக்களை முதன்மையாகக் கொண்டு 14 தொகுதிகளில் Encyclopedia of Indian Temple Architecture என்ற மிகப்பெரும் தொகுதியை பதிப்பித்து விட்டது. அதன் துணை கொண்டு,பயணம் செய்து பல ஆலயங்களை இந்தியா முழுவதுமாக கண்டிருக்கிறேன். அதேபோல விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரமாகிய ஹம்பி குறித்து 11 தொகுதிகளாக மிக விரிவான ஆய்வு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
இவை அனைத்துமே வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்கள் இணைந்து பதிப்பித்தவை. பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களில் இந்த ஆய்வுகளை மிக விரிவாக நிகழ்த்துகின்றன. இந்திய ஆலயங்களில் குறிப்பாக தமிழ்நாடு ஆலயங்களில் ஏதேனும் காணாமல் போன சிலைகள் பற்றி தகவல் வேண்டும் என்றால் புதுவை பிரண்ட்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆவணப்படுத்தி வைத்திருக்கின்ற புகைப்படங்களையும் நாட வேண்டியிருக்கின்ற நிலை. இன்றும் கூட ஒரு முழுமையாக ஒரு ஆவணம் சிலைகள் குறித்து தயாரிக்கப்படவில்லை. இன்னமும் ஆவணப்படுத்தி எழுத வேண்டிய கோயில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. கோயில்கள் சார்ந்த கலை மரபுகள் பண்பாட்டு சடங்குகள் வழிமுறைகள் என்று தொகுக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. இவை அனைத்தையும் செய்து முடிக்க முடியும் என்று நம்புகிறேன்.
அனைத்திற்கும் நன்றி ஜெ.
ஜெயக்குமார்
அன்புள்ள ஜெயக்குமார்,
எந்த ஒரு செயல்பாடும் ஓர் இயக்கமாக வளர்ந்து விரிவடையும்போதே அதன் விளைவுகள் பொருட்படுத்தும்படி தெரிய ஆரம்பிக்கின்றன. ஓர் இயக்கம் உருவாவது எப்போதும் ஒரு மனிதனில் இருந்துதான். அவனுடைய கனவும், அர்ப்பணிப்பும், ஒவ்வொருநாளுமென விடாப்பிடியாகச் செய்யப்படும் நீண்டநாள் உழைப்புமே அதற்கான அடித்தளம். அந்த வகையுல் இங்கே நிகழும் எல்லா வகுப்புகளும் வளரவேண்டும் என விரும்புகிறேன். அவ்வாறான நபர்களையே தெரிவுசெய்கிறேன். இங்கெ நிகழ்வனவற்றில் உங்கள் வகுப்பே முதன்மையான இயக்கவிசை கொண்டுள்ளது என்பதில் மனநிறைவடைகிறேன்.
நான் இந்த வகுப்புகளில் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவேண்டும் என விரும்பினேன் – ஆனால் நானறிந்து ஓரிருவர் தவிர எந்த எழுத்தாளரும் ஆர்வம் காட்டவில்லை. ( நம் எழுத்தாளர்கள் எந்த வகுப்பிலும் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தன்னளவிலேயே மிகச்சிறிய அறிவுத்திறனும் ஆர்வமும் கொண்ட எளிய மக்கள். ஏதோ தெரிந்த அன்றாடத்தை மட்டும் எழுதுபவர்கள். நான் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறேன், அவர்களை எந்தவகையிலும் பொருட்படுத்தவேண்டியதில்லை என்னும் எண்ணத்தை பிறகு அடைந்தேன்) ஆகவே நாமே எழுத்தாளர்களை, ஆய்வாளர்களை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணம் இப்போது உள்ளது.
நம் ஆலயக்கலையைப் பற்றி விரிவாக எழுதும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்களின் அணி ஒன்றை இவ்வியக்கம் உருவாக்கவேண்டும். அவர்களுக்கு தொடர்பயிற்சி தேவை. இப்போது நீங்கள் அளித்துக்கொண்டிருப்பது அறிமுகம். மேற்கொண்டு 3 நிலை வகுப்புகள் அளிக்கப்படலாம்.
- ஆகமங்கள், சிற்பங்கள் பற்றிய மேலதிகப் பயிற்சி
- பொதுவாக நம் சிற்ப வரலாறு பற்றிய பயிற்சி
- பிராமி உட்பட எழுத்துருக்களின் பயிற்சி
இவை மிக எளிமையாக இதே போன்ற வகுப்புகள் வழியாக அளிக்கத்தக்கவையே. கூடுதலாக சிறு நூல்களை எழுதும் பயிற்சிகளும் தேவை.
நம் மரபிலுள்ள பெரிய நூல்களை இந்நண்பர்கள் வாசிக்கவேண்டும். தாங்களும் எழுதவேண்டும். அந்நூல்களை விஷ்ணுபுரம் பதிப்பகமே வெளியிடும். ஆங்கிலத்திலும் அந்நூல்களைக் கொண்டுவருவதற்கான பிரசுரம் ஒன்று உருவாகும் என்னும் கனவும் உண்டு.
அனைத்தும் உங்களுடைய ஆற்றலையும் கனவையும் நம்பித்தான்.
ஜெ