அன்புள்ள ஜெ
உங்கள் வகுப்பில் உபநிடதம் பற்றிய கற்பித்தலின் போது ஒரு தெளிவு கிடைத்ததாக ஒரு வாசகர் எழுதிய கடிதம் பார்த்தேன். எனக்கே அந்த வகையான அனுபவம் உண்டு. ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம் என்பதை எல்லா இடத்திலும் கடவுள் இருக்கிறார் என்று தட்டையாகத்தான் நான் வாசித்த நூல்களில் உரைகள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அழகு, ஒழுங்கு, நன்மை என அனைத்திலும் உறையும் ஒன்றே ஈஸ என்பது எனக்கே அழகான பார்வையென படுகிறது. என் கேள்வி இதுவே, உபநிடதங்களைப் படிக்கையில் ஏன் இத்தனை வேறுபாடு வருகிறது? எது சரியான உபநிடதக் கல்வி?
கீர்த்திதரன்
அன்புள்ள கீர்த்திதரன்,
நூறாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட உபநிடதங்களும் கீதையும் வேதாந்த மரபின் தத்துவநூல்களாகவே இருந்தன. அவற்றின் உள்ளடக்கம் வேதாந்தம் முன்வைக்கும் தூய பிரம்ம தரிசனம்தான். உபநிடதங்கள் அங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அனைவருக்கும் கிடைத்தபோது எல்லா தரப்பினரும் அவற்றை தங்களுக்குரிய வகையில் விளக்க முயன்றனர். குறிப்பாக அவற்றை பக்தி சார்ந்து விளக்கும் முயற்சி ஒரு பெரிய இயக்கமாகவே நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது. பக்தி சார்ந்து விளக்கும்போது எங்கெல்லாம் பிரம்மம் என்று வருகிறதோ அங்கெல்லாம் தெய்வம் என்று சொல்லிவிடுகிறார்கள். பிரம்மம் என்பது அலகிலாத வெளியாக, வெளிகடந்த ஒன்றாக உபநிடதங்களால் முன்வைக்கப்படுகிறது. அதை இவர்கள் உலகை படைத்து, நிர்வாகம் செய்யும் கடவுள் என்று பொருள்கொள்கிறார்கள். தண்டிக்கும் சக்தியாகவும், வழிபட்டால் அருளும் அரசன்போலவும் முன்வைக்கிறார்கள். விளைவாக உபநிடதங்களின் சாராம்சமே திரிபடைந்துவிடுகிறது. உபநிடதங்களை தூயவேதாந்த நோக்கில் மட்டுமே அணுகவேண்டும், அதுவே சரியான புரிதலை அளிக்கும். பக்தி நோக்குடன் அணுகினால் திரிபடைந்த வடிவமே கிடைக்கும்.
ஜெ