வரலாற்றைக் கற்கத் தொடங்குதல்…

வணக்கம்.

நான் கல்லூரி  மாணவி. எனக்கு நம் நாடு மற்றும் நான் வசிக்கும் ஊரின் முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன்.

பவதாரிணி

அன்புள்ள பவதாரிணி

வரலாற்றை கற்க ஆரம்பிப்பதற்கான படிநிலைகள்

அ. ஏற்கனவே பொதுவாக ஏற்கப்பட்ட வரலாற்றைப் பொதுவாக விவரிக்கும் அறிமுக நூல்களை வாசித்தல். அதுதான் தொடக்கம்.

அத்தகைய பொதுநூல்கள் பல உள்ளன. தென்னிந்திய வரலாறு பற்றிய கே.கே.பிள்ளையின் இரண்டு பாக நூல் முக்கியமான ஒன்று. அந்நூல்களின் பட்டியலை நான் முன்பும் அளித்துள்ளேன். (பார்க்க ) நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்ற முதன்மை வரலாற்றாசிரியர்களின் ஏதேனும் ஒரு நூல் போதும். தொடங்கிவிட்டால் அதிக நூல்கள் நம் கவனத்துக்கு வந்துகொண்டே இருக்கும்

ஆ. வரலாறு செயல்படும் விதத்தை அறிந்துகொள்ளுதல். வரலாற்று ஆதாரம் என்பது என்ன? வரலாற்றை எழுதுவதன் நெறிகள் என்ன? உலகளாவ வரலாறு எப்படி விவாதிக்கப்படுகிறது, வரலாற்றுடன் இணைந்த அறிவுத்துறைகளும் அறிவியல்துறைகளும் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். வாசிக்கத்தொடங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக அவை தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்

இ. எழுதப்பட்ட பொதுவான, அடிப்படையான வரலாற்றில் என்னென்ன திருத்தங்கள் சொல்லப்படுகின்றன என அறிந்துகொள்ளுதல். புதிய போக்குகள் என்ன, புதிய கேள்விகள் என்ன என அறிந்துகொள்ளுதல். வரலாற்றை நுணுக்கமாக ஆக்கிக்கொண்டே செல்லுதல்.

இதுதான் படிநிலை. இவ்வாறன்றி பலர் மூன்றாம்நிலையில் ஆரம்பிக்கிறார்கள். வரலாற்றை திருத்தி எழுதும் அரசியல்வாதிகளும் இனவாதிகளும் மொழிவெறியர்களும் மதவெறியர்களும் உருவாக்கும் வரலாற்றுத் திரிபுகளை முதலில் அறியநேரிடுகிறது. ஏனென்றால் அவை உச்சகட்ட விசையுடன் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அதுவே ஆபத்தானது.

உதாரணமாக, ‘காந்தி இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கி தரலை தெரியுமா?’ என்று ஒருவர் சொல்கிறார். அவர் அனேகமாக இந்துத்துவ கருத்தியல் கொண்ட திரிபு வரலாற்றைப் பேசுபவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டிருப்பார். (சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸ் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது: ஆர்.என். ரவி )அதை அறிவதற்கு முன் அடிப்படையாக இந்தியச் சுதந்திரப்போராட்ட வரலாற்றை ஒருவர் தெரிந்துகொண்டிருக்கவேண்டும்.அப்போதுதான் அதை உண்மையாக நம்மால் மதிப்பிட முடியும். ஓர் எளிய அறிமுக நூலாக இந்திய விடுதலை போராட்ட வரலாறு – க.வெங்கடேசன், பி.எஸ்.சந்திர பிரபு எழுதிய நூலை பரிந்துரைப்பேன்.

“தமிழ்நாட்டை எவனுகே ஜெயிச்சதில்லை தெரியுமா?”  என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு திராவிட வரலாறு சார்ந்த ஓர் அரசியல் இருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர்கள், நாயக்கர்கள் ஆகியோர் தெலுங்கர்கள். அவர் தெலுங்கர்களை திராவிடர்களாகவும் தமிழ்நாட்டவராகவும் எண்ணுகிறார். அவரது கருத்தை அறிந்துகொள்வதற்கு முன் தமிழக வரலாறு பற்றிய ஓர் அடிப்படை நூலை வாசிக்கலாம். தமிழக வரலாறு, மா. இராசமாணிக்கனார்.

அடிப்படை அறிமுக நூல்கள், அதன்பின் வரலாற்றின் அடிப்படை நெறிகள், அதன்பின் வரலாற்று விவாதங்கள் என்ற வரிசையில் வாசிக்கவும்

ஜெ

 

முந்தைய கட்டுரைஎத்தனை வாழ்க்கைகள்!
அடுத்த கட்டுரைஆசிரியரா? கடிதம்