வணக்கம் திரு ஜெயமோகன் அவர்களே,
தாம்பரத்திலிருந்து சுந்தரராஜன் எழுதுகிறேன். நான் தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஸ்மார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். (வயது அறுபத்துஐந்து). சிறு வயது முதலே கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஆர்வமும் தந்தையார் மூலம் பெற்றேன். சைவத் திருமுறைகள் மற்றும் ஆழ்வார் பாசுரங்களில் நல்ல ஆர்வமும் உண்டு. சென்ற நாற்பது வருடங்களில் 274 தேவார பாடல் பெற்ற தலங்களையும் 108 வைணவ திருத்தலங்களையும் மற்றும் பெரும்பாலான கோவில்களையும் தரிசித்தேன். கடந்த பத்து வருடங்களாக வேதாந்தம், கலாசாரம் பற்றியும் மற்றும் முத்தாய்ப்பாக தங்களது படைப்புக்களையும் தொடர்ந்து படித்து வருகிறேன். தங்கள் எழுத்துக்களின் மூலம் தமிழ், சமஸ்க்ருதம், தமிழக பிராமணர்கள், சாஸ்திரம், தத்துவம் போன்றவற்றில் சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொண்டேன்.
நீண்ட அறிமுகத்திற்கு மன்னிக்கவும். எனது சந்தேகங்களுக்கு இத்தகைய முன்னுரை தேவை என்று நினைத்ததால் கொடுத்தேன்.
- தமிழை தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள் பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன் எப்படி இருந்தார்கள்? ஏனெனில் தற்போது நாங்கள் கொண்டாடும் பண்டிகைகள் அனைத்தும் சாந்தரமான ( Chandramana system of Calendar ) முறையில் கொண்டாடபடுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் சௌரமான முறையே வழக்கத்தில் உள்ளது. ஏனிந்த முரண்பாடு ?
- சங்கர மடங்கள் போன்ற அமைப்பும் அதன் அதிபரை குலகுருவாக ஏற்றுக்கொண்ட முறையும் இருந்ததா ? ( குறிப்பாக தமிழக பிராமணர்களுக்கு )
- எனில் ஏன் ஒரு சாரார் சிருங்கேரியையும் மற்றொரு சாரார் காஞ்சி மடத்தையும் கொண்டிருக்கும் பிரிவு ஏன் ?
- கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பதாக கூறுபவர்கள் கிருஷ்ணதேவராயர் ( வித்யாரண்யார் ) காலத்திற்கு முன் என்ன செய்தார்கள்? ஏனெனில் தற்போதைய கூறுகள் எல்லாம் இவர்கள் காலத்திற்குப்பின் வந்தவைதானே !
- கர்நாடக இசை என்பது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு பின் வந்தது தானே ? எனில் அதற்கு முன் எந்த வகை இசை அமைப்பை பின்பற்றினார்கள் ?
- தென் இந்திய பஜனை ஸம்ப்ரதாயம் என்று சொல்லி தெலுங்கு, கன்னட பாடல்களையும் மராத்திய அபங்கம் பாடல்களையும் புகுத்தி தமிழ் பாடல்களை பாடினால் இறைவனுக்குப்புரியாது என்ற பிம்பத்தை ஏற்படுத்திய காரணம் என்ன? எல்லா வகை பாடல்களும் பாடலாம் இறைவனை அடைய மொழி தேவை இல்லை என்றால் தமிழ் மொழியை ஏன் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல வில்லை ?
- தென் தமிழக பகுதி பிராமணர்களுக்கு சிருங்கேரி தான் சமய தலைமையகம் வட தமிழக பகுதி பிராமணர்களுக்கு காஞ்சிபுரம். ஆனால் சிருங்கேரியில் தமிழக பிராமணர் தலைமை பதவிக்கு வரமுடியாது. ஆனால் காஞ்சியில் என்ன நிலைமை !
- அரசியலை விடுங்கள், சமய ரீதியாகவும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறதா? சமய மற்றும் கலாசார வகைகளிலும் தமிழ் பின் தள்ளப்படுகிறதா?
- அகில இந்தியா அளவில் முகலாய மன்னராட்சியின் சாயம் நமது வாழ்க்கையில் படர்ந்து / கலந்து இருப்பது போல தமிழகத்தில் கிருஷ்ணாதேவராயர் மற்றும் மராத்திய சிவாஜியின் ஆதிக்கம் தொடர்கிறதா ?
தாங்கள் ஒரு விஷயத்தை தொகுத்துப்பார்க்கும் முறையில் ஒரு நேர்மையும் தெளிவும் இருப்பதால் இக்கடிதத்தை எழுதுகிறேன், மற்றபடி வேறெந்த உள்நோக்கமும் வெறுப்புணர்வும் நிச்சயமாக இல்லை.
இன்னொரு காரணம் : இதைப்போன்ற கருத்துக்களை விவாதிக்க நண்பர்களும் இல்லை பொதுவெளியில் விவாதிக்கவும் விருப்பமில்லை.
நன்றியுடன்
சிறுவாசகன் தாம்பரம் சுந்தரராஜன்
அன்புள்ள சுந்தர ராஜன்,
இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டடைவதைவிட நீங்கள் ஆழ்ந்து யோசிக்கவேண்டியவை சில உள்ளன.
அ. இந்த கேள்விகள் ஏன் உங்களுக்கு எழுகின்றன? ஏனென்றால் நீங்கள் உங்களை நீங்கள் பிறந்த சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதைப்பற்றி அறிய விரும்புகிறீர்கள். அதைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல விரும்புகிறீர்கள். அதற்கு மாற்றான சாதிகளை அறியவும் அவர்களை ஒரு படி கீழிறக்கவும் விரும்புகிறீர்கள். உங்கள் சாதிப்பெருமைக்காக போராட நினைக்கிறீர்கள். ஒருவர் தான் பிறந்த ஒரு இனக்குழு தூயது, உயர்ந்தது என்று நிரூபிப்பதையே வாழ்நாள் பணியாக கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய அறிவுநிலை என்ன? அவருடைய ஆன்மிகநிலை என்ன? அப்படி ஓர் ஆப்ரிக்கர் அவர் பிறந்த இனக்குழுதான் உலகிலேயே மேலானது என நம்பி அதை நிரூபிக்க இருபத்து நான்கு மணிநேரமும் போராடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவரைப்பற்றி நாம் என்ன நினைப்போம்?
ஆ. நம் அடையாளம் நம் சிந்தனை, நம் அகத்தேடல் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதன்பொருட்டே நம் தேடல் அமையவேண்டும். எந்த வகையான முன்னடையாளத்தை நாம் ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு யோசித்தாலும் அது அறிவை வீணடிப்பது. ஆன்மிக இருளில் ஆழ்த்துவது. அது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், தமிழர், பிராமணர், அல்லது சாதி எதுவானாலும்.
இ. விரிவான வரலாற்றுச் சித்திரத்தை அறிந்துகொள்வது அவசியம்தான். ஆனால் அதை ஒருவர் தன்னை விலக்கித்தான் கற்கவேண்டும். இல்லையேல் தனக்கு உகந்த விடைகளை நோக்கியே செல்வார். வெறும் உணர்ச்சிகரத்தையே உருவாக்கிக்கொள்வார். நாம் உசாவும் கேள்விகள் நமக்குள் இருந்து எழுந்தவையாக இருக்கவேண்டும். நம் சூழலிலுள்ள வம்புகளில் இருந்து எழுந்தவையாக இருக்கலாகாது.
ஜெ