‘எனக்கு எதுக்கு உன் மதிப்பு?”

அன்புள்ள ஜெ

நம் செயல்களின் மதிப்பு என்ன என்ற காணொளியைக் கண்டேன். அதைக் காண்பது வரை நான் என் மனதிலுள்ள எண்ணங்கள் சரியா என்ற சந்தேகம்தான் கொண்டிருந்தேன். நான் ஆணவமாக யோசிக்கிறேனா என்ற சந்தேகம்தான் என்னை ஆட்டிவைத்தது. நான் வாசிப்பவன் . சில சமூகசேவைச் செயல்பாடுகளும் உண்டு. ஆனால் என் குடும்பத்திலும் ஊரிலும் என்னைப்பற்றிய மதிப்பு மிகக்குறைவு. நான் முதலில் அவர்களின் மதிப்புக்காக ஏங்கினேன். அதன் பிறகு அவர்கள் யார் நம்மை மதிக்க என்று ஒரு ஈகோவை உருவாக்கிக்கொண்டேன். அதை வெளிப்படையாகக் காட்டவும் ஆரம்பித்தேன். அதுவரை என்னைச் சுற்றிச் சுற்றிவந்து கொட்டிக்கொண்டிருந்த கும்பல் காணாமலாகியது. நிம்மதியாக உணர்ந்தேன். ‘இப்டீன்னா ஊர்ல ஒரு பய உன்னை மதிக்கமாட்டான்’ என்று என் தாய்மாமா சொன்னார். ‘அவனுக யாரு என்னைய மதிக்க?’ என்று நான் கேட்டேன். ‘உன்மேலே ஒரு நல்ல அபிப்பிராயமும் எனக்கு இல்லை’ என்று ஊர் பெரிய மனிதர் சொன்னார். ‘அதேதான். உங்கமேலே எனக்கும் எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை சரியாப்போச்சு’ என்று நான் பதில் சொன்னேன். இங்கே அறிவார்ந்து செயல்படுபவர்கள் கொஞ்சம் ஆணவத்தை சேர்க்கவில்லை என்றால் வாழவிடமாட்டார்கள்.

ஜெய்ஸன் ஜான்

முந்தைய கட்டுரைஇசையில் மலர்ந்தது…