பக்தி இல்லாத வேதாந்தத்தைத் தேடி…

அன்புள்ள ஜெயமோகன்,

நான் நீங்கள் பேசும் தத்துவம் மற்றும் வேதாந்தம் சார்ந்த காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் கடந்த 20 ஆண்டுகளாக வெவ்வேறு ஆசிரியர்களிடம் வேதாந்தம் சார்ந்த வகுப்புகளை பயின்று வருகிறேன். அந்த வகுப்புகளில் எல்லாம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதில் நிறைவளிப்பதாக இல்லை. பெரும்பாலும் கீதை அல்லது பிரம்ம சூத்திரம் போன்ற ஏதாவது ஒரு நூலை எடுத்துக்கொண்டு அதற்கு மிக விரிவாக பொருள் கூறிக் கொண்டே செல்கிறார்கள் .

மூன்று வார்த்தை அல்லது நான்கு வார்த்தைதான் ஒரு பாடலுக்கு உள்ளது. அதில் எந்த அளவுக்கு அதிகமாக பொருள் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு அவர் அறிஞராக கருதப்படுகிறார். ஆகவே ஒரு வார்த்தை எடுத்து வைத்துக்கொண்டு அதில் அவர்களுக்கு என்னென்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் விரிவாக சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். இவ்வளவு விரிவாக்கங்களையும் நம் மனதில் வைத்துக் கொள்ள முடியுமா என்று அவர்கள் யோசிப்பதில்லை .அவ்வாறு பல பல மணி நேரம் அவர்கள் விளக்கிய பிறகு கூட அந்த வரி நமக்கு புரியாமல் தான் இருக்கிறது. அந்த வரி நினைவில் நிற்பதும் இல்லை.

மேலும் இவர்கள் உரையை எழுதுகிறேன் என்று மிக விரிவான தனிப்பட்ட செய்திகளையும் சம்பந்தமில்லாத பிற நூல்களில் உள்ள செய்திகளை சொல்வதனால் மூலமே நமக்கு மறந்து போய் விடுகிறது. மரபான முறையில் இன்றைக்கு வேத வேதாந்தங்களை கற்பதற்கு வழியே இல்லை என்பதுதான் அர்த்தம். இன்று உள்ள பெரும்பாலான அறிஞர்கள் இதேபோல பத் உரையும் பொழிப்புரையும் சொல்வதற்கு மட்டுமே கற்று வைத்திருக்கிறார்கள்.ஏதேனும் ஒரு வகையில் வேதாந்தத்தை இந்திய வாழ்க்கையுடன் தொடர்பு கொடுத்த அவர்களால் முடியவில்லை.

வேதாந்தம் என்பது தூய அறிவை சார்ந்தது ஆனால் இவர்கள் அனைவருமே அதை எப்படியோ பக்தியில் கொண்டு வந்து சேர்க்கிறார் பிரம்மம் என்பது கடவுள் தான் என்று சொல்லி அதன் பிறகு எவ்வளவு விவாதித்தாலும் அது வேதாந்தமே அல்ல. பக்தி என்பது நம்பிக்கை சார்ந்தது அதில் தர்க்கத்துக்கு இடமில்லை. வேதாந்தம் அடிப்படையிலேயே ஒரு தர்க்கம்தான் .தர்க்கம் என்றால் அது உலகியல் தர்க்கம் அல்ல. பிரபஞ்ச அளாவிய ஒரு தர்க்கம் என்று சொல்லலாம் .அருவமான அந்த தர்க்கத்தை கற்றுக் கொள்ளாமல் வேதாந்தத்தை கற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் நூலில் எடுத்து வைத்துக்கொண்டு இறைவழிபாட்டை பற்றி பேச ஆரம்பிக்கையில் அந்த நுண்ணிய தர்க்கம் இல்லாமலாகி விடுகிறது.

எனக்கு தெரிந்து தமிழகத்தில் வேதாந்தக் கல்வி எங்கும் இல்லை. நானறியாத எவ்ரேனும் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை .நான் பல இடங்களில் விசாரித்த வரையில் எல்லா இடத்திலுமே பக்திதான் கடைசியில் எஞ்சி இருக்கிறது. பக்தி என்னைப் போன்ற ஒரு புதிய மனிதனுக்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. சரணாகதி எனக்கு இயல்பாக இல்லை. ஆகவேதான் நான் வேதாந்தத்திற்கு வருகிறேன். அப்படி வருபவர்களை திருப்பி பக்தி கொண்டு செல்வதைத்தான் இவர்களெல்லாம் செய்து வருகிறார்கள்.

நீங்கள் பக்தி இல்லாமல் வேதாந்த்தை கற்பிக்கிறீர்களா? அதற்கு தொடர்வகுப்புகள் நடைபெறுகிறதா?

அபய் முரளி

 

அன்புள்ள முரளி,

நான் பக்தன் அல்ல. இறைவழிபாடு செய்பவனும் அல்ல. வேதாந்தி. அத்வைதி. குறிப்பாக வேதாந்த வகுப்புகள் எடுப்பதில்லை. இந்து மெய்யியல் வகுப்புகள் நடத்துகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதிரைப்பட ரசனை மற்றும் திரைப்பட உருவாக்கப் பயிற்சி.