அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் வெளியிடும் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் .அவற்றில் வேதாந்தம் சார்ந்த காணொளிகள் எனக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டுகின்றன .ஆனால் ஒரு வேதாந்த வகுப்பு என்ற அளவில் கொள்ளத்தக்க காணொளிகள் எதையும் நீங்கள் இதுவரைக்கும் வெளியிடவில்லை. பெரும்பாலும் வேதாந்தத்தை பற்றிய எதிர்மறையான பார்வைகளை விளக்கும் அளவுக்கு வெளியிட்டு இருக்கிறீர்கள். உங்களுடைய இணையப் பக்கத்திலும் வேதாந்தத்தை பற்றிய சுருக்கமான அறிமுகங்கள்தான் உள்ளன. வேதாந்த அறிமுகத்தை விரிவாக பேசும் கட்டுரைகளை நீங்கள் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். உரைகளையும் ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
சண்முகக் குமார்
அன்புள்ள சண்முகம்
நான் வேதாந்தத்தை இவ்வாறு பேருரைகளாக ஆக்க விரும்பவில்லை. வேதாந்தம் சார்ந்த கட்டுரைகளை மிக விரிவாக எழுத விரும்பவில்லை. ஏனெனில் அவை எல்லாமே வேதாந்த விவாதங்கள் ஆகுமே ஒழிய வேதாந்த வகுப்புகள் ஆகாது. வேதாந்தம் என்பது இந்திய தத்துவத்தின் மிக நுட்பமான ஒரு பகுதி. அதற்கான உளநிலையுடன், அதற்கான இடத்தில், அதற்கான ஆசிரியரிடமிருந்து மட்டுமே அதை கற்றுக் கொள்ள முடியும்.
கற்பதற்குப் பல படிகள் உள்ளன. ஒரு படியிலிருந்து அடுத்த படிக்கு போவதுதான் அதை சரியாக புரிந்து கொள்வதற்கு உதவும். நான் வெவ்வேறு காணொளிகளை படிப்படியாக போடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம் .அதில் பத்தாவது படிநிலையில் உள்ள ஒரு காணொளியை முதலில் பார்க்கும் ஒருவர் முற்றிலும் தவறான சித்திரங்களை அடைய கூடும். அந்த சித்திரத்தை உருவாக்கிக் கொண்டு விட்டடார் என்றால் பிறகு அவர் முதல் கட்டுரைக்குச் சென்றாலும் அந்த பிழை நீடிக்கும்.
தத்துவத்தை நூல்களில் இருந்து கற்றுக்கொள்ள முடியாது . தத்துவம் அறியாதோரிடம் விவாதிக்கவும் முடியாது. இதை மிக விரிவாக விளக்கி நான் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன்.
ஜெ











