
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்ட மூன்றாவது தாவரவியல் அறிமுக வகுப்பு சென்ற வாரம் நடந்து முடிந்தது. உணவுக்கூடம், தங்குமிடங்கள் மற்றும் வகுப்பு நடந்த அரங்கின் முன்பெல்லாம் விடப்பட்டிருந்த, ஜோடி மலர்களைப் போன்ற அழகிய வண்ணங்களிலான குட்டி குட்டிச் செருப்புகளைப் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
3 வயதுக் குழந்தையிலிருந்து, தனது இரு பேரன்களுடன் வந்திருந்த பெரியவர் வரை பங்கேற்பாளர்கள் இருந்த வகுப்பு எனக்கு மிகப் புதிது. மரத்தடி வகுப்பொன்றில் அவரவர்க்கு பிரியமான மரங்களைக் குறித்த நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்ட போது, வாயில் விரல் போட்டுக் கொண்டிருந்த அந்த 3 வயதுக் குழந்தை, வாயில் விரல் போட்டுக்கொள்ளாத கையைத்தூக்கி செர்ரி மரம் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னது!

எல்லா வகுப்புக்களிலும் யாரும் சொல்லாமலேயே அனைத்துக் குழந்தைகளும் முன்வரிசை நாற்காலிகளில் தான் அமர்ந்தார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் குறைந்தது 4 கேள்விகளாவது கேட்டார்கள். வகுப்புக்களில் பல பிஞ்சுக்கைகள் என் முன்னால் உயர்ந்துகொண்டே இருந்தன. கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டு கிடைத்த இடைவேளைகளில் தான் கற்பித்தல் நிகழ்ந்தது. அந்தக் குழந்தைகளின் உலகே கேள்விகளால் நிரம்பி இருந்தது. அவற்றிற்கு பதில்சொல்ல உண்மையில் நான் அத்தனை ஆர்வமாகக் காத்திருந்தேன்.
ஒவ்வொரு ஸ்லைடையும் முழுக்கப் படித்து எல்லாவற்றையும் குறிப்பு நோட்டில் எழுதிக்கொண்ட பின்னரே அடுத்த ஸ்லைடை மாற்ற எனக்கு அவர்களிடமிருந்து அனுமதி கிடைத்தது. உண்மையில் மிக விரைவான வாழ்க்கைக்கு பழகிப்போன பெரியவர்களுக்கு எதிலும் அவசரமில்லாத அவர்களின் வாழ்விலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த வகுப்பு அமைந்திருந்தது.
முந்தைய வகுப்புக்களில் இருந்தவர்களை போலவே தான் இந்த வகுப்பிலும். ஒரே ஒரு குழந்தைகூட ஏதாவது வேண்டும் என்று அடம்பிடிக்கவோ, அழவோ, போன் வேண்டுமென்று கேட்கவோ இல்லை. குழந்தைகளுக்கு கையில் போனை கொடுத்த விதிவிலக்கான ஒரே ஒரு பெற்றோரும் அங்கு இல்லை.
மேலும் இந்த வகுப்புகளுக்கு வந்திருந்த குழந்தைகளின் மனமுதிர்ச்சியும், ஒழுங்கும் வழக்கம் போலவே எனக்கு இம்முறையும் வியப்பூட்டியது. தாத்தாவுடன் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த இரு சிறுவர்கள் அவர்மீது கொண்டிருந்த அன்பும் மரியதையும் மிக மிக ஆச்சர்யமூட்டியது.
பொதுவாக விவரமறியாத குழந்தைகள் தாத்தா பாட்டியின் மீது அன்பு கொண்டிருப்பதையும் சற்று வளர்ந்த பிறகு அவர்களை அலட்சியப்படுத்துவது அவமானப்படுத்துவது விலகிச்செல்வது ஆகியவற்றைத்தான் பார்த்திருக்கிறேன், அப்படி அவர்கள் நடந்துகொள்ள அவர்களின் பெற்றோர்கள் தான் முக்கியக் காரணமாகயிருப்பார்கள்.
ஹோசூரில் நிகழ்ந்த கவிதை நிகழ்வில் முகுந்த் நாகராஜன் சொன்னது போல குழந்தைகள் நாம் சொல்வதை செய்ய மாட்டார்கள் ஆனால் நாம் செய்வதை திரும்பச் செய்வார்கள்.
வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் இரவன்றே 40 பேர் வந்திருந்தார்கள், எல்லோருமாக சேர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டலாம் என்று திறந்த வெளியில் தயாராகியபோது அந்தக்கூட்டத்தில் தனது தாத்தா இல்லையென்பதைக் கவனித்த அச்சிறுவன் உரக்க ’’..இருங்க எங்க அய்யா வந்த பின்னாடிதான் வெட்டனும்..’’ என்று சொல்லிவிட்டு ஓட்டமாக ஓடிப்போய் தாத்தாவை அழைத்து வந்த பின்னரே கேக் வெட்டப்பட்டது.
அப்படி ஒவ்வொரு நாளும் வகுப்பு ஆரம்பிக்கும் போதும் , தேநீர் வந்தபோதும் உணவு உண்ணப்போகும் போதும் தனது அய்யா வந்தாயிற்றா என்று உறுதி படுத்திக்கொண்டான்.
இப்படி மாற்றுக்கல்வியைத்தேடி வரும் குழந்தைகளிலும் அவர்களது குடும்பங்களிலும் இருக்கும் கண்கூடான இந்த வேறுபாடும், வெளிப்படையாகத் தெரியும் குடும்ப ஆரோக்கியமும் உண்மையிலேயே மிக வரவேற்கத்தக்கது.
இரு பதின்ம வயது பெண்கள் தனியாகவே வந்திருந்தார்கள், அவர்களது தந்தை கொண்டு வந்து விட்டு, திரும்ப அழைத்துச் சென்றார். அவர்களிருவரும் நித்யவனத்தில் முன்பே பல வகுப்புக்களில் கலந்து கொண்டிருப்பவர்கள்.

இந்த வகுப்பில் கலந்துகொண்ட பல குழந்தைகள் முன்பே பறவை பார்த்தலில் இணைந்திருந்தவர்கள். நித்யவனத்தின் டிசம்பர்க் குளிரில் நான் அதிகாலை எழுந்து வந்து கதவை திறந்தால், கம்பளி போர்த்தியதுபோல பரவியிருக்கும் மூடுபனியில் எனக்கு முன்பே வெளியில் நின்று பறவைகளைப் பார்த்துக்கொண்டு அவற்றின் குரலைக் கொண்டு அடையாளம் காணும் சில சிறுவர்கள் நின்றிருந்தார்கள்.
அந்தக் குளிரோ, பலருடன் இணைந்து அறைகளில் தங்க வேண்டி இருப்பதோ, மரத்தடிக்கும், வகுப்புகள் நடந்த அரங்கிற்கும், கீழ்நிலைத் தாவரங்கள் இருக்கும், ஏறி இறங்கிச்செல்லவேண்டிய இடத்தில் இருந்த சிற்றோடைக்கும், மேட்டில் இருந்த ஆலமரத்துக்கும் தொடர்ந்து நடப்பதிலோ, அவர்களுக்குப் பழக்கமற்ற உணவிலோ , அடுத்தடுத்து நடந்த வகுப்புக்களோ எதுகுறித்தும் எந்தப்புகாரும் அவர்களுக்கில்லை. உற்சாகக் குவியலாகத்தான் இருந்தார்கள்.
நான் மேடையிலிருந்து இறங்கினால் அடுத்த நொடி நாலைந்து பேராக ஓடிச்சென்று போர்டில் எதாவது கிறுக்குவார்கள். தேநீர் இடைவெளியிலும் எனக்கு ஓடிஓடிவந்து கையில் மைக்கை எதாவது ஒரு குழந்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். நாலு வரி நோட்டில் A B C D முழுக்க எழுதிக்கொண்டு வந்து ஒரு குழந்தை காண்பித்து கையெழுத்து வாங்கிச் சென்றது. இத்தனை சுவாரஸ்யமான, உயிரோட்டமான வகுப்புகள் எனக்கு அமைந்ததே இல்லை இந்த நீண்ட ஆசிரியப்பணி அனுபவத்தில்.
உண்மையிலேயே மனமகிழ்ந்திருக்கிறேன்.
வந்திருந்த பெற்றோர்களிலும் ஒரே ஒருவர்கூட பொதுவெளியில் ஒருவரை ஒருவர் சன்னமாகக்கூட கடிந்துகொள்வது குற்றம் சாட்டுவது என்று ஒரே ஒருமுறை கூடச் செய்யவில்லை. பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள், பெரும்பாலும் கணவர்களே அதிகம் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள்.
நித்யவனத்தில் யோகா, பறவை பார்த்தல், ஆலயக்கலை, தத்துவம் இசை என்று எத்தனையோ கற்றல் நிகழ்ந்தாலும் அவற்றினூடே பங்கேற்பாளர்கள் வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்கிறார்கள்.
வெளிஉலகமே தெரியாமல் உயர்ந்த மதில்சுவர்களுக்குள் அடைபட்டுக்கொண்டு எந்தப் பயனுமற்ற அதே பழைய கல்வியைக் மனனம் செய்துகொண்டு, இணைய அடிமைகளாகிவிட்டிருக்கும் கோடிக்கணக்கானோரில் மிகச்சிறிய சதவீதத்தினருக்குத்தான் இப்படி இயற்கையோடு இணைந்த இடமொன்றில் மாற்றுக்கல்வியும் வாழ்க்கைக் கல்வியும் கற்க வாய்ப்புக் கிடைக்கிறது.
ஆர்வமுடன் மட்டுமல்லாது நம்பமுடியாத சிரத்தையுடனும் குழந்தைகள் வகுப்பில் இருந்தார்கள். தாவரவியல் வினாடி வினா இரவுணவுக்குப் பின்னர் நடந்தபோது தனது அணியினருக்கு நான் அரைமதிப்பெண் குறைத்துக் கொடுத்ததற்காக ஒரு சிறுவன் தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தான்.
இன்றைக்கும் 100க்கு 2/3 மதிப்பெண் வாங்கும் பலகல்லூரி மாணவர்கள் எந்தக் கவலையும் குற்றவுணர்வுமில்லாமல் புள்ளிங்கோ ஹேர் கட்டிங்கிலும் பைக் வாங்குவதிலும் கவனமாயிருக்கையில் எனக்கு இது எத்தனை வியப்பையும் நிறைவையும் தந்திருக்குமென்பதை எழுதித் தெரிவிக்க முடியவில்லை.
நான் கல்லூரியில் கற்பிக்கும் சிக்கலான மலர்ச்சூத்திரங்களோ, சித்திரங்களோ, ஸ்ட்ரெஸ் பயாலஜி, வகைப்பாட்டியல் போன்ற கடினமான பாடங்களோ அல்லாது மிக எளிமையான அறிமுக வகுப்புதான், அங்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் சொல் சொல்லாக ,மிக நுணுக்கமாக இவற்றைக் கற்றுக்கொள்ளும் இந்தக் குழந்தைகள் இனி எந்த உயர்கல்வியானாலும் இதே அக்கறையும் ஆர்வமுமாக அடுத்தடுத்த படிகளை மிக எளிதாக ஏறிச்சென்று விடுவார்கள்.
மிக இளமையில் அவர்களுக்கு இப்படி கவனமாக ஆர்வமாக இயற்கையுடன் இணைந்த ஒரிடத்தில் கல்வி கற்கும் வாய்பமைந்தது அவர்களுக்கு பலவிதங்களில் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான்கு சுவர்களுக்குள் 20 வருடங்களும் மேலாக கற்றுக்கொடுக்கும் ஒரு ஆசிரியையாக என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
இளமையில் எனக்கு ஏதேனும் ஒரு மலை வாசஸ்தலத்தில் மழலையர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருக்கவேண்டும் என்னும் கனவிருந்தது.அக்கனவு காலம் தாழ்ந்தாலும் முழுமையறிவு வகுப்புக்களில் நனவாகி இருக்கிறது.
ஆனால் குழந்தைகளுக்கு வகுப்பெடுப்பது அதனை எளிதல்ல. தில்லியின் காற்று மாசைக் குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் fog என்று சொன்னதும் ஒரு சிறுவன் கைகளை உயர்த்தினான். ’’..மேம் அது fog அல்ல smoke ம் fog-ம் சேர்ந்த smog என்றுதான் சொல்லனும்..’’ என்று திருத்தினான். சரி என்று பணிவாகக் கேட்டுக்கொண்டேன்.
ஆலமரத்தடி வகுப்பில் அத்திக்குளவிகளில் ஆண் குளவிகள் பெண் குளவிகளைக் கருத்தரிக்கச் செய்துவிட்டு உயிரிழந்துவிடுவதை சொல்லிக்கொண்டிருந்தேன். பிற்பாடு அதைக்குறித்த காணொளியும் காண்பிக்கப்பட்டது. அன்று மாலை மரத்தடி வகுப்பிலிருக்கையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் கையுயர்த்தி ’’..மேம் இந்த மேல் இன்செக்ட் எப்படி ஃபீமேல் இன்செக்டை பிரக்னன்ட் ஆக்குது?..’’ என்றான். முழுவீச்சில் பாடமெடுத்துக் கொண்டிருந்த நான் அந்தக்கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை திகைத்துப் பேச்சற்றுப்போனேன். வகுப்பில் மயான அமைதி நிலவியது, ஒரு யுகம் போலக்கடந்துசென்ற சிறு அமைதிக்குப்பின்னர் பின்வரிசையில் இருந்த ஒருவர் ’’.. டேய் அப்புறமா சொல்றேன் இப்போ க்ளாஸைக் கவனி ..’’ என்று செல்லமாக ஒரு அதட்டல் போட்டதும் ’’..ஓகே..’’ என்று இயல்பாகச் சொல்லிவிட்டு மீண்டும் குறிப்பெடுக்கத் தயராகினான்.
அவனுக்கு சமாதானமாக பொருத்தமாக கவனமாக பதில் சொல்லாமலிருந்தது குறித்து அறைக்கு வந்த பின்னர் வருந்தினேன். ஆசிரியர்கள் தோற்கும் கணங்களையும் குழந்தைகள் உருவாக்குகிறார்கள்.
பங்கேற்பாளர்களில் ஒருவரான தீபாவின் சிறு மகன் எத்தனை நேரமானாலும் இரவு உறங்கச்செல்லுமுன்பாக தனது குறிப்பேட்டில் அன்றைய நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுகிறான். என்னிடம் அந்த நோட்டைக்கொடுத்துப் படித்துப்பார்க்கச் சொன்னான். பிரமிப்பாயிருந்தது dear diary என்று துவங்கி அன்றைய நாளை அத்தனை சரியான, இலக்கணச் சுத்தமான ஆங்கிலத்தில் விரிவாக தொகுத்து எழுதிக்கொண்டிருக்கிறான் பல காலமாக. இந்தக் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலம் என் கண்களுக்கு முன்பாக தெளிவாகத் தெரிகிறது.
எல்லாவற்றையும்விட அந்தக்குழந்தைகள் ஒரு ஆசிரியையான என்மீது காட்டிய, பொழிந்த தூய அன்பைத்தான் குறிப்பிட்டுச்சொல்லவேண்டும். ஒரு குழந்தை என்னை எப்போதும் வந்து வந்து தொட்டுக்கொண்டே இருந்தது, சமயம் கிடைக்கையிலெல்லாம் குட்மார்னிங் மேம் என்று ராகம் போட்டு சொல்லிக்கொண்டிருந்தது இன்னொரு குழந்தை, அதிகாலையில் பறவை காணச்சென்று விட்டுத் திரும்புகையில் எனக்கென பறவை இறகுகளையும் கூழங்கற்களையும் கொண்டு வந்து தந்தார்கள்.
இரண்டு வரி நோட்டில் கிழித்த ஒரு தாளில் செல்லோ டேப் போட்டு ஒட்டப்பட்டிருந்த ஒரு பெரணி இலையையும், காலி நத்தைக்கூடொன்றையும் பரிசாகப் பெற்றுக்கொண்டேன்.

மதிய உணவு நேரமொன்றில் நான் வரிசையில் தட்டுடன் நின்று கொண்டிருந்தேன், அங்கே மேசையில் தன் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு 4 வயதுக் குழந்தை நான் அவனருகில் வந்ததும் நினைத்துக் கொண்டது போல தன் சிறு கையால் தன் தட்டிலிருந்து அப்பளத்துண்டொன்றை எனக்கு எடுத்து நீட்டியது. அவனது தந்தை பதறி என்னிடம் மன்னிப்புக்கேட்டார்.
நான் அவரிடம் என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு அன்பான பரிசை பெற்றுக் கொண்டது இல்லை இதற்கெதற்கு மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்று அதை வாங்கிக்கொண்டேன் அந்த அப்பளத்துண்டில் அன்பின் சுவை அபாரமாயிருந்தது. என் பின்னே நின்று கொண்டிருந்த ஒருவர் ’’..என்னடா மேம்கு மட்டும் கொடுக்கறே, எனக்கில்லையா?..’’ என்றார். அதைக் கேட்காதது போல அந்த குழந்தை தலையைக் குனிந்து கொண்டது.
இப்போது முன்னைப்போல கல்லூரியில் நான் அத்தனை மகிழ்ச்சியாகவும் மனமகிழ்ந்தும் பணியிலில்லை. காலம்தாழ்த்தி ஒரே ஒருநாள் கூட இதுவரையிலும் வந்தே இருக்காத, துறைசார்ந்த பெரும் ஆர்வமும் அபிமானமும் கொண்டிருக்கிற, நேர்மையான ஆசிரியையான நான் (இதை நானே சொல்லிக்கொள்ள வேண்டி இருக்கிறது) கல்லூரியில் நடக்கும் சில தவறுகளைச் சுட்டிக் காண்பிப்பதற்கும், சிலவற்றைத் தட்டிக்கேட்பதற்குமாக ஒருசிலரால் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறேன். சமயங்களில் மிகத்தாழ்வாகவும் நடத்தப்படுகிறேன்.
பெரும்பாலும் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை என்றாலும் வரம்பு மீறிப்போகும் சந்தர்ப்பங்களில் துயருறுகிறேன். இந்தச் சம்பளத்தில் குடும்பம் நடத்த வேண்டியிருப்பதன் அவசியத்துக்காக இவற்றை சகித்துக் கொண்டிருப்பதின் அவமானம் ஒவ்வொருநாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

முழுமையறிவு வகுப்புகளில் குழந்தைகள் காட்டிய தூய அன்பு எனக்கு எல்லாக்காயங்களுக்குமான அருமருந்தாகி இருக்கிறது.
வகுப்புகள் முடிந்து ஞாயிறு மதியம் புறப்பட்டு, காரில் எல்லாம் எடுத்துவைத்துவிட்டு ஏதேனும் விட்டுவிட்டேனா என்று பார்க்க அறைக்குச்சென்றேன். ஒரு சிறுவன் பின்னாலேயே வந்து ’’..மேம் உங்க ஞாபகமா எனக்கு ஏதாச்சும் கொடுங்க..’’ என்றான். உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன் ஒன்றுமே கையில் இல்லை . நல்ல வேளையாக நான் மறந்துவிட்ட ஒரு நறுமணத்திரவ பாட்டில் மட்டும் அங்கே இருந்தது. ’’..இதை வச்சுக்கோ எனக்கு பாரீஸில் இருந்து பரிசா வந்தது…’’ என்று கொடுத்தேன். அவன் பெரிய மனித தோரணையில் ‘’.. ம்ம் நான் இதெல்லாம் யூஸ் பண்ண மாட்டேன் இருந்தாலும் உங்களுக்காக வச்சுக்கறேன்..’’ என்று சொல்லி என் வயிற்றில் பால் வார்த்தான்.
இன்னொரு பெண் குழந்தை என்னுடன் பொள்ளாச்சி வருவதாகச்சொல்லி என் தோளில் தலைசாய்த்துப் படுத்துக்கொண்டு பெற்றோர்களுக்கு கையைத்து விடைசொல்லியது. மனமே இல்லாமல் அவளை இறக்கிவிடவேண்டி இருந்தது.
சேஷாத்ரி என்னும் ஒரு பங்கேற்பாளர் நான் புறப்படுகையில் அரசிலையில் வண்ணமேற்றிச்செய்த ஒரு அழகிய வண்ணத்துபூச்சியை பரிசளித்தார்.
என் கார் புத்தர் சிலையை தாண்டியபின்னர் ஒரு சிறுவன் காருக்குப்பின்னாலேயே ஓடிவந்து நான் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கியதும் பிரியத்துடன் கை கொடுத்தான் நானும் கைகொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டேன். எப்பேற்பட்ட அருள் இது என்று எனக்கு கண் நிறைந்தது.
வரும் மே மாதம் கல்லூரியில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். நான் உள்ளிட்ட வெகுசிலரே அதற்கு பணி மூப்பின் அடிப்படையில் தகுதியானவர்களாக இருக்கிறோம். உலகியல் வெற்றிக்கும் புகழ்போதைக்கும் ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது என்னும் பொது நம்பிக்கையின் பேரில் லோகமாதேவி பெரிய பெரிய இடங்களிலிருந்தெல்லாம் முதல்வர் பதவிக்கு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்னும் புரளி கல்லூரியில் ஒரு அலைபோல வீசிக்கொண்டிருக்கிறது.
குளிரூட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து நாளெல்லாம் கோப்புகளில் கையெழுத்திட்டுக் கொண்டு, நிர்வாகச் சிக்கல்களில் தலையைக் கொடுத்துக்கொண்டு, பெரும்பாலும் பயனற்ற, பொழுதற்று நீளும் மீட்டிங்குகளில் காலத்தைச் செலவளிக்கும், சில ஆண்டுகளுக்கான ஒரு பதவியைக்காட்டிலும், சிற்றோடைக் கரையிலிருக்கும் பெரணிச்செடியை. கல்லில் படிந்திருக்கும் நீர்ப்பாசியை, அன்னைப்பெருமரத்தைக் காட்டி மாணவர்களுக்கு பாடமெடுப்பதையே நான் பல்லாயிரம் மடங்கு உயர்வாக கருதுகிறேன்.

முதல்வர் பதவிக்கு நான் முயற்சிப்பதென்ன அதைக்குறித்து சிந்திக்கக்கூட இல்லை. நான் என் கடைசிக்கணம் வரைக்கும் மகிழ்ந்து ஆசிரியப் பணியிலிருக்க விரும்புவபள். சொல்லப்போனால் அந்தச் சிறுகுழந்தை எச்சில்கையால் தூய அன்புடன் எனக்களித்த அப்பளத்துண்டைக் காட்டிலும் உயர்ந்த எந்தப்பதவியும் இந்த உலகத்தில் எனக்கில்லை.
வெள்ளிமலை சோளிகர்களின் பழங்குடித்தாவரவியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் Dr. மேனகா என்னும் என் மாணவியையும் உடனழைத்துச் சென்றிருந்தேன். நாங்களிருவரும் மலர்களுடன் தேவைப்பட்ட மேலும் சில தாவரங்களை சேகரித்துக் கொண்டோம். flora of vellimalai என்னும் ஒரு அறிவியல் நூலை களத்தில் எடுத்த அசலான புகைப்படங்களுடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொண்டு வரவிருக்கிறோம். இப்படி எல்லா மலைப்பிரதேசங்களுக்கும் பிரத்யேகமான ஃப்ளோரா இருக்கிறது. flora of valaprai hills, flora of palani hills, flora of kodaikanal hills என்று.
உங்களுக்கு வாசகர்களான நாங்கள் எந்தக் கைமாறும் செய்துவிடமுடியாது. எனினும் ஒரு தாவரவியலாளராக நித்யவனம் அமைந்திருக்கும் பகுதியின் தாவரங்களை ஒரு நூலில் ஆவணப்படுத்தும் ஒரு சிறு பணியைச்செய்ய நினைக்கிறேன். உங்கள் ஆசிகள் உடனிருக்கும் என நம்புகிறேன்.அந்த வேலையை இந்த மாதமே துவங்குகிறோம்.
பலவேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன் தான், have too much on my plate எனினும் எல்லாமே என் துறை சார்ந்தவை என்பதால் ஒருபோதும் சோர்வடைவதில்லை. பாதிக்கிணறு தாண்டி இருக்கும் அகராதிப்பணி ஒருபுறம், கல்லூரிப்பணி, இல்பேணுதல், எழுத்து வாசிப்பு, பயணம் இவற்றோடு தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் இருக்கும் மிகப்பழைய ஆவணங்களிலிருந்து மாவட்ட வாரியாக தாவரவியல் குறிப்புகளை தேடிஎடுத்து அவற்றை அறிவியல் ரீதியாக திருத்தம் செய்து சரியாக மீண்டும் reconstruct செய்யும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறேன். மொழியாக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறேன். பொள்ளாச்சியின் மூதாய் மரங்கள் குறித்த நல்ல முழுப்பக்க அளவிலான புகைப்படங்களுடன் ஒரு நூலையும் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கான புகைப்படமெடுக்க நண்பர் ஜானகிராமனும் அவரது நண்பரும் அவர்களாக முன்வந்து உதவுவதாக இந்த வகுப்பில் சொன்னார்கள். ஒரு பெருங்குடும்பத்தின் அங்கத்தினர்களெல்லாம் ஒன்றாகச்சேர்ந்து கற்றுக்கொள்ளும் அனுபவம்தான் முழுமையறிவு வகுப்புக்களில் நடக்கிறது.
யாரேனும் தாவரவியல் குறித்து எழுதினால் தயங்கி அதற்கு எதிர்வினை மட்டும் எழுதிக்கொண்டிருந்த நான் ’எழுதுக’ என்னும் உங்களின் ஒற்றைச்சொல்லைப் பிடித்துக்கொண்டு இதுவரை வந்து சேர்ந்திருக்கிறேன்.
’செயல்புரிக’ என்னும் உங்களது கட்டளையையும் அப்படித்தான் சிரமேற்கொண்டிருக்கிறேன்.
இவை மட்டுமல்ல இன்னும் தாவரவியல் துறை சார்ந்த எத்தனை பணிகள் இருந்தாலும் மனமகிழ்வுடன் என்னால் அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். அனைத்திற்கும் நன்றி, நித்யவனம் தாவரவியல் வகுப்புக்களுக்கு பிரத்யேக நன்றியும் அன்பும்,!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
லோகமாதேவி











