செயல்களின் மதிப்பு, கடிதம்

ஜெ

செயற்கைநுண்ணறிவு மொழி, மொழிச்செயல்பாடுகள், கனவுகள் என்ற கட்டுரையில் சுசித்ரா உங்களுடைய ஒரு வரியைச் சொன்னார்கள். தங்கத்தின் மதிப்பை அதுவே ஈட்டிக்கொள்கிறது என்று. அதை தேடி இந்தக் காணொளியைப் பார்த்தேன். நாம் நம் செயல்களுக்கு பிறரிடம் அங்கிகாரம் தேடுவதே கூட நமக்கு அவற்றின்மேல் ஆழமான நம்பிக்கை இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. நாம் எதற்காக பிறர் ஏற்கவில்லை அல்லது மதிக்கவில்லை என்று நினைக்கிறோம்?

நான் 20 ஆண்டுகளாக ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கடல் மலினமாவதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுச் செயல்பட்டுவருகிறேன். என் செயல்பாடுகளை எவரேனும் கவனிக்கிறார்களா என்றே எனக்குத் தெரியாது. பிறர் என்ன நினைக்கிறார்கள் என்றும் தெரியாது. ஆனால் சென்ற இருபதாண்டுகளில் நேரம் நிறைவாகச் செலவாகியிருக்கிறது. வாழ்க்கையை நான் வீணடிக்கவில்லை. அது தெரிகிறது. அந்த நிறைவுக்கு அப்பால் எனக்கு என்ன தேவை? எவருடைய அங்கீகாரம் தேவை?

நான் இன்றைக்குச் செய்யும் ஒரு செயலுக்கு நான் இறந்தபிறகு விளைவு நிகழுமென்றால் அதை நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்? நான் இருக்கும்போதே, செயலுக்கு உடனடியாக விளைவு வரவேண்டும் என்று நான் ஏன் எதிர்பார்க்கிறேன்?

ஆனந்தி பரமேஸ்வர்

முந்தைய கட்டுரைஉண்மையில் ஒற்றை உரைதான்!