அன்புள்ள ஜெயமோகன்
உங்களுடைய காணொளிகளை பார்த்து வருகிறேன். இந்த வயதான காலத்தில் என்னால் நிறைய படிக்க முடியவில்லை .ஆனால் கேட்க முடிகிறது .ஆரம்பத்தில் சொற்பொழிவுகளை நிறைய கேட்டுக் கொண்டிருந்தேன் .அந்த சொற்பொழிவுகள் சட்டென்று சலிக்க ஆரம்பித்துவிட்டன. அவை ஒரே வகையான உச்சரிப்பும் பாவனையும் கொண்டிருந்தன. திரும்பத் திரும்ப எளிமையான கருத்துக்களை விரித்து விரித்து சொல்லிக் கொண்டிருந்தன .சொற்பொழிவு சலிக்க ஆரம்பித்துவிட்டபோதுதான் தற்செயலாக உங்களுடைய பேச்சுக்களை கேட்க ஆரம்பித்தேன் அவை சுருக்கமான கட்டுரைகளை காதல் கேட்பது போன்ற ஒரு அனுபவத்தை அளித்தன. நான் அதற்கு முன்பாக சொற்பொழிவுகள் சலித்த பிறகு ஒலி வடிவ நூல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் புத்தக வடிவில் கேட்க முடியவில்லை. அதிலிருந்த உணர்ச்சியற்ற தன்மை என்னால் தொடர முடியாமல் இருந்தது. உங்களுடைய குரல் மிகுந்த தீவிரத்துடன் என்னை நோக்கி பேசுவதாக இருக்கிறது .உங்களுடைய முகபாவத்திலும் அந்த தீவிரம் தெரிகிறது. ஆகவே என்னால் கேட்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய உரைக்காக காத்திருக்கிறேன் .நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு உரையை வலை ஏற்றலாம் என்பது என்னுடைய எண்ணம்.
ஆர்.பட்டாபிராமன்