சைவம் அறிந்து நெகிழ்ந்து…

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

கடந்த ஓராண்டாக கம்ப ராமாயணம் மட்டுமே வாசித்துக்  கொண்டிருந்தேன்,பேரிலக்கியங்கள் நாம் நினைக்காத அளவில் நம்மை சுத்திகரிப்பதை அதை அனுபவிக்கும் போது மட்டுமே அறிய முடிகிறது.

நீங்கள் தொடர்ச்சியாக கம்பனை பற்றி செய்த அறிமுகமும், ஊட்டி விழாவில் நாஞ்சில் நாடன் அவர்களின்  வகுப்பும் திவ்யப்ரபந்த முகாமும்  தான் க்ரியா ஊக்கிகள்.

இந்த முறை சைவ சித்தாந்த வகுப்பில் கலந்து கொண்டேன், ஆசிரியர் முத்தையா அவர்கள் முன்பாகவே எங்களுக்கு ஓர் பதிகம் அனுப்பி அதை வாசித்து விட்டு வர சொல்லி இருந்தார், அந்த பதிகம் எங்கள் பாட திட்டத்தின் சுருக்கிய வடிவம் என்பதை வகுப்பில் உணர்ந்து கொண்டோம்.

ஆசிரியர்  மிக தெளிவாக வகுப்பின் ஆரம்பத்திலேயே சில வரையறைகளை வகுத்து அளித்தார்,இந்த வகுப்பின் நோக்கம் சைவத்தின் பக்தி மரபை அதன் தளகர்த்தர்களான நால்வரை மேலும் சிவனடியார்களை அவர்களின் பெரு வாழ்வை அந்த வாழ்வின் பிழிவாக அவர்கள் அருளி செய்த  பதிகங்களை அறிந்து கொள்வதன் மூலமாக ஒரு திறப்பை உருவாக்குவது.

மிக கறாராக மொழியாராய்ச்சி தத்துவம் மற்றும் சமூக ஆராய்ச்சி போன்ற தளங்களிலிருந்து எழும் கேள்விகளை மறுதலித்து புறவயமான கேள்விகள் இந்த வகுப்பின் நோக்கத்தை சிதைக்கும்,பக்தி மரபிலிருந்து கிளைக்கும் தானற்றுப் போதல்என்கிற பெருநிலையை உத்தேசித்தே இந்த வகுப்பை தான் நடத்துவதை சுட்டிக் காட்டினார், அனாலும் சில நேரங்களில் நாங்கள் நாங்களாகவே நடந்து கொண்டோம்.

முதல் நாள் நாவுக்கரசர்,ஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்திநாயனார்,மாணிக்கவாசகர்  அவர்களின் பெரு வாழ்வு மற்றும் அவர்கள் வாழ்வில் இறைவனின் ஆடல் குறித்தும்,இரண்டாம் நாள் திருவாசகம் மற்றும் திருமந்திரம் குறித்தும்,மூன்றாம் நாள் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணம் குறித்தும் வகுப்புகள் நிகழ்ந்தன.

இவை திருமுறைகளில் எவ்வாறு பகுக்கப்படுகின்றன என்றும் அறிமுகம் செய்து வைத்தார்,அறிவின் சுமையை மறுதலித்து ஆனால் அந்த கருவியின் மூலம் மொழியை புரிந்து கொள்வதற்கும், மனத்தை அறிவின் புதைமணலில் சிக்கிக் கொள்ளாமல் இறைவனிடம் ஆற்றுப்படுத்துவது குறித்து தான் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய ஓங்கிய குரலில் பதிகம் கேட்டதும்,குறிப்பாக விலங்கு மனத்தால் விமலா உனக்கு என்கிற சிவபுராண வரி அந்த சூழலில்  அளித்த அழுத்தம் வாழ்வின் பல தருணங்களை மனம் அதுவாகவே மீட்டி நினைந்து சில துளி கண்ணீராக  கரைந்து ஓடியது.

எங்களுடன் இரண்டு நண்பர்கள் அவர்கள் சைவம் சார்ந்து முனைவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் என அறிந்தேன் இனிமையான குரலும் ஞானமும் கொண்டவர்கள்,அவர்கள் ஆசிரியரை முன்னரே அறிந்தவர்கள் இத்தனையும் எங்களுக்குஅனுகூலமாக அமைந்தது அவர்கள் குரலில் நாங்கள் பதிகம் கேட்டோம்.

வகுப்பின் இடையில் ஆசிரியர் சொன்ன ஒரு வாசகம்கம்பன் கவி சக்ரவர்த்தி என்றால் கவிகளின் தெய்வம் சேக்கிழார் என்றுஎங்களுக்கு சில நூல்  சிபாரிசுகளையும் அளித்தார்,அவர் மற்றும் உங்களின் ஆசியோடு அதை வாசிக்கும் பேறும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.

பேச்சின் இறுதியாக மெய்யறிவு அமைப்பு பற்றியும் உங்களை பற்றியும் அவர் நினைவு கூர்ந்து பேசியது மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்கியது.

வெளியுலகத் தீங்குகள் அணுகாத இடம்,இதமான கால நிலை,ஓரே அலைவரிசை கொண்ட நண்பர்கள் குழுமும் போது வாழ்வு பெரும் இனிமை கொள்கிறது.

ஸர்வே ஜனா சுகினோ பவந்து என்கிற வாசகத்தை நடைமுறைப்படுத்தி காட்டிக் கொண்டிருக்கும் உங்களை புரிந்து கொண்டு எங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன் 

சந்தோஷ் 

முந்தைய கட்டுரைசூழல், கடிதம்