ஆழத்துள் வாழ்தல்

அன்புள்ள ஜெயமோகன்,

  உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அவற்றில் வெளிவரும்  வெவ்வேறு கருத்துக்கள் ஒரு நாள் முழுக்க என் சிந்தனைக்குள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.  ஒவ்வொரு நாளும் வேலை வீடு என்று  அலைக்கழிகின்றன என் வாழ்க்கையில் என்  மனத்தின் ஒரு பகுதி  ஆழமான ஒன்றுடன் எப்போதும் உறவாடி கொண்டிருப்பதற்கு காலையிலேயே இந்த உரைகள் ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றன.

  அலுவலகம் செல்லும் வழியிலேயே பெரும்பாலும் இந்த உரைகளை நான் கேட்டு வருகிறேன்.  இது அளிக்கும் மனத்தூண்டல் நான் வெறும் ஒரு  உழைப்பாளியும் நுகர்வோர் அல்ல,  அதற்கு அப்பால் எனக்கு ஒரு ஆழம் இருக்கிறது என்பதற்கும் அங்கே சிலவற்றை நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதற்கும் எனக்கு நான் அளித்துக் கொண்டிருக்கும் சான்றாக இருக்கிறது.

  பெரும்பாலும் என்னை சுற்றி பயணம் செய்பவர்கள் காதில்  மாட்டி இருக்கும்  குமிழிகள் வழியாகக் கேட்டுக் கொண்டிருப்பவை எளிமையான சினிமா வம்புகளாகவோ பாடல்களாக இருக்கும். மிகச் சிலர் மட்டுமே ஆன்மீக உரைகளை கேட்பதை பார்த்திருக்கிறேன்.  ஆனால் எல்லாமே அவர்களை அமைதிப்படுத்துபவையே ஒழிய அவருடைய சிந்தனையை தூண்டுவன அல்ல. அவர்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவனவும் அல்ல .

 என்  இந்த உலகம்  என்னுடைய அர்த்தமற்ற பொருள் உலகத்தை நான் சமாளிப்பதற்கு உதவியாக உள்ளது. அதற்கு அப்பால் எனக்கொரு வாழ்க்கையை அளிக்கிறது.

  நன்றி

ராஜகோவிந்தன். எம்.

முந்தைய கட்டுரைஆழ்வார்களில் ஆழ்வது…