அன்புள்ள ஜெ
எமர்சன் பற்றிய சிறிய காணொளியை நான் பார்த்துக்கொண்டே சென்றேன். ஒரு வகையான ஏக்கம் என் மனதை ஆட்கொண்டது. எமர்சனை நான் இருபது வருடங்களுக்கு முன்பு படித்தேன். அன்று அந்த நேர்நிலையான கனவுகளால் ஆட்கொள்ளப்பட்டேன். அந்தக் கனவுகளை நான் இழந்துவிட்டேன். என் வாழ்க்கை மிக எதிர்மறையானதாக ஆகிவிட்டது. இன்றைக்கு வெறும் சோர்வு மட்டும்தான் வாழ்க்கையாக உள்ளது. எல்லா கனவுகளையும் உடைத்து வீசும் தர்க்கத்தை அறிவாக சேகரித்துக்கொள்வதில் என்ன லாபம்? கனவுகாண்பதற்கும் மிகப்பெரிய விஷயங்களை நம்புவதற்கும் ஒரு களங்கமின்மை தேவைப்படுகிறது. அது கலைவழியாகவே கிடைக்கும். எமர்சனில் இருந்து விலகுபவர் உண்மையில் கலையில் இருந்து உதிரந்துவிடுபவர்தான்.
ரா.மகாதேவன்











