அன்புள்ள ஜெயமோகன்,
இயற்கையின் தியானம் என்ற காணொளியை பார்த்தேன். அதில் நீங்கள் வெள்ளை உடையுடன் அமைதியான தோற்றத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அந்த காணொளியில் பின்னால் கேட்டுக் கொண்டிருக்கும் பறவைகளின் சத்தமும் அதில் நீங்கள் அடங்கிய குரலில் பேசும் அந்த அமைதியும் மனதை கவர்வதாக இருந்தன. ஒருநாள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் .
இயற்கையுடன் இருப்பது என்பது கடினமானதாகதான் முதலில் இருக்கும். இயற்கையில் உடன் இருப்பது நமக்கு எந்த அளவு கடினமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உண்மையில் நமக்கு இயற்கை தேவை என்று பொருள். ஏனெனில் நாம் நிலைகுலைந்து இருந்தால் மட்டுமே நம்மால் இயற்கையுடன் இருக்க முடியாது. இயற்கையின் தனிமையில் இருக்கும் போது கூட நாம் நம்மைப் பற்றி, நமது கவலைகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறோம் என்றால் நமக்கு இயற்கைத்தியானம் மிக அவசியமான இடத்தில் இருக்கிறோம்.
ஆனால் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளே கொண்டு சென்று விடும். எப்போதாவது நேர்ம் கிடைத்தால் இயற்கையுடன அமருவேன் என்று நினைப்பவர் அப்படிஅமர முடியாது. ஒவ்வொரு நாளும் தவறாமல் இயற்கையுடன இருப்பேன் என்று ஒரு முடிவை எடுத்தவர் மட்டும் தான் அதைச்செய்யமுடியும். அவருக்குத்தான் இயற்கையின் அனுபவம் ஏற்படும்.
நான் அவ்வாறு ஒரு இயற்கை தியானத்தின் வழியாகத்தான் மிகப்பெரிய உளச்சோர்வில் இருந்தும் சலிப்பில் இருந்தும் என்னை மீட்டுக் கொண்டேன்.
காயல் ராஜா முகம்மது












