வேதமெய்மை

அன்பிற்கினிய ஜெ,

வணக்கம், பல நாள்களுக்கு முன்இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவுஎன்ற குறளைப் படிக்க நேர்ந்ததும் ஒரு நொடி நிறுத்தி, கண்ணீர் விட்டு அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு ஒருநாள் முழுவதும் அதன் பாதிப்பு இருந்தது. அடுத்த நாள் என் நண்பர்களிடம் அந்தக் குறளைப் படித்துக் காட்டிப் பொருள் சொன்ன பின்னும் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் வாசகர்கள் தான் ஆனாலும் ஏன் அவர்களுக்கு அந்தப் பாதிப்பு இல்லை என்று எண்ணிக் கொண்டேன். இந்த மாதம் நடந்த மூன்றாம் நிலை தத்துவ வகுப்பில் உபநிஷதங்களைக் கவித்துவத்துடன் புரிந்து பயில்வதன் முக்கியத்துவம் குறித்து கூறியபோது அதற்கு இணையான நூல்களையும் எப்படிப் பயில வேண்டும் என்று கூறினீர்கள். தன்னுணர்வால் எப்படி விரித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினீர்கள். எனக்கு அது ஒருவிதத் தெளிவை அளித்தது.

இரண்டாம் நிலை தத்துவ வகுப்பில் வேதங்களைப் படிக்க பயிற்சி பெற்ற பின்னர், கிரிஃபித்தின் ஆங்கில மொழியாக்கத்தைத் தினமும் காலை சூரிய உதயத்தில் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்படியாக மூன்றாம் நிலை வகுப்பில் காலையில் சூரிய உதயமும் சந்திரனும் ஒரே கணத்தில் வெள்ளிமலையில் நிகழும்போது “O Sūrya with the golden hair, ascend for us day after day, still bringing purer innocence” என்ற ரிக் வேத வரிகளைப் படிக்க நேர்ந்தது. ‘Purer Innocence’ என்ற சொல்லோடு அந்தச் சூரியன் வெள்ளிமலை சரிவில் ஏறும்போது மிகப் பெரிய குழந்தையின் ஆசி அடைந்தது போல மனம் நெகிழ்ந்தது. அந்த இடத்தில்இயற்கை முன் ஒரு கணமேனும் தன்னை இதுவரை அறிந்ததிலிருந்து வேறொருவராக உணரும் தருணம் எல்லாருக்கும் கிடைக்குமா ?” என்று எண்ணிக்கொண்டேன். வெள்ளிமலை போன்றதொரு சூழலில் வகுப்புகளை ஒருங்கிணைத்தமைக்கு மனமார்ந்த நன்றி. அதிகாலைக் கூடுகையில்அன்னம் பிரம்மேதிஎன்ற வரிகளை நீங்கள் விளக்கியதும் மீண்டும் அதே நெகிழ்வு ஏற்பட்டது. அன்பிற்கினிய சரஸ்வதி அம்மாவின் கனிவான உணவுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடன்பட்டுள்ளேன்.

ரிக் வேதத்தின் இறுதிப் பாடல் “One and the same be your resolve, and be your minds of one accord. United be the thoughts of all that all may happily agree.” அக்னியை  உருவகித்து  வாழ்த்துவதில் தொடங்கி அக்னி, ஒன்றாக்குவதின் Phenomenon ஆக மாறுவதன் மொத்தச் சித்திரமும் இந்த மூன்று நாள் உபநிஷத வகுப்பில் பேருருக்கொண்டெழுந்தது. ” ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்என்ற வாக்கியத்தால் இம்மனநிலை மொத்தமாகத் தொகுத்துக்கொண்டேன். வேதத்திலிருந்து உபநிஷதம் விரிவடையும் முறையும் நுட்பமடையும் முறையும் புரிந்துகொள்ள இவ்வகுப்பு பயனுள்ளதாக இருந்தது.

 இவ்வாறாக நான்,என்றைக்குமாகச்  சுமந்து ஒளிகூட்டிக்கொள்ளப்போகும் ஆப்த வாக்கியங்களையும் அனுபவங்களையும் அளித்தமைக்கு நன்றி. உங்கள் கல்வி நிறுவனமான முழுமையறிவும் வாழும் தமிழ் இலக்கியப் பெருவிழாவும் நீங்கள் எண்ணிய சாத்தியங்களைத் தாண்டியும் நலன்விளைக்க வாழ்த்துக்கள்.

இறுதியாக, ரிக் வேதத்தைப் பயில கிரிஃபித்தைப் பரிந்துரைத்தது போல உபநிஷதங்களை வாசிப்பதற்கான  மொழியாக்கங்களைப்  பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் மெய்யன்பன்,

விக்னேஷ்.

முந்தைய கட்டுரையோகம் பயில்தல்.