தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இப்போது மிகப்புகழ்பெற்றவை. இன்றைய வாழ்வில் நாம் அடையும் சலிப்பு,அதன் விளைவான உளச்சோர்வு எல்லாவகையிலும் நம்மைச் சூழ்ந்துள்ளது. சட்டென்று செயலின்மை நோக்கி அது நம்மை தள்ளிவிடும்.
செயலின்மை மிகச் சிக்கலான ஓர் உளநிலை. அது உண்மையில் செயலின்மை என்றே நமக்கு தெரிவதில்லை. துளித்துளியாக, தொடர்ச்சியற்று எதையேனும் செய்துகொண்டு முழுநாளையும் கடத்துவோம். பரபரப்பாக ஏதோ செய்வதாகவே நினைத்துக்கொள்வோம். ஆனால் ஆக்கபூர்வமான விளைவை உருவாக்காத எச்செயலும் உளச்சோர்வின் வெளிப்பாடுதான் என நாம் அறிவதில்லை. நம் கவனம் குவியாததனாலேயே அவ்வாறு செய்துகொண்டிருக்கிறோம்.
அதேபோன்று மிகப்பெரியவையும் அசாத்தியமானவையுமான திட்டங்களையும் கனவுகளையும் சொல்லிக்கொண்டிருப்பதும் ஒருவகை செயலின்மையின் வெளிப்பாடுகளேயாகும். அனைத்துச் செயல்கள் மீதும் அவநம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும், அதை தர்க்கபூர்வமாகச் சொல்லிக்கொண்டிருப்பதும் இன்னொரு வகைச் செயலின்மை. இவை நம் செயலின்மையை நமக்கு நாமே மறைக்க நாம் போடும் உளநாடகங்கள்.
மிகத் தொடக்கநிலையிலேயே இந்த தேக்கநிலையை தொடர்ச்சியான எளிய பயிற்சிகள் வழியாக களைந்துவிட முடியும். அதற்கு முறையான வழிகாட்டுதல்கள் தேவை. ஊக்கம் கொண்ட ஒரு சுற்றமும் இன்றியமையாதது. தில்லை செந்தில் பிரபுவின் பயிற்சிகள் அவ்வகையில் மிக உதவியானவை.
தில்லை செந்தில் பிரபு இந்த தளத்தில் 25 ஆண்டுகள் பயிற்றுநராகப் பணியாற்றிய பின்னணி கொண்டவர். நவீன உளவியலையும், மரபான தியான- யோக முறைகளையும் கலந்த உளக்குவிப்பு- செயலூக்கப் பயிற்சி அவருடையது.
மீண்டும் இப்பயிற்சிகள் வரும் ஏப்ரல் 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.
முழுமையறிவு சார்பில் மாணவர்களுக்கான பறவை பார்த்தல் வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்திவருகிறோம். இன்றைய குழந்தைகளின் முதன்மையான சிக்கல் வலையடிமைத்தனம்தான். இணையவிளையட்டுக்கள், காணொளிகள், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் அவர்களைச் சூழ்ந்திருக்கின்றன. மாணவர்களின் உலகம் கூட்டானது, ஆகவே பொதுப்போக்கு அவர்களை அடித்துச்செல்கிறது. அதில் இருந்து தப்புவது எளிதல்ல. பெற்றோரின் கண்டிப்போ ஆலோசனையோ அதற்கு உதவுவதில்லை.
வளர்ந்த நாடுகளில் அதற்கு சிறந்த வழியாகக் கண்டடையப்பட்டு தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுவது நேரடியான செயல்கள்தான். காடுகளில் உலவுவது, அரிய கற்களையொ பிற இயற்கைப்பொருட்களையோ சேகரிப்பது போன்ற பல செயல்கள் அதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பறவை பார்த்தல்.
பறவைபார்த்தல் காட்டுக்குள் நேரடியாகச் செல்வதற்கான பயிற்சியை அளிக்கிறது. காட்டுக்குள் செல்வது புலன்களை ஆட்கொள்ளும் அனுபவம் ஆதலால் அது நம் குழந்தைகளை ஆக்ரமித்திருக்கும் செல்பேசி அடிமைத்தனத்திற்கு சிறந்த மாற்று. பறவைபார்த்தல் பயிற்சி பொறுமையாக அமர்ந்திருப்பது, கூர்ந்து கவனிப்பதற்கான மனநிலையை உருவாக்குகிறது.
அத்துடன் பறவை பார்த்தல் வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஒரு பழக்கமாகவும் ஆகிறது. உலகு முழுக்க பரவியிருக்கும் பறவை பார்த்தல் குழுக்களுடனான உறவு உருவாகிறது. அது முழுமையாகவே நம்மை ஈடுபடுத்த உதவுகிறது. எங்கள் பறவை பார்த்தல் வகுப்புகளில் பங்குகொண்டவர்கள் இன்று பல பறவைபார்த்தல் குழுக்களில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பறவைபார்த்தல் மகத்தான ஓர் அனுபவ உலகை விரித்தளிக்கிறது. இயற்கையுடனான உறவை உருவாக்குகிறது. தியானம்போன்ற உளக்குவிப்பு அனுபவத்தை அளிக்கிறது. உளச்சோர்வு போன்ற சிக்கல்கள் கொண்டவர்களுக்கான அரிய மீள்வழி அது.
மீண்டும் இப்பயிற்சிகள் வரும் மே மாதம் 1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.