வணக்கம் ஜெ,
உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அண்மையில் ஒரு காணொளியில் இயற்கை என்பதை தியானம் செய்யும் வழி முறையை பற்றி சொல்லியிருந்தீர்கள். இயற்கையுடன் ஒன்றிணைதல், இயற்கையுடன் மனம் கரைந்து இருத்தல் ஆகியவற்றைப் பற்றி எல்லா ஞானிகளும் பேசினாலும் கூட அதன் தத்துவ அடிப்படையை இவ்வளவு சுருக்கமாக யாரும் சொன்னதில்லை .இந்த சுருக்கமான அறிமுகத்திலேயே இந்த பிரபஞ்சம் என்பது ஆதிஇயற்கை எனும் ஒட்டுமொத்தமான மூலப்பிரகிருதியின் ஒரு வெளிப்பாடு என்றும், நம்முள்ளே இருக்கும் மனம் என்பது மகா புருஷன் என்றும், பிரபஞ்சம் முழுக்க நிரம்பி இருக்கும் ஒட்டுமொத்தமான பிரக்ஞை ஒன்றின் ஒரு துளி என்றும், இரண்டும் ஒன்றே ஒன்று அறிவதும் ஒன்றிணைவதும்தான் இயல்பான உச்ச நிலை என்றும், அவை பிரிந்து இருப்பதினால்தான் நாம் தவித்து தனிமையும் சோகமாக இருக்கிறோம் என்றும் விளக்கி இருந்தீர்கள். இந்த விளக்கமானது சாங்கிய-யோகத்தில் உள்ளது. மிக அரிதாக சில யோக நூல்களில் மட்டும் தான் விளக்கப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக இதை விளக்கி இருப்பதும், அந்த இடத்தில் நீங்கள் அமர்ந்து அதை உணர்வதும் மிக சிறப்பான ஒரு காட்சி அனுபவமாக இருந்தது.
இந்த காணொளிகள் எல்லாமே ஒரு வகை உரை அல்லது கட்டுரை என்பதை காட்டிலும் ஒரு அணுக்கமான உரையாடல் என்னும் இடத்தில் உள்ளன. ஒர் இடத்தில் உங்களுக்கு உண்மையில் என்ன தோன்றுகிறது என்று சொல்வதுதான் இற்றின் தனிச்சிறப்பு என்று நான் நினைக்கிறேன். புத்தகத்தில் உள்ள கருத்துக்களையும் ஒருவர் யோசித்து கோத்துக்கொண்ட கருத்துக்களையும் சொல்வது அல்ல இவை. நாம் கேட்கும் பெரும்பாலான உரைகள் அதைப் பேசுபவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு திரும்பத் திரும்ப சொல்லி தேர்ச்சி அடைந்து பேசுவதுதான். இவை நேரடியானவை. ஆத்மார்த்தமாக உடனடியாக பேசும்போது ஒரு ஸ்பான்டினிட்டி இருக்கிறது. அதன் கூடவே ஒரு வகையான மன எழுச்சியும் உணர முடிகிறது .அது முகத்திலும் குரலில் தெரிகிறது. ஆகவே இந்தப் பதிவுகள் எல்லாமே ஓர் எழுத்தாளரின் மிக அந்தரங்கமான சிந்தனையின் நேரடிப் பதிவுகளாக உள்ளன. ஒரு யோகியின் பதிவுகளாக கூட சில உள்ளன. இந்த காணொளியை போல.
நன்றி
ஆறுமுகப்பெருமாள்.











