தத்துவமும் நாமும்

ஆசிரியருக்கு,

சென்றமுறை நாம் புத்தகத்திருவிழாவில் சந்தித்தபோது உங்களிடம் நாங்கள் இப்போது ஒரு புதியவர் ஒருவரை எங்கள் குடும்பத்தில் எதிர்பார்க்கிறோம் என்றேன்.

அப்போது கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் இருந்தது ஆனால் சரியான உணவை எடுத்துக்கொள்ளாமல் ரத்த அணுக்களின் குறைபாட்டினால் தற்போது வாராவாரம் அயர்ன் இஞ்செக்‌ஷனும், பி12 வும் போட சொல்லியுள்ளார்கள்.

நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஏனோ என்னையும் வகுப்புக்கு செல்லகூடாது என்று வற்புறுத்துகிறாள்.

அதனால் என்னால் தற்போது 6-2 மற்றும் 7 வகுப்புக்கு வர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் வகுப்பை நான் தவறவிடுவது இதுவே முதன்முறை, ஒரு பக்கம் நான் கூறிய அனைத்தையும் தள்ளிவிட்டு என்னை இப்படி சுழலில் சுற்ற விடும் என் மனைவியை நினைத்தால் வெறுப்பாகவும் ஆனால் இந்த வெறுப்பு இன்னும் எதாவது கொண்டு வந்து விடுமோ எனறு பயமும் என்னை அலைக்கழிக்கின்றது.

எப்போதும் இப்படித்தான், என்னால் இதை ஒரு கட்டத்தில் தாங்கமுடியாததாக ஆகிவிடுகிறது ஆனால் இந்த குடும்பம் கொடுக்கும் ஒரு விதமான எளிய மகிழ்ச்சியும், என் சோம்பேறித்தனத்தை ஈடுகட்டும் சவுகறியமும் என்னையே என் மேல் எரிச்சலையும் ஒவ்வாமையும் உருவாக்குகிறது.

ஒரு விதத்தில் இதற்கெல்லாம் நான் என்னையேதான் குற்றம் சொல்லமுடியும் வேறு யாரையும் நான் சொல்லவிரும்பவில்லை.

என் அனைத்து விருப்பங்களுக்கும் நேர்மாறான ஒருவரை, அப்போதிருந்த மன நிலையில் திருமணம் செய்துவிட்டு இப்போது யாரை சொல்லி என்ன புண்ணியம்.

நான் நீண்ட நாட்களுக்கு பின் வீட்டிற்கு சென்றபோது என் அம்மாவும் அப்பாவும் இவளைப்பார்க்க அழைத்துசென்றார்கள், அப்போதும் இப்படித்தான், முடிந்தவரை யாரையும் புண்படுத்திவிடக்கூடாது என்று என் புனைவையே நம்பி நான் செய்த மிகப்பெரும் தவறு இது. அதற்குமேல் தற்பெருமை மிக்க என் தந்தையின் விருப்பமும், என் அம்மாவின் விருப்பமும் என்னை இந்த முடிவை எடுக்கவைத்தது எனலாம்.

இப்போது யோசித்தால் இது என் கோழைத்தனம், தனியாக முடிவு எடுக்கத்தெரியாத, எடுக்கமுடியாத எப்போதும் அடுத்தவரை குறைசொல்லும் இயல்பான என் குணம் என்றுதான் நினைக்கின்றேன்.

என் முதல் பெண் தற்போது 10 வது போகப்போகிறாள், இப்போது பிள்ளைபெற்றால் என் திட்டம் அனைத்தும் வீணாகிப்போகும் என்று பலமுறை சொன்னேன், ஆனால் ஒரு கட்டத்தில் நானும் சில மன மாற்றங்களால் ஒரு உயிர் மண்ணிற்கு வருவதை தடுப்பதற்கு நான் யார் என்று முகத்தில் அறைந்ததுபோல் இருந்தன. இது பெரும்பாலும் நான் எப்போதும் யோசிக்கும் உங்கள் தத்துவ வகுப்பின் சிந்தனைகளின் விளைவே என்றால் அது மிகையல்ல.

சாங்கியம் படித்தப்போது இருந்த உள நிலை தற்போது பிரம்மசூத்திரம் படிக்கும்போது மாற்றமடைகிறது, எல்லாம் கடந்த அந்த பிரம்மமும், எப்படியோ நிகழ்ந்துவிட்ட, மீண்டும் நிகழமுடியாத என் உடலும், அதனுள் உறையும் ஏதொ ஒன்றும் இதை எதிர்பார்த்த செய்தது. என்னால் இதை விளங்கிக்கொள்ள முடியவில்லை.

முடிந்தவரை நம்மை கடைசிவரை நெக்கித்தள்ளும் இந்த அலுவலக சூழலும், உனக்கு வேலைத்தவிர வேறு என்ன என்று கேட்கும் உயரதிகாரிகளும், குடும்பத்ததைத் தவிர உனக்கு என்ன என்று கேட்கும் இந்த குடும்பத்தையும் தாண்டி எனக்கான இந்த தனிப்பட்ட தேடலை நான் எப்படித்தான் செய்வேனோ, தெரியவில்லை ஆனால் இது என் பிரச்சனை, யாரும் எனக்கு உதவ முடியாது என்று அறிவேன், முடிந்தவரை முட்டிப்பார்பது வேறு என்ன செய்யமுடியும்.

எப்படி ஆகினும் என் வாழ்க்கை மகத்துவமானது அதை நான் முடித்துக்கொள்ள எனக்கு விருப்பமும் இல்லை,

மிக நீண்ட கடிதமாக ஆகிவிட்டது மன்னிக்கவும்

திருமலை

முந்தைய கட்டுரைசரஸ்வதியும் சாரதையும்