
அன்புள்ள ஜெ,
பெரும் முயற்சிகள் கனவுகளை விதைப்பவை. நியூயார்க் பெருங்கனவு நனவாகும் போது நீங்கள் அடுத்த கனவுக்குச் சென்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு கனவாக நிறைவேறட்டும், தமிழுக்கு வளம் கூடட்டும் என வாழ்த்துகிறேன். தமிழ் மனநிலையின் இருட்டையும் கசப்பையும் அன்றாடம் பார்த்துவருகிறேன். ஒன்றுமே தெரியாதவர்களின் மூர்க்கம் என்னை அவ்வளவாக தொந்தரவு செய்வதில்லை. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என தெரியும். ஆனால் தங்களை எல்லாம் தெரிந்தவர்கள் என்று எண்ணிக்கொள்பவர்களின் குறுகிய உள்ளம் அவ்வப்போது ஆழமான சோர்வை அளிக்கிறது.
இணையத்தில் உங்களை வசைபாடும் கும்பலுக்கு எதற்காக வசைபாடுகிறோம் என்றே தெரியவில்லை. வசைபாடுவது வழியாக தங்கள் ஆற்றாமையை தணித்துக்கொள்கிறார்கள். நீங்கள் அவற்றைக் கவனிக்காமல் மேலே செல்கிறீர்கள். எங்களைப் போன்றவர்களை அவை மனரீதியாக தளரச்செய்துவிடுகின்றன. நீங்கள் செயல்களைச் செய்து முடிக்கையில் எங்களுக்கு அந்த சோர்வும் கசப்பும் விலகி நம்பிக்கையின் ஒளி கிடைக்கிறது.
பேசிக்கொண்டிருந்தபோது நான் “எப்படித்தான் இத்தனை வசைகளையும் வாங்கிக்கொண்டு இவரால் செயல்பட முடிகிறதோ” என்று சொன்னேன். என் மனைவி “அவர் கீதையை படித்தவர். எல்லாம் இங்கே சரிசமமாகத்தான் இருக்கும் என்று தெரிந்து கர்மயோகமாகச் செய்கிறார்” என்றார். கர்மயோகிகளுக்கு புகழும் வசையும் சமம்தான். அவ்வாறு எல்லாமே பூவிதழ்களாக உங்கள்மேல் விழ கண்ணன் அருள் புரியட்டும்.
வாழ்க.
எஸ்.திருமலைராஜன்









