
வணக்கம்,
ஏப்ரல் 24 முதல் 26 வரையிலான, ஈரோடு கிருஷ்ணன் ஐயா அவர்களால் நடத்தப்பட்ட தர்க்கபூர்வ சிந்தனை அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன்.
சிந்திப்பதே அரிதான இக்காலகட்டத்தில் தர்க்கப்பூர்வமாக சிந்திப்பது எப்படி என்பது குறித்தான வகுப்பு என்பதால் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் அதிகமாகவே இருந்தது.
எனவே வியாழன் அன்று ஓட்டுப் போட்டு முடிந்ததும் காரில் சேலம் வந்து சோலராஜாவையும், அன்பரசியையும் கூட்டிக் கொண்டு நிகழுலகத்தினை(நெட்வொர்க்) அடிவாரத்தில் விட்டு விட்டு நித்தியவனம் என்னும் குருகுலம் நோக்கி மலை ஏற ஆரம்பித்தோம்.
அடுத்து வந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வகுப்பு, புதிர்களுக்கு விடை காண முடியாமலும், தர்க்கங்களுக்கு அறிவார்ந்த வாதங்களை முன்வைப்பதற்கான பாயின்ட்களைத் தேடிப்பிடிப்தற்கும்(net work இல்லாததால் மூளையை வேறு உபயோகப் படுத்த வேண்டியிருந்தது. கொஞ்ச காலமாக வேலை வாங்காததன் காரணமாக restart செய்து tune செய்ய வேண்டியிருந்தது), இரண்டாகப் பிரிந்து குழுவாக முறையாக தர்க்க ரீதியாக எதிர்குழுக்களுக்கு நம் பாயிண்ட்டுகளை முதலிலேயே அறிவித்து, முறையாக, குரலுயர்த்தாமல், காத்திரமாக, ஒரு அணியாக, கூட்டாக செயல்பட்டு வாதிடுவது குறித்து அறிதலுமாக களை கட்டியது.
மூன்றாவது நாளில் நாம் சிந்திப்பதில் உள்ள பிழைகள் (Fallacies) பற்றி விரிவாக அறிய முடிந்தது.
சிந்திப்பதற்கான பிழைகளை முதலில் நீக்கி சிந்தனையை சரியான பாதையில் செலுத்தி உண்மையை அறிவது எப்படி என்பது குறித்தான இந்த வகுப்பு எனது வாழ்க்கையில் நான் இதுவரை கற்றவற்றை எல்லாம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
எனது பள்ளிக் கல்வியோ, வாழ்க்கைப் பாடமோ கற்றுத் தராத ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொண்டதில் மீண்டும் புதிதாக உயிர்த்தெழுந்தது போன்ற மனத்திறப்பினை உருவாக்கியது.
உண்மை அறிந்தவுடன் மனிதன் தனது நிலைப்பாடை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்கேற்ப எனது நிலைப்பாட்டினை உடனடியாக மாற்றி அமைத்துக் கொண்டதில் நானே என்னைப் புதிதாகப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. நமக்குள் இருக்கும் நம்மை நமக்கே யார் என்று எடுத்துக் காட்டுவது போல அமைந்தது அவ்வகுப்பு…
எனது வாழ்க்கையில் நிகழ்ந்ததை எல்லாம் முதலில் இருந்து வேறுவகையில்/வேறோரு பார்வை கொண்டு அணுகி சிந்தித்துப் பார்க்கத் தூண்டுவதாக அமைந்தது இந்த வகுப்பு.
இதை எழுதும் போதே கிருஷ்ணன் ஐயா அவர்கள்… ஆக மொத்தம் கடைசி வரை தர்க்கம் செய்வது குறித்து கற்றுக் கொள்ளவில்லையா என்று கேட்பது போல தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை…
நித்யவனத்தில் இருந்த பொழுதுகள் முழுவதும் கிருஷ்ணன் ஐயா அவர்களின் ஒவ்வொரு நிமிடத்தையும் விடாமல் அவரிடமிருந்து அங்கிருந்த அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு பறித்துக் கொண்டே இருந்தோம் அறிதலுக்காக…
அவரும் சளைக்காமல் அனைவரின் கேள்விகளுக்கும் கேள்வியை முடிக்கும் முன்னரே ஒரே வரியில் பதில் சொல்லி அசத்திக் கொண்டே இருந்தார்.
நித்யவனத்தில் இருக்கும் போது மட்டும் ஏன் நேரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று கடிகாரத்தை சபித்துக் கொண்டு வகுப்புகள் நிறைவடைந்ததும் வேண்டாவெறுப்பாக மலையிறங்கி மீண்டும் நிகழுலகம் புகுந்த போது என்னடா வாழ்க்கை இது என்ற சலிப்பும் களைப்பும் வழக்கம் போல மேலோங்கியது.
கல்பனாத்ராய். ஜெ












