கடவுளுக்கு அப்பால்

அன்புள்ள ஜெயமோகன்,

கடவுள் மறுப்பாளர்கள் எதை முன்னிறுத்துகிறார்கள் என்ற காணொலியை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு கடவுள் மறுப்பாளன. இளமை முதல் அப்படித்தான். இப்போதும் கடவுள் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பிரார்த்தித்தனைகள் செய்வதில்லை. எதையும் சடங்காக செய்வதும் இல்லை. ஆனால் கடவுளின் இடத்தில் எதை வைக்கிறேன் என்பது முக்கியமான கேள்வி என்று தோன்றுகிறது

கடவுளின் இடத்தில் பகுத்தறிவை வைக்கிறேன் என்பது மிக எளிமையான ஒரு பதிலாக இங்குள்ள திராவிட இயக்கத்தினரால் எங்களுக்கு அளிக்கப்பட்டது.  கடவுளின் இடத்திலே வரலாற்றை வைக்கிறேன் அல்லது மனிதனை வைக்கிறேன் என்பது மாக்ஸியம் சொல்வது. ஆனால் மனிதன் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும், மனிதன் ஏன் ஒத்திசைந்து செயல்பட வேண்டும், மனிதன் ஏன் நீதி உணர்ச்சியுடனும் கருணையுடனும் இருக்க வேண்டும், மனிதன் இங்கு பிறந்து உழைத்து பிள்ளைகளை உருவாக்கி மறைந்து போவதற்கு ஏதாவது காரணம் உண்டா என்றெல்லாம் யோசிக்கும் போது அதற்கான பதிலாக மிகப்பெரிய ஒரு விடை தேவைப்படுகிறது. அந்த விடையை இந்த எளிமையான பகுத்தறிவு அல்லது மார்க்ஸிய வரலாற்று வாதம் அளிக்காது. அதற்கு நாத்திகர் தரப்பிலேயே மிகப்பெரிய தத்துவ ஞானிகள் உள்ளனர். அவற்றை கற்றுக் கொள்ளாமல் ஒருவர் இங்கு நாத்திகராக நீடிக்க முடியாது.

பெரும்பாலும் எதையுமே சிந்திக்காமல் ஒரு எதிர் நிலைப்பாடாகவே ஆத்திகர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்கும் எளிமையான மனிதர்கள்தான் இங்கே கடைசிவரை நாத்திகர்கள். தங்ளுக்கென்று விடைகளை தேடுபவர்கள் மேலும் தத்துவஞானிகள் நோக்கித்தான் செல்ல வேண்டும். தமிழகத்தில் இன்று நாம் அறிமுகப்படுத்த வேண்டியவர்கள கடவுள் இல்லாமலேயே இந்த பிரபஞ்சத்தை விளக்க முயன்ற முக்கியமான தத்துவஞானிகள்தான். காண்ட், ஹெகெல், நீட்சே , ஷோப்பனோர்வர், ஹைடெக்கர் போன்ற அத்தகைய தத்துவஞானிகள் அறிமுகப்படுத்தும் வகுப்புகளைத் தான் அஜித்தின் எடுக்கிறார் என்பது அவருடைய சிலபஸில் இருந்து தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்.

சரவணன் முத்துக்கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைமூன்றுநாட்களில் ஓவியம், கடிதம்
அடுத்த கட்டுரைகுரு நித்யா இலக்கிய அரங்கம்