அன்புள்ள ஜெயமோகன்
குரு நித்யா இலக்கிய அரங்கு நிகழப்போவதை அறிந்தேன். தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்த இலக்கியச் சந்திப்பு இப்போது மூன்றாவது தலைமுறையை அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. நான் வெளிநாட்டில் இருந்தாலும் இந்த சந்திப்புகளுக்கான செய்திகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். தொடக்க காலகட்டத்தில் இதில் கலந்துகொண்ட அன்றைய படைப்பாளிகளான ரமேஷ், பிரேம், யூமாவாசுகி, யுவன் சந்திரசேகர் போன்ற பலரை நினைவு கூர்கிறேன். அதன் பிறகு அடுத்த தலைமுறை வந்தது. இப்போது கலந்து கொள்பவர்கள் ஒரு சிலர் அன்றே இருந்தவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தங்களுக்கு அடையாளம் வந்த பிறகு சில சமயம் படைப்பாளிகளுக்கு இதன் தேவை இருப்பதில்லை. ஆனால் தேவையான அடுத்த தலைமுறை வந்து கொண்டே இருக்கிறது .இத்தனை ஆண்டுகளாக குன்றாத ஊக்கத்துடன் இதை நடத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
சம்பத்குமார்
அன்புள்ள சம்பத்,
குரு நித்யா இலக்கிய முகாமை நாங்கள் தொடங்கும் போது நாஞ்சில் நாடன், தேவதேவன், பாவண்ணன் போன்று ஏற்கனவே அங்கிகாரம் பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அன்றைய இளம் படைப்பாளிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுக்கான அடையாளமும் பார்வையும் அடைந்த பிறகு சில சமயம் இது அவர்களுக்கு தேவை இல்லாமல் ஆகிறது. தங்கள் படைப்புகளைப் பற்றி பேசும் இடங்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக தோன்றுவது இயல்புதான். ஆனால் எழுத்தாளர்களில் ஒரு சாரார் தொடர்ந்து அடுத்த தலைமுறையுடன் உரையாட ஆர்வம் காட்டுகிறார்கள். அது தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அல்ல. தங்கள் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்வதற்காகவும் அல்ல. இலக்கியம் என்ற ஓர் இயக்கம் தொடர்ந்து நிகழ வேண்டும் என்று எண்ணத்துடன், முன்னோடிகளில் இருந்து தாங்கள் பெற்றது தங்கள் அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்ற நினைபுடன் செய்வது. இலக்கிய படைப்பாளிகளை பொறுத்தவரை இந்த நிகழ்வு முக்கியமாவது இதனால்தான். நாஞ்சில்நாடன், தேவதேவன், பாவண்ணன் போன்றவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறையுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த உரையாடல் இல்லாமல் இருப்பவர்களுமுண்டு. அது பிழையும் அல்ல அது அவருடைய இயல்பு என்று கொள்ள வேண்டும்.
ஜெ











