சிந்திப்பவர்களுக்காக மட்டும்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொலிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த உரையாடல் வழியாக ஒரு பொதுவான அறிவுச்சமூகம் உருவாகி வருவதை என்னால் பார்க்க முடிகிறது. எனது அலுவலகத்தில் மூன்று பேர் இந்த காணொலிகளை பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள் எண்ணிக்கை எப்போதுமே பெரிதாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் சிந்தனையின் அடுத்த காலகட்டத்தை நோக்கி செல்லும் துடிப்பு கொண்ட ஒரு சிறுமுளை (ஸ்டெம்) ஒரு மரத்தின் வேர்க்ளிலும் அதன் தளிர்களிலும் மட்டும்தான் இருக்கும். அதில் மட்டும்தான் அந்த முன்னோக்கி செல்ல துடிப்பு இருக்கிறது. மற்ற இடங்கள் முழுக்க வாழ்வதற்காக மட்டும்தான் முயல்கின்றன, வளர்வதற்கு அல்ல.

பெரும்பாலானவர்கள் அந்தந்த நாட்களில் தேவையான சிந்தனைகளை அன்றன்று வந்து சேரும் சிந்தனைனைகளை மட்டும்தான் அறிந்து கொண்டிருப்பார்கள். அவற்றைத்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மிகச்சிலர்தான் புதியவற்றுக்கான தேடலுடன் உள்ளனர்.அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் வெவ்வேறு கோணங்களில் யோசித்துப் பார்க்கிறார்கள். புதிய புதிய விஷயங்களுக்கான தேடலுடன் இருக்கிறார்கள். ஒரு சிந்தனை புதிதாக இருப்பதனால் அது தவறானது என்று எண்ணுவதில்லை. அல்லது புதிய சிந்தனை என்பதாலேயே நிராகரிப்பதும் வெறுப்பதும் பயப்படுவதும் இல்லை. சாமானியர்கள் பெரும்பாலும் புதிய சிந்தனைகளை நோக்கி ஒரு தயக்கத்தையும் பீதியையும் தான் கொண்டிருக்கிறார்கள். அது எப்படியோ தங்கள் வாழும் உலகத்தை அழித்துவிடும் என்று நினைக்கிறார்கள்.

அதேபோன்று சாமானியர்களுக்கு உறுதியான ஏதேனும் ஒரு பற்று இருக்கிறது. ஒரு உறுதியான பாறையில் பிடித்துக் கொண்டு நிற்பது போலத்தான் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். சமகாலம் என்பது ஒரு பெரிய நதி போல. அந்த பாறையில் பிடிப்பில்லை என்றால் அவர்கள் அடித்து செயல்படுவார்கள். அந்தப் பாறை போல கட்சியையோ மதத்தையோ கொள்கையையோ கோட்பாடுகளையோ பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அத்தகையவர்களுக்கு புதிய சிந்தனைகளை கொடுப்பது கடினம். அவர்கள் அதை மறுக்கத்தன முன்ருவார்கள்.

புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய அல்லது ஏதோ ஒரு கோணத்தில் அதைப் பற்றி யோசிக்க கூடியவர்களுக்கு மட்டும் தான் உங்களுடைய காணொளிகளால் பயன் உண்டு. அத்தகையர் கொஞ்ச பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் .அவர்களிடம் தொடர்ந்து நீங்கள் உரையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆனந்த்ராஜ்

முந்தைய கட்டுரைஇலக்கிய முகாம்கள் எதற்காக?
அடுத்த கட்டுரைபிறரைக் கவனித்தல்