
இந்த பிறந்தநாள் செய்யமுடியாத ஒரு செயலை செய்து காட்டி முடித்ததில் தொடங்கியிருக்கிறது. வாழும் தமிழ் விழா அத்தனை நேர்த்தியாக நடந்தேறியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இது நமக்கான உலக அங்கீகாரத்திற்காக நாம் எடுத்த முதல் அடி, இது இன்னும் எத்தனை பிரம்மாண்டமாக மாறும் என எனக்கு தெரியும். சுனில் கிருஷ்ணன் என்னிடம் 2021 ல் சொன்னார், “ஜெ உலக அரங்கில் அறியப்பட வேண்டும். அது ஒன்றே நம் முன்னோடிகள் தொடங்கி தமிழிலக்கியத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல ஒரே வழி” என்றார். அவர் சொல் ஒரு முகூர்த்தம். அக்காலகட்டத்திலேயே அறம், ஏழாம் உலகம் மொழியாக்கம் தொடங்கப்பட்டன. அன்றிலிருந்து நாம் எத்தனை தூரம் பயணித்து வந்திருக்கிறோம் எனப் பார்க்கிறேன். இன்னும் செல்லப்போகும் தூரமும் தெரிகிறது.
எனக்கொரு எண்ணமுண்டு அது நீங்கள் என்னுள் விதைத்தது. பொதுவாக ஒரு புத்தாண்டை எதை உத்தேசித்து தொடங்குகிறோம் அல்லது எந்த சிந்தனையை ஒட்டி தொடங்குகிறோமோ அதுவே அவ்வாண்டு முழுக்க தொடரும். இந்தாண்டு தொடக்கத்தில் நீங்கள் குறிப்பிட்ட ‘Spectator to Performer’ என்ற சொல்லே மந்திரம் போல் என்னுள் ஒலிப்பதைக் காண்கிறேன். நீங்கள் சொன்னது போல் நான் இங்கே நவீனாக வாழ்வதற்கு அத்தனை ஒன்றும் விஷேசமான பொருளில்லை. (இது எனக்கு வரலாற்றை படிக்கும் போது திடீரென ஒரு அதர்வை என்னுடல் ஏற்படுத்தும்). ஆனால் நாம் இங்கே வந்ததற்கான பொருளை ஒவ்வொரு நாளும் நாமே நமக்கு சிறுக சிறுக சேர்க்கும் மகிழ்ச்சி தான் இவ்வாழ்க்கை. பச்சை கூழாங்கல்லை உங்க கை ஏந்தியிருப்பதைப் பார்த்தேன். அது எனக்களித்தது அந்த செய்தியையே. தான் இங்கே வந்ததற்கான கூழாங்கற்களை சேகரித்த ஒருவரின் கை. அது என் ஆசிரியனின் கை. அன்று இடைவிடாது அந்த கையையே பல மணிநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவித சொல்ல தெரியாத துள்ளல் மகிழ்ச்சி என்னுள் அன்று எழுந்தது. காரணம் சொல்லத் தெரியவில்லை. நானும் எனக்கான கற்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். என்னுள் என் ஆசிரியனின் தாக்கம் என இத்தருணத்தில் சொல்லத் தோன்றுவது அந்த பச்சை கூழாங்கற்களையே!
இந்நாட்களில் தினமும் மேலே நிலாவை பார்த்து ஆஹா எத்தனை அழகானது எனச் சொல்லிக் கொள்கிறேன். மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெ. இன்னும் இரு நாட்களில் சந்திப்போம்.
நன்றி,
நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.











