அன்பின் ஜெ,
நினைவை மீட்டி பார்க்கையில் கடந்த மாதத்தில் எனக்கு வாய்த்த பொற்கணங்கள் யாவும் நித்யவனம் அளித்து கொடையாகவோ அல்லது அதுவொரு துவக்கப்புள்ளியாகவோ இருந்திருக்கிறது. நாவல், சிறுகதை பயிற்சி முகாம் முடித்து வந்தவுடன் வகுப்பில் எடுத்த குறிப்புகளை நண்பர்களுடன் விவாதித்து தொகுத்துக் கொள்ள முயன்று வருகிறேன். வகுப்பில் நீங்களே குறிப்பிட்டது போல மூன்றுநாள் வகுப்பை எழுத்து வடிவில் மாற்றினால் ஐநூறு முதல் ஆயிரம் பக்கம் வரும். சேர்ந்தமர்ந்து விவாதம் செய்து இப்பணியை ஒரு வாரத்திற்கு தொடரலாம் என்றிருக்கிறேன். இதற்கிடையே வகுப்புக்கு வெளியே அடைந்த அக அனுபவத்தை எழுதிப் பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மே மாதத்தில் வெள்ளிமலையில் நடந்த இரண்டு வகுப்புகளில் பங்கெடுத்திருக்கிறேன். முதலாவது ஆசிரியர்கள் கீதா, லலிதா நடத்திய ஓவியப் பயிற்சி வகுப்பு. இரண்டாவது ஆசிரியர் ஜெ நடத்திய சிறுகதை, நாவல் பயிற்சி வகுப்பு. இரண்டு வகுப்புகளுமே உள்ளடக்க ரீதியிலும் அக அனுபவம் சார்ந்தும் எனக்கு முக்கியமானவை. ஒரே மாதத்தில் இரு முழுநிலவுகள் என்பது அரிய நிகழ்வுதான். அதேசமயம் மனது வைத்தால் அரியனவற்றை நமக்கு நாமே நிகழ்த்திக் கொள்ள முடியும் என்றும் படுகிறது. நிலவை ஞானத்தின் பித்தின் குறியீடாக வகுத்துள்ளது மானுடம். ஆம், இம்மாதம் இருமுறை முழுநிலவை தரிசித்திருக்கிறேன். விண்ணை நோக்கிய தொடர் விளிகள் எதுவும் வீண் போவதில்லை.
டி ஏ பாரி












