இஸ்லாமை கற்பவர்கள் உண்டா?

அன்புள்ள ஜெயமோகன்,

தொடர்ச்சியாக இஸ்லாமிய சூபி தத்துவ வகுப்புகளை உங்கள் முழுமை அறிவு சார்பில் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்களா? ஏனென்றால் தமிழகத்தில் அப்படி இந்துக்கள் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதுதான் என்னுடைய மனப்பதிவாக இருக்கிறது .எனினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

ஆ முகமது கனி

 அன்புள்ள கனி,

 முழுமை அறிவு சார்பில் நாங்கள் நடத்தும் பெரும்பாலான வகுப்புகள் எதிர்பார்த்ததற்கு மேலான பங்கேற்பையும் ஆதரவையும்தான் இதுவரை பெற்றுள்ளன. அந்த வகையிலே இஸ்லாமிய வகுப்புகள் போதிய அளவுக்கு ஏற்பை  பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மதவெறியோ மதப்பிரச்சாரமோ இல்லாமல் இப்படி ஒரு மெய்யியல் வகுப்பு வேறொன்று தமிழகத்தில் இல்லை. ஆகவே இந்த வகுப்பு நிகழ்ந்தாகவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

என் எண்ணம் முன்பு என்னவாக இருந்தது என்றால் தமிழகத்தில் அறிவு சார்ந்த தேடல் கொண்டவர்கள் பெரும்பாலானவர்களிடம் இஸ்லாம் பற்றிய ஒவ்வாமை எதுவும் இல்லை என்பதுதான். ஏனெனில் இங்கு மதச்சார்பின்மை பற்றி எந்த பேச்சு வந்தாலும் உடனடியாக ஏறத்தாழ அனைவருமே மதச்சார்பின்மை, இஸ்லாமிய ஆதரவு ஆகியவற்றைப் பேசுவதைத்தான் நான் பார்க்கிறோம். இஸ்லாமிய சகோதரர்கள் என்ற சொல்லாட்சி காதல் விழுந்து கொண்டே இருக்கிறது. இஸ்லாம் பற்றி பிரியாணிக்கு அப்பால் எதையாவது தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள் சிலர் இருப்பார்கள் என்று நான் நம்பினேன். அவ்வாறல்ல  என்று தெரிந்த போது அதிர்ச்சியும் ஏற்படவில்லை .ஏனெனில் நம் பெரும்பாலான பொது நிலைப்பாடுகள் வெறும் பாவனைகள் மட்டும்தான் . வெறும் சர்ச்சைக்காக நாம் எடுக்கும் ஒரு தரப்பு மட்டும்தான். நமக்கு ஆழத்தில் இந்த அக்கறையும் இல்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். அந்த வகையில் பார்த்தால் தொடர்ந்து எல்லா வகுப்பிலும் பெரும்பாலும் இந்து மாணவர்கள் கலந்துகொண்டு இஸ்லாமிய தத்துவத்தையும் மெய்யெல்லையும் கற்பது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அவர்கள் அரிதானவர்கள்தான்.

 ஆனால் இன்னொரு கேள்வி இருக்கிறது இஸ்லாமில் எந்தவிதமான ஒவ்வாமையும் இல்லாமல் இஸ்லாமிய மெய்யியலை அறிவதற்கு மிகுந்த அக்கறை கொண்டுள்ள ஒரு இந்து சுற்றம் வந்து கூடும் ஓர் அவை என்பது ஓர் இஸ்லாமிய இளைஞனுக்கு எத்தனை அரிதான ஒன்று ! தன் குறுகிய மத வட்டத்திற்கு அப்பால் நட்பை உருவாக்கிக் கொள்வதற்கான எவ்வளவு பெரிய வாய்ப்பு! அப்படி நட்பைத்தேடும் ஒரு சில இஸ்லாமியராவது இருக்கவேண்டும் அல்லவா? ஆனா எனக்கு தெரிந்து இதுவரைக்கும் ஒரு இஸ்லாமிய மாணவன் கூட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டதில்லை. அதையும் கவனிக்கவேண்டும் அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசகர் வட்ட விருது விழா- இராச மணிமேகலை