அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் உங்கள் கட்டுரைகளிலும் பேச்சுகளிலும் தத்துவத்தைப் பயில்வது என்பது சமூகத்தையும் அரசியலையும் அறிவியலையும் புரிந்து கொள்வதற்கான ஒரு நிபந்தனையாக முன் வைப்பதாக தெரிகிறது. அப்படி சொல்லிவிட முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
இரா.சந்திரசேகர்.

அன்புள்ள சந்திரசேகர்,
நிபந்தனை என்று அதைச் சொல்ல மாட்டேன். ஒவ்வொருவரும் அவரவர் துறையில் தேர்ச்சி அடைவதுதான் வெற்றிக்கான வழி. ஆனால் அந்த தேர்ச்சியை சராசரிக்குமேல் அடைவதற்கும், தனித்தன்மையை உருவாக்கிக் கொள்வதற்கும் தத்துவார்த்தமான கல்வி மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது.
தத்துவம் என்பது தக்கபூர்வமாகச் சிந்தனைகளை முறைப்படுத்திக் கொள்ளவும், அடிப்படைக் கேள்விகளை மட்டுமே பிரித்தெடுத்து விவாதிக்கவும் நமக்கு பயிற்சி அளிக்கிறது. இது ஒவ்வொரு துறையிலும் உள்ள சிந்தனைகளை கூர்மையாக முன்வைக்கவும் புதியவற்றை அடையவும் உதவுகிறது.
அண்மையில் இதை நேரில் உணர்ந்த ஒரு தருணம். நியூயார்க்கில் விரிந்த தத்துவ நோக்கில் அஜிதன் முன்வைத்த கருத்துக்களே அங்கு வந்திருந்த அமெரிக்க எழுத்தாளர்களை கூடுதலாக கவர்ந்தன. இலக்கியச் சிந்தனைகளை அவர்கள் மதித்தனர். ஆனால் தத்துவார்த்தமான பயிற்சி என்பது ஒரு படி கூடுதல் தகுதியை அளித்ததைக் கண்டேன். அங்கு வந்த அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் அஜிதனிடம் ஒரு விரிவான பேட்டியை எடுத்து அதை ஒரு சர்வதேச இதழில் வெளியிடவிருக்கிறார்.
அந்த கூடுதல் தகுதி அனைத்து வளரும் தலைமுறையினருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றுதான் நான் எண்ணுகிறேன். அதை வலியுறுத்துகிறேன்.
தத்துவப் பயிற்சி இல்லையேல் நாம் சுயமாக சிந்திக்கும் எளிமையான கருத்துக்கள் எல்லாம் ஏற்கனவே தத்துவத்தில் பழகிப் போனவை என்று நமக்குத் தெரிவதில்லை. தத்துவம் ஏற்கனவே சிந்தித்ததற்குக் கூடுதலாக ஏதேனும் நாம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை தத்துவக்கல்வி உருவாக்குகிறது. தத்துவ அறிமுகம் இல்லாதவர்கள் எளிமையான சுயக் கருத்துக்களில் சுற்றி வந்து கொண்டிருக்கையில் தத்துவம் அறிந்தவர்கள் மானுட சிந்தனை அடைந்த எல்லையில் இருந்து ஒரு அடியாவது முன் வைக்கமுயல்வதை பார்க்கலாம். அதுவே இன்றைய ஏ.ஐ யுகத்தின் அவசியத் தேவை.
ஜெ












