உதிரிமேற்கோள்கள்.

அன்புள்ள ஜெ,

உங்கள் காணொலிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி இருக்கிறது.

உங்களுடைய கடல் போன்ற நாவல்களில் இருந்து உதிரி வரிகள் மேற்கோளாக காட்டப்படுகின்றன. சாத்தாந் தெய்வம் போன்ற பைனரிகள் காட்டப்படுகின்றன. ஆனால் அந்த நாவல் அந்த பைனரியைச் சொல்வது அல்ல. அது அந்த பைனரிக்கு அப்பால் செல்லமுயல்வது.

இவ்வாறு ஒரு படைப்பிலிருந்து உருவி உதிரிச்செய்திகளை மேற்கோள் காட்டலாமா? அது அந்த படைப்பை பற்றியும் அந்த ஆசிரியரை பற்றியும் தவறான எண்ணத்தை உருவாக்கும் அல்லவா?

இலக்கிய படைப்புகளை எப்படி படிக்க வேண்டும் ஒட்டுமொத்தமாக எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி நீங்கள் ஏன் ஒரு வகுப்பை தொடர்ந்து நடத்தக் கூடாது?

செந்தில்குமார் அர்விந்த்

அன்புள்ள செந்தில்,

ஓர் இலக்கிய படைப்பின எல்லா வரியும் அந்த இலக்கிய படைப்பின் ஒரு பகுதிதான். துளியில் முழுமை எப்படியோ இருந்துகொண்டிருக்கும்.ஒரு மொழித்துண்டு ஓர் இலக்கிய படைப்பில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும்போது அது உங்கள் மூளையைச் சீண்டும் என்றால் அந்த இலக்கியப் படைப்பை முழுமையாக அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் உருவாகிறது .அது ஒரு தூண்டில்தான்.

ஒரு கருத்தை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் படித்த உடனே ‘அப்படி என்றால்?’ என்ற அடுத்த கேள்வி எழும் என்றால் நீங்கள் அந்த படைப்பை நோக்கி செல்கிறீர்கள். அப்படி  அல்லாமல் துண்டுச்செய்தியே போதும் என நினைப்பவன் இலக்கியவாசகன் அல்ல. அவன் என்ன நினைத்தால் என்ன?உலகம் முழுக்க பெரும்படைப்புகளில் இருந்து உதிரி வரிகள் இவ்வாறு தான் கையாளப்படுகின்றன.

இலக்கிய படைப்புகளை படிப்பது பற்றிய, புரிந்து கொள்வது பற்றிய வகுப்புகளை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஜூன் மாதமே கூட ஒரு வகுப்பு அவ்வாறு நிகழ்ந்தது.

ஆனால் இலக்கியவாசகர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியப் படைப்புகளை புரிந்து கொள்ளும் பொருட்டு வாசிப்பதில்லை. பொழுதுபோக்காகவோ, செய்திகளைத் தெரிந்து கொள்ளவோ மட்டுமே படிக்கிறார்கள். கூடுதலாக புரிந்து கொள்ள விரும்புவர்கள மட்டுமே பங்கெடுக்கிறார்கள்.

ஜெ

கடல் ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஇலக்கியத்தை அறிதல்…