அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் காணொலி ஒன்றில் உங்கள் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் ஆக்கி அதன் பொருட்டு நீங்கள் பெருமிதம் அடைவதை பற்றி பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அண்மையில் ஒரு எழுத்தாளர் (உங்கள் மொழியில் சொல்வதாக இருந்தால் சோட்டா எழுத்தாளர்) நீங்கள் உங்கள் பிள்ளைகளை முன்னிறுத்துகிறீர்கள் என்று சீற்றமாக பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் சொன்னதையே நான் அப்போது சொன்னேன்.
“உங்கள் பெற்றோர் உங்களை பெரும் பணம் செலவு செய்து கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்து மறுபடியும் பணம் செலவு செய்து வேலை வாங்கித் தந்திருக்கிறார்கள். அது முன்னிறுத்துவது அல்லவா ?அதை பெற்றோரின் கடமையென்று நினைக்கிறீர்கள். ஆனால் ஒருவர் தன் மகனை அல்லது மகளை அறிவுஜீவி ஆக்க வேண்டும் என்று நினைத்தால் அதை செய்யக்கூடாது என்று சொல்கிறீர்கள்.அப்படி என்றால் உங்கள் அறிவுத்தகுதி என்ன?” என்று கேட்டேன்.
“ஒருவர் தன் மகனை அல்லது மகளை எந்தத் தகுதியும் இல்லாமலேயே மிகப்பெரிய பதவிகளில் கொண்டு வந்து அமர்த்துவதுதான் நெப்பாட்டிசம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயமோகனின் மகனோ மகளோ இங்கே ஒரு நல்ல எழுத்தாளருக்கு இருக்கும் அறிவாற்றலையும் வாசிப்பையும் விட பல மடங்கு ஆற்றலும் வாசிப்பும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதை அவர்களின் உரையாடல்கள் தெளிவாக காட்டுகின்றன. அவர்கள் தங்களை நிரூபித்து இருக்கிறார்கள். அவர் அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறார். ஊக்குவிக்கிறார். அதுதான் எழுத்தாளனான தந்தை செய்யவேண்டியது ” என்றேன்.
“அவரே சொல்வது போல அந்த வாய்ப்பை அதில் பாதி அளவு திறமை இருக்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் அமைத்துக் கொடுப்பதற்காக முயல்கிறார். அவர்களை சர்வதேச அளவில் முன்னிறுத்தவும் செய்கிறார். அவர் தன் பிள்ளைகளை பிற பெற்றோரைப் போல அடக்கி ஒடுக்கி சிந்தனையில் இருந்தும் வாசிப்பில் இருந்தும் வெளியே தள்ளி, ஏதாவது வேலையில் அமர்த்திவிட்டு கை கழுவியிருந்தால்தான் அவர் நல்ல தந்தை என்று சொல்வீர்கள். இப்போது அவர் செய்வதெல்லாம் பிழை என்று சொல்கிறீர்கள். காரணம் நீங்கள் நம் சமூகத்தின் கூட்டுமனநோய்க்கு ஆளாகி இருக்கிறீர்கள். ஒரு நூறாண்டுகளில் உங்கள் தலைமுறைக்கு அந்த மனநோய் குணப்பட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்” என்று சொன்னேன்.
நீங்கள் அந்த உரையில் அலர் கூறும் அற்ப்பர்கள் என்று சொல்பவர்கள் இவர்கள்தான். நீங்கள் சொன்ன அந்த பதில் இங்கே பதிவாக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல படைப்பூக்க்ம் கொண்ட குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் அது முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளின் அறிவு சார்ந்த வெற்றிக்காக பெருமிதம் கொள்ளலாம் என்றும், அதுதான் உண்மையான பெருமிதம் என்றும் காட்டும் ஒரு சான்றாக அது இங்கு இருக்க வேண்டும்.
இன்று எனக்கு வயது 54 .என் பெற்றோரின் பதற்றமும் உலகியல் பார்வையும் என்னை கட்டாயப்படுத்தியிருக்காவிட்டால இன்று நான் கலைத்துறையில் நானே நிறைவடையும் ஓர் இடத்தைச் சென்று அடைந்திருக்க முடியும். அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன் .நமது சூழலில் உள்ள பொதுவான மனநிலைக்கு அவர்கள் அடிமையாகி விட்டார்கள். அதற்கு அப்பால் யோசிக்கும் சூழலோ அறிவுத்திறமை அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் தேவைக்கும் மேல் பணவசதி இருந்தது. அந்த பதற்றத்திற்கான தேவையே இல்லை.
என் வாழ்க்கை இன்று வீணாகிப் போன ஒன்றாகத்தான் கருதுகிறேன். பிறர் பார்வையில் நான் மிக வெற்றிகரமான ஒரு அதிகாரி. மிக வசதியான வாழ்க்கை வாழ்பவன். ஆனால் நான் எதுவோ அது எனக்கு கை வரவில்லை. எந்த வகையிலும் மகிழ்ச்சியையோ நிறைவையோ நான் அடையவுமில்லை. ஒரு மகனின் இடத்தில் வைத்துதான் இந்த மனக்குமுறலை பதிவு செய்கிறேன்.
நமது சூழல் இருக்கும் உலகியல் அற்பத்தனத்தில் இருந்து ஒரு அரை சதவீதம் பேராவது வெளி வருவார்கள் என்றால் நீங்கள் சொல்வது போல படைப்பூக்கம் கொண்ட சில குழந்தைகளாவது இரும்புச் சிறைக்குள் அடைப்படாமல் தப்பிக்கலாம்.
சி.












