மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள்

அஜிதன் நடத்தி வரும்   மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள் இப்போது உலகின் வேறு நாடுகளின் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்க மேலைத்தத்துவப் பேராசிரியர்களும் அஜிதனின் விரிவான கல்வியை உணர்ந்து, நேரடி உரையாடலில் உள்ளனர். அமெரிக்க அறிஞர் ஒருவருடனான ஒர் உரையாடல் அமெரிக்காவில் வெளியாகவுள்ளது.

ஐரோப்பிய தத்துவம் மிக விரிவானது. அதை  அறிமுகம் செய்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல. ஆனால் எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவு தூரம் நமது புரிதலை மேம்படுத்தி, நம்மை அறிதலின் உவகையை நோக்கிக் கொண்டு செல்வது அது.

சமகால அரசியல் கோட்பாடுகள், சமூகவியல் கோட்பாடுகள், உளவியல் கோட்பாடுகள் மட்டுமல்ல; இன்றைய நிர்வாகவியல் கோட்பாடுகளுக்குக்குக்கூட அடிப்படையாக அமைந்திருப்பவை மேலைச்சிந்தனைகளே. நம் கல்வியும் தொழிலும் தொழில்நுட்பமும் எல்லாமே அதன்மேல்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆகவே மேலைத்தத்துவச் சிந்தனையை அறிந்திருப்பதென்பது இன்றுள்ள தொழில் உட்பட அனைத்தையுமே ஆழமாகவும் ஒட்டுமொத்தமாகவும் புரிந்து கொள்வதற்கான ஒரு அடிப்படையை அளிப்பது.

இன்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒரு குறைந்தபட்சக் கல்வி என்று இதைச்சொல்லலாம்.ஆகவே தான் இதற்கு இத்தனை வரவேற்பு  உலகமெங்கும் இன்று உள்ளது. தமிழகத்தில் மேலைச்சிந்தனையை முறையாக அறிமுகம் செய்யும் முதன்மையான வகுப்பு என்றே இதைச் சொல்ல முடியும்.

பழைய கிரேக்கச் சிந்தனையில் இருந்து தொடங்கி, இன்றுள்ள தத்துவ சிந்தனைகளை வரை மூன்று நாட்களில் செறிவாகவும் தீவிரமாகவும் அறிமுகம செய்யும் வகுப்பு இது. ஒவ்வொரு தத்துவ சிந்தனையும் என்ன சொல்கிறது என்று அஜிதன் மேற்கோள் பாடம் நிகழ்த்துவதில்லை. மாறாக நவீன மனிதன் எதிர்கொள்ளும் அறம் ,அதிகாரம், உறவுகள், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவு என வெவ்வேறு தளங்களில் எழும் அடிப்படைக் கேள்விகளை தொட்டுச் சிந்திக்கச் செய்து அதன் விடைகளை புகழ்மிக்க தத்துவ சிந்தனையாளர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று விளக்குகிறார்.

அந்தக் கல்வி என்பது சிந்திப்பவர்களுக்கு அறைகூவலானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவஞானியில் தங்களுக்கான சிந்தனையாளனை கண்டுகொள்கிறார்கள். சிலர் நீட்சேயில். சிலர் ஹெகலில். சிலர் ஷோப்பனோர்வரில். அந்தக் கண்டடைதல் வாழ்நாள் முழுக்க நீளும் ஒரு தொடக்கம்.

ஆர்வம் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

நாட்கள் ஜூலை 24 25 மற்றும் 26

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைகுழந்தைகள், கடிதம்