மேலைத்தத்துவம் என்பது வெறும் தர்க்கப் பயிற்சியோ, கருத்தியல் விளையாட்டோ அல்ல. அது மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றின் உறவைப் பற்றிய அடிப்படையான கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான தரிசனங்களை உருவாக்கிய ஒரு மாபெரும் அறிவுசார் மரபாகும். உலகம் எவ்வாறு இயங்குகிறது, இயற்கையின் விதிகள் என்ன, மனித வாழ்வின் நோக்கம் என்ன, அறம் என்றால் என்ன, ஒழுக்கநெறிகள் எதன் அடிப்படையில் உருவாகின்றன போன்ற கேள்விகளுக்கு பல நூற்றாண்டுகளாக மேலைத்தத்துவம் பதில்களைத் தேடியுள்ளது.
அத்துடன், இயற்கையின் பல்வேறு அம்சங்கள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புகொள்கின்றன, காரண–காரிய உறவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, உண்மையை அறியும் முறைகள் என்ன என்பதையும் ஆழமாக ஆராய்ந்துள்ளது. இந்த அறிவாராய்ச்சிகளின் தொடர்ச்சியில்தான் நவீன அறிவியல் முறை உருவாகியது. அறிவியல் என்பது தத்துவத்திலிருந்து முற்றிலும் பிரிந்த ஒரு துறை அல்ல; மாறாக, மேலைத்தத்துவத்தின் பல நூற்றாண்டு சிந்தனைகளின் இயல்பான பரிணாமமாகவே அதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, இயற்பியல், உயிரியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற நவீன அறிவியல்களின் பின்னணியில் உள்ள அடிப்படையான சிந்தனைகளைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மேலைத்தத்துவத்தின் அறிமுகம் இன்றியமையாதது. மேலைத்தத்துவத்தை அறியாமல் நவீன அறிவியலின் ஆழமான தத்துவ அடித்தளத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம்.
இந்த வகுப்பில் பங்கேற்பவர்கள் வெறும் தத்துவ வரலாற்றை மட்டுமல்ல, நவீன உலகின் அறிவியல், ஜனநாயகம், மனித உரிமைகள், பகுத்தறிவு, தனிமனித சுதந்திரம் ஆகியவற்றின் அறிவார்ந்த வேர்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேலைத்தத்துவ வகுப்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எஸ்.அருண் மாணிக்கம்












