நவீன மருத்துவ அறிமுக வகுப்புகள் நாட்கள் ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9
தொடர்புக்கு [email protected]
அன்புள்ள ஜெயமோகன்,
தமிழில் இன்று அதிகமாகப் பேசப்படும் பேசுபொருள் மருத்துவம்தான் என்று தோன்றுகிறது. ரயிலிலோ, பேருந்திலோ, எந்தப் பொது இடத்திலோ நான்கு பேர் சேர்ந்தாலும் உரையாடல் உடல்நிலை, உணவு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என்பதிலேயே முடிகிறது. ஆனால் நவீன மருத்துவத்தின் அடிப்படைகளை எத்தனை பேருக்குத் தெரியும்?
உதாரணமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதில் கணையத்தின் (Pancreas) பங்கு என்ன என்பதே தெரியாத ஒருவர், நீரிழிவு நோயை எப்படி புரிந்துகொள்வார்? அதனால் அது வெறும் “இனிப்பால் வரும் நோய்” என்ற புரிதலுக்கு வந்துவிடுகிறார். வேப்பிலை, கடுக்காய், பாகற்காய் சாறு போன்றவற்றை மருந்தாகக் கற்பனை செய்து கொள்கிறார். இவ்வாறான கற்பனைகளின் வழியாகத்தான் நம்மில் பெரும்பாலோர் மருத்துவத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆச்சரியமாக, சிந்திக்கும் பழக்கமுள்ளவர்கள்கூட மருத்துவம் என்று வந்துவிட்டால் பொதுப்புத்தியையே நம்புகிறார்கள். இளைஞர்களின் நிலை இன்னும் மோசம். நோய் வந்தால் மருத்துவர் பார்த்துக்கொள்வார் என்று நினைக்கிறார்கள். ஆனால் எப்போது மருத்துவரை அணுக வேண்டும், எப்போது வாழ்க்கைமுறையை மாற்ற வேண்டும், எந்த அறிகுறியை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கான அடிப்படை அறிவே இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத நிலை வந்த பிறகுதான் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.
இந்த அறிவின்மையே நம் சமூகத்தை நோய்வாய்ப்படுத்துகிறது. இளைஞர்கள் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவதை சாகசமாகக் கருதுகிறார்கள். முதியவர்கள் நீரிழிவுக்கு கடுக்காய் போதும் என்று நம்புகிறார்கள். நோய் முற்றிய பிறகு நவீன மருத்துவத்தை நாடுகிறார்கள்; பின்னர் அதையே குறை சொல்கிறார்கள்.
நவீன மருத்துவம் என்பது “நோயும் மருந்தும்” பற்றிய அறிவு மட்டுமல்ல. மனித உடல் என்ற அற்புதமான அமைப்பு எப்படி இயங்குகிறது, உறுப்புகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்புகொள்கின்றன, ரத்த ஓட்டம், நரம்பு மண்டலம், ஹார்மோன்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவை எப்படி ஒன்றை ஒன்று பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளச் செய்யும் அறிவியல். அந்த அறிவு தன்னிச்சையாகவே உடல்மீது ஒரு புதிய மரியாதையையும் வியப்பையும் உருவாக்குகிறது.
அதனால்தான் உங்கள் மருத்துவ வகுப்புகள் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றின. இந்த அடிப்படை உடலறிவு கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அத்தகைய ஒரு தொடக்கம்கூட தமிழ்நாட்டில் இன்னும் உருவாகவில்லை என்பதுதான் வருத்தம்.
எம்.ஆதிசேஷன்.










