கிறிஸ்தவம், விடுதலை.

அன்பிற்குரிய அய்யா,

கிட்டத்தட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் என் வாழ்வில் ஒன்றுமே நிகழாமல் கடந்திருக்கிறது.

நினைவுகளாக இந்த எட்டு ஆண்டுகளையும் தொகுக்க முயற்சிக்கையில் ஒன்றுமே எஞ்சவில்லை என்பது திகைப்பைத் தருகிறது. சில நிமிடங்களில் எட்டு ஆண்டுகளும் கடந்துவிட்டதைப் போல.

வாரக் கணக்கில் வீட்டை விட்டு வெளியே போகாமல் சில முறை இருந்திருக்கிறேன் என்பதைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதைப் போலவே முதுமையும் இறப்பும் கூட சில நிமிடங்களில் அருகில் வந்து நிற்கக்கூடும்.

‘சலித்திருப்பவன் தன் மரணத்தைத் தவமிருக்கிறான்’ என்று வெய்யோனில் எழுதியிருந்தீர்கள். கொள்ளளவை மீறி நிறைந்து வழியும் அணை போலான ஐம்புலன்களால் ஒன்றையும் நினைவாகத் திரட்டலாகாதபோது, மட்க முடியாத ரப்பர் துண்டைப் போல உடல் உணர்கிறது.எவை நினைவுகளை உருவாக்குகின்றன, எவை அந்நினைவுகளுக்கான அர்த்தங்களைத் தருகின்றன, எதனால் ஒரே கால அளவு சிலரால் நீண்டதாகவும் சிலரால் குறுகியதாகவும் உணரப்படுகிறது என்பதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

‘ஏதும் நிகழாத எளிய வாழ்க்கை ஆன்மாவைச் சிறுமை செய்கிறது’ என்பது பிரயாகையில் திரௌபதி சொல்லும் வரி.அனுபவங்கள் குறைவே ஆயினும், கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் சூழ்நிலையையும் சிறப்பாக வரிகளால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை வெண்முரசு ஒவ்வொரு நாளும் கற்றுத்தருகிறது.அத்தகைய ஒன்றை நான் பிறந்த கிறிஸ்தவ மரபும் எனக்கு அளித்திருக்கிறது.

2019-இல் ஓஷோவைப் படிக்க ஆரம்பித்து, 2022-இல் ஓஷோ கம்யூனில் இருந்து புதிய பெயரைப் பெற்றுக்கொண்டேன். அதன்பின் இரண்டு வருடங்கள் சென்னையின் ஈஷா யோகா கோடம்பாக்கம் மையத்தில் நிகழும் வகுப்புகளில் தன்னார்வலராகக் கலந்து கொண்டிருக்கிறேன்.ஆனால், இந்த பைபிள் வசனங்கள் எப்போதுமே உற்ற துணையாகவே இருந்திருக்கின்றன.

பைபிளின் வரையறைகளை மீறிச் சிந்திக்கலாகாது என்னும் குடும்ப-சமூக எச்சரிக்கைகள் உருவாக்கும் ஒவ்வாமையும் உண்டு.நான் ஏழாம் வகுப்பிற்கு உடனுறைப் பள்ளியில் சேருவதற்கு முன்வரை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கத்தோலிக்க மறைக்கல்வி வகுப்புகளில் பங்கெடுத்திருக்கிறேன்.

அக்டோபர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த பைபிள் வகுப்பில் கலந்து கொண்டபோது ஒன்று புரிந்தது. நான் பிறந்த சமயம் எனக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மிகக் கச்சிதமாகவே ஆற்றியிருக்கிறது என.ஆசிரியர் சிறில் அலெக்ஸ் அவர்கள் கற்பித்தபோது எந்த பைபிள் வசனமுமே எனக்குத் தெரியாததாக இல்லை.பாடலாக இசையமைக்கப்படாத ஏதேனும் பைபிள் வசனம் உண்டா என்றே தோன்றியது. அவர் வசனங்களை வாசித்துக்காட்ட, எனக்குள்ளே அவை சார்ந்த பாடல்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. ஏதோ கேரூபீன்களும் சேராபீன்களும் பாடிக்கொண்டிருப்பது போல.

பழைய ஏற்பாட்டின் ‘இணைச்சட்டம்’ புத்தகத்தில் வரும் யூத சட்டமுறைகளைப் பற்றி விளக்கும்போது, சிறில் சார் ஒரு சமூகம் ஒருவரின் திருமணம் அல்லது குழந்தைகள் குறித்த தனிப்பட்ட முடிவுகள் சார்ந்து கேள்வி கேட்பதில் உள்ள நியாயத்தைப் பற்றிச் சொன்னார். ஒரு தனிமனிதனுக்கு அத்தனை வகையான சௌகரியங்களையும் பிறப்பிலேயே ஏற்படுத்தித் தரும் சமூகத்திற்கு சிலவற்றைக் கேட்கும் உரிமை உண்டு என.

அப்போது என் குடும்பத்திடமோ உறவினர்களிடமோ பைபிள் சார்ந்த வம்பு விவாதங்களில் ஈடுபடுவதில் ஒரு தவறு உள்ளது என்று தோன்றியது. சமூகத்திற்கு மறு உபகாரமாக எதையுமே செய்யாமல் விமர்சனம் மட்டும் செய்வதில் ஒரு அயோக்கியத்தனம் உள்ளது என்று.

வகுப்பு இடைவேளை நேரங்களில் கேள்வி கேட்கும்போது, சிறில் சாரிடம் கேட்டது: ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று’ எனக் கடினமான விதியைச் சொல்லும் இயேசு கிறிஸ்து, நம்மைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி அதிலிருந்து ஆதாயம் காண்பவர் (Guilt trip) போலத் தோன்றவில்லையா என்று. அத்தகைய ஒழுங்குமுறைகளைச் சொல்லும் அவரே அனைத்து பாவங்களையும் நொடிப்பொழுதில் மன்னிக்கும் தயாளம் கொண்டவராகவும் இருக்கிறாரே என்றார்.

பழைய ஏற்பாட்டில் கடவுள், ‘நான் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறேன்’ (I am a jealous God. Exodus 20:5) என்கிறார். ஒரு இடத்தில், ‘பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன்’ (Vengeance is mine. I will repay. Deuteronomy 32:35) என்கிறார். ஒரு கடவுளுக்கு இவ்வகை உணர்வுகள் இருக்கலாமா என்று கேட்டேன்.

சிறில் சார், அது தம் மக்கள் மீது கடவுள் கொண்டுள்ள அலாதியான அன்பையும், ஒரு மனிதன் கடவுளோடு பேசும்போது உள்ள நெருக்கத்தையும் அந்நியோன்யத்தையுமே காட்டுகிறது என்றார்.கடவுள் பழிதீர்க்கையில் தம் இனத்தார், பிற இனத்தார் எனும் பாகுபாடும், பிற இனத்தாருக்கான நீதியைப் பொருட்படுத்தாமையும் நிகழ்கிறதே என்றபோது, இவ்வகை நம்பிக்கை சார்ந்த உரையாடல்கள் முற்றிலும் அன்புணர்வுடைய தளத்தில் நிகழ வேண்டியவை என்று புனித அகஸ்டின் சொல்வதை விளக்கினார்.

பங்கேற்பாளராக வந்திருந்த அஜிதன் அண்ணா, இவ்வகை நாத்திகக் கேள்விகள் ஒரு வகை வெறுமைக்கு இட்டுச் செல்லும் என்றும், ஆன்மீகமான ஒன்றை மறுத்துவிட்டு அந்த வெற்றிடத்தை வேறெதையும் கொண்டு இட்டு நிரப்பலாகாத எதிர்மறைத் தன்மையை அடைகிறார்கள் என்றும் நான் சொல்லும் மொழியைவிடச் செறிவான மொழியில் சொன்னார்.

“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” என்று தேவக்குமாரன் சொல்லும் அந்த முரண் மிகுந்த இனிய வசனத்தை நினைத்துக்கொண்டேன்.

இயேசு தாவீதின் குமாரன் என்று குலமுறையைச் சொல்லி புதிய ஏற்பாடு தொடங்கியது. ‘கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெருவாள்’ என்று சொல்லப்பட்டிருக்கையில், இயேசு எப்படி ஒரு மனிதரின் வழி வந்தவராக இருக்க முடியும் என்றபோது, பைபிளின் மூலமொழிப் பிரதியில், கன்னி என்ற வார்த்தை இதுவரை கருத்தரிக்காதவர் என்ற பொருளில் அமைந்திருப்பதாகச் சொன்னார்.

எனக்குப் பிடித்த வசனங்களில் ஒன்று, ‘மாயை மாயை எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்’ என்று பிரசங்கி புத்தகத்தில் வரும் வரி. இது கீழைநாட்டின் ஞானத்தைப் போன்றதொரு வரி. ‘மாயை’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, நீர் ஆவியாதல் என்ற பொருளில் மூலமொழிப் பிரதியில் இருப்பதாகச் சொன்னார்.

“மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்ற வசனத்தைச் சொல்லி, லியோ டால்ஸ்டாயின் “Where Love Is, God Also” என்கிற கதையைச் சொன்னார். சிறு வயதிலிருந்து அடிக்கடி கேட்ட கதை. ஆனால், இது எங்கோ பைபிளில் உள்ள கதை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.

வேளாங்கண்ணியில் நிகழ்ந்த அற்புதம் என்று சொல்லப்படுகிற கதை ஒரு வழக்கமான இந்தியக் கதை போன்றல்லவா உள்ளது என்றபோது, ஒரு சமயம் புதிய நிலங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ளதற்கு ஏற்றாற்போல் சில அம்சங்கள் மாறுபடும். இறை அற்புதங்கள் அளவுக்கு மீறாமல், ஒரு ‘small dose’ மக்களுக்குத் தேவைதான் என்றார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட பகுதி நிறைவடைந்து, காலை உணவுக்கான இடைவேளைக்குச் செல்லும்போது, “எனது ஜனமே, நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்? எதிலே உனக்குத் துயர் தந்தேன்? அதற்குப் பதில் நீ கூறிடுவாய்” என்கிற துயரத்தில் ஆழ்த்துகிற தவக்காலத்தில் பாடப்படுகிற பாடலும், ‘Mater Dolorosa’ என்கிற மரியாள் காயப்பட்ட இயேசுவை மடியிலே கிடத்தி இருக்கிற படமும் மனதுக்குள் அழுத்தமாய் நிறைந்திருந்தன.

https://youtu.be/dxZdgpUCioc?si=123IX8HVDfn-uQ_L

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டிலும் வரும் தொடர்புடைய வசனங்களை அதன் ஒத்திசைவோடு சிறில் சார் நிறைய இடங்களில் காட்டினார். உதாரணமாக, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்கிற வசனத்தை ஒட்டி வரும் சங்கீதம் அதிகாரம் 22. இவ்வாறு படிப்பது அந்த அதிகாரத்துக்கே புதிய அர்த்தத்தைத் தருவதாக இருந்தது. (Eli, Eli, lama sabachthani?)

பொதுவாக யாரிடமாவது பைபிள் சார்ந்து கேள்வி கேட்டால், சாத்தான் கூட ஆண்டவரைச் சோதிக்க மறைநூலில் இருந்து மேற்கோள் காட்டினான் என்று சொல்லி, தங்களை ஆண்டவரின் பக்கமும், கேட்பவரைச் சாத்தானின் பக்கமும் நிறுத்துகிற எளிய நம்பிக்கை உடையோரைத்தான் சந்திக்கக் கூடுகிறது. ஆனால், ஆசிரியர் சிறில் சார் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

வகுப்புகள் எந்தத் தொய்வும் கொள்ளாதபடி, பேசுபொருள் சார்ந்தே நகைச்சுவைகளைச் சொல்லிக்கொண்டு சென்றார். ‘தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்’ என்னும் வசனத்தை நீங்கள் “தெய்வ பயமே பயத்தின் தொடக்கம்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான கண்டனத்தைப் பதிவு செய்துகொள்வதாகவும் நகைச்சுவையாகச் சொன்னார்.

பழைய ஏற்பாட்டை மனித நாகரிகம், பண்பாடு, சட்ட ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் பரிணாமமாக விளக்கியது, திருவிவிலியத்தை முற்றிலும் புதிய வெளிச்சத்தில் புரிந்துகொள்ளும்படியாக இருந்தது.

இதுவரை பைபிளின் ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் வரலாற்றுக் காலகட்டத்தின் பின்னணியில் பொருத்தி வாசித்ததில்லை. அவ்வகையில் முற்றிலும் புதிய அனுபவமாகவே இருந்தது.

மேற்கொள்ள வேண்டியது, நான் பிறந்த மரபு என்மீது கொண்டுள்ள பிடியைப் போதுமான அளவு தளர்த்திக்கொண்டு, அத்தனை மரபுகளின் மேன்மைகளையும் சுதந்தரித்துக்கொள்வதே என்று புரிகிறது.நான் கிறிஸ்தவ மரபுடன் என்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. ஏனென்றால், எதனுடன் என்னை அடையாளப்படுத்திக்கொள்வதென்று அறியாத மனநிலையிலேயே உள்ளேன்.

வகுப்பை ‘அன்பே பிரதானம்’ என்கிற பாடகி ஜிக்கியின் பாடலுடன் நிறைவு செய்தார்.வகுப்பு மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ‘எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்’ என்னும் தெசலோனிக்கேயரில் வரும் வசனம் போல.

மகிழ்ச்சியுடன்,
அக்னி.

முந்தைய கட்டுரைகுடும்பம் என்னும் எல்லை.