வாசிப்பில் அடைவது

அன்புள்ள ஜெ,

                 இதை சொற்களால் பகிர நிறையத் தடைகள் இருப்பதை அறிந்தும் சொல்ல முயல்கிறேன். ஏன் இந்த முன்னறிவிப்பு என்றால் நான் இப்போது இருக்கும் நிலை அப்படிப்பட்டதுதான். நான் இருக்கும் நிலை சொற்கள் அற்ற பேரமைதியான நிலை. இதில் காலம் வெளி என எந்தத்  தடையும்  இன்றி நான் பறந்து கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சலனதுக்கும் இடமில்லை. இந்த நிலைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என்று தெரியவில்லை

            முன்பு நான் உங்களைப் பார்த்து  வியந்தேன். பிறகு தான் உணர்ந்தேன் அது வியப்பல்ல உங்கள் மேல் நான் கொண்ட பொறாமையென. உங்களை ஒரு அளவீடாகக் கொண்டே என்னை நான் அளந்தேன். ஆகையால் பிறரோடு என்னை ஒப்பிடுவதற்கான சூழ்நிலைகள் தானாக அமைந்தது. அதுவே என்னை இந்நிலையில் இருந்து விலக்கி வைத்திருந்தது. ஆனால் இன்று காலை ஏனோ ஒரு விதமான சலனமின்மையை நான் எனக்குள் உணர்ந்தேன். என்னை நான் தெளிவாகப் பார்த்தேன். அந்த அமைதி எனக்கு என்னை காண்பித்தது. அதை பட்டியலிட்டு காட்ட நான் விழையவில்லை. அப்படி காண்பித்தால் அதை நான் தப்பாகவே சொல்வேன்உண்மையைச் சொன்னால் எனக்குப் பட்டியலிடத் தெரியவில்லை

         அந்த அமைதி தான் உங்களை என்னிடம் நெருங்க வைத்தது. ஆம் நான் உங்களிடம் நெருங்கி தான் இருந்தேன். இதை அடிக்கும் போதும் உங்கள் அருகில் தான் இருக்கிறேன். இன்னும் சொன்னால் நான் உங்களை வேறொருவறாக எண்ணவில்லை. உங்களை மட்டுமல்ல யாரையும் எதையும் நான் அப்படி பார்க்கவில்லை. எல்லாம் எனக்கு நெருக்கமாகத் தெரிகிறது. இப்போது நான் உங்களை வியக்கவில்லை நீங்கள் என் அளவீடாக இல்லை. இந்த நிலைக்கு நான் பெயர் வைக்க விரும்பவில்லை. ஒரு வேலை நான் அனுப்பும் இந்த கடிதத்தை நீங்கள் தவறென்று கூட கருதலாம். ஆனால் அது என்னை பாதிக்காது ஏனென்றால் இந்த நிலையில் எதுவும் சரி என்றும் தவறென்றும் எனக்குத் தெரியவில்லை. மனம் இந்த உச்ச அமைதியில்  இருக்கையில் உங்களிடம் பகிரவே சற்று வெளியே வந்து இதை எழுதுகிறேன்

          இதை ஏன் உங்களுக்கு அனுப்புகிறேன் என்றால் உங்கள் நூலை படிக்கும் தருணம் நான் அடைந்த நிலை இது. இந்த நிலையை உங்களால் உணர முடியும் என்று நம்புகிறேன். இது ஏதோ வித்யாசமாக எழுத எண்ணி எழுதிய கடிதமென்று நான் கருதவில்லை. உண்மையில் இதை நீங்கள் வாசிக்க வேண்டும் என்றும் நான் எண்ணவில்லை. உங்கள் பதிலையும் எதிர்பார்க்க விரும்பாத நிலையில் எழுதுகிறேன். மனதில் தோன்றுவதை அப்படியே அனுப்புகிறேன். ஏதுமற்ற நிர்வாணமான நான் அனுப்புகிறேன். மேலும் யோசித்தால் உங்களை கவர நினைத்து கடிதத்தில்  ஏதேனும் மாறுதல் செய்து விடுவேன். அதனால் பரப்பாக அடித்துக் கொண்டிருக்கிறேன்

          இந்த கடிதத்திற்காக உங்களிடம் நான் நன்றியோ, மன்னிப்போ கேட்க  விரும்பாத நிலை இது. ஏனென்றால் உங்களை நான் வேறொருவராக பார்க்க இயலாத நிலை. இது பித்து நிலையா, மன மயக்கமா, போதையா எனக்குத் தெரியவில்லை. நான் போதை பொருள் உட்கொள்ளும் பழக்கம் இல்லாதவன்

      என் நிலையை விளக்கவே இத்தனை விவரனைகள்மேல கூறியுள்ள எந்த சொற்களும் அர்த்தமுள்ளவையாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இந்த நிலையில் சொற்களுக்கு வேலையில்லை

 சரவணன் சிவராஜா

அன்புள்ள சரவணன்

வாசிப்பு அளிக்கும் உயர்ந்த நிலை என்பது தன்னில் இருந்து தானே கொஞ்சம் விடுபடுவதுதான். ஒரு குன்றில் ஏறிச்சென்று நாம் வாழும் ஊரை நாமே பார்ப்பதுபோல

ஜெ 

முந்தைய கட்டுரைஇருவேறுலகம்
அடுத்த கட்டுரைராஜாவா ரஹ்மானா?