ஆன்லைனும் குருகுலமும்

சைவத் திருமுறைகள், அறிமுக வகுப்பு

திருமுறைகள் பற்றிய வகுப்பு அறிவிப்பை ஒட்டி பலர் இணையவழியாகக் கற்க முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தனர். ஏற்கனவே வைணவ இலக்கிய அறிமுக வகுப்புக்குத்தான் இந்தவகையான மின்னஞ்சல்கள் வந்தன. வேறு வகுப்புகளுக்கு வருவதில்லை.

காரணம் என்னவென்றால் சைவ வைணவ வகுப்புகள் பொதுவாக கல்வி ஆர்வம் அற்றவர்களுக்கும் ஒரு சின்ன ஈர்ப்பை அளிக்கின்றன. ஆனால் அதன்பொருட்டு அவர்கள் நேரமோ உழைப்போ பணமோ செலவழிக்க தயாராக இல்லை. இலவசமாக கிடைத்தால் கடைக்கண்ணால் பார்த்து வைக்கலாம், அறிந்துகொண்டதாக தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

மெய்யான ஆர்வத்துடன்  அயலூர்களில் வாழும் சிலரும் ஆர்வத்துடன் எழுதியிருந்தனர். இருசாரார். வெளிநாட்டில் வாழ்பவர்கள் நாங்கள் என்ன செய்வது என கேட்டிருந்தனர். ஒன்றும் செய்ய முடியாது என்பதே பதில். திரும்பத் திரும்ப கேட்ட ஒருவரிடம் சொன்னேன். ‘என்ன கார் வைத்திருக்கிறீர்கள்?’. அவர் ‘டெஸ்லா’ என்றார். ‘உங்களுக்கு அங்கே சென்றதனால் டெஸ்லா கார் கிடைத்தது. இந்த கல்வியை இழந்தீர்கள். இரண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆறுதல் கொள்ளுங்கள்’ என்றேன்.

இன்னொருவர் முதியவர். எழுபது கடந்தவர், உடல்நிலையும் சரியில்லை. ‘எனக்கு இக்கல்வியை அடைய வழியே இல்லையா?’ என்றார். “இல்லை” என்றேன். “இன்று நீங்கள் இமையமலை ஏற முடியுமா? முடியாதென முடிவுக்கு வந்துவிட்டீர்கள் அல்லவா? உடலுக்கு முதுமை, நோய் என பல சிக்கல்கள் உண்டு. அவை வரும் முன் செய்யவேண்டியது மெய்யான கல்வி. உலகியல் கடமைகளை முடித்துவிட்டு ஓய்வாகச் செய்யவேண்டியது அல்ல. காலம் கடந்துவிட்டது. இனி உங்களுக்கு உகந்த எதையாவது செய்யுங்கள், அதுதான் நடைமுறை உண்மை”

பலமுறை இதை எழுதியுள்ளேன். ஒரு கல்வி நிகழ்வதற்கு மூன்று அடிப்படைத்தேவைகள் உண்டு.

முதன்மையானது, அதற்குரிய இடம். அது வனம் அல்லது ஆலயம். (வித்யாவனம், வித்யாக்ஷேத்ரம்). கல்விக்கென உருவான இடம். கல்விக்குரிய சூழல் உள்ள இடம். கல்வியுடன் தொடர்பற்ற செயல்கள், கல்வியுடன் தொடர்பற்ற மனிதர்கள் இல்லாத இடம். ஆகவேதான் அதை அக்காலத்தில் அத்தனை ஒதுக்குபுறமாக அமைத்தனர்.

இரண்டு: ஆசிரியர். கல்வி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வரும் தகவல்கள் அல்ல. சொற்கள் அல்ல. ஆசிரியரின் ஆளுமை (பெர்சனாலிட்டி)தான் உண்மையில் மாணவனுக்கு கல்வியை அளிக்கிறது. கல்வி என்பது தொடர்புறுத்தல். தொடர்புறுத்தலை நிகழ்த்துவது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையிலான அகம்சார்ந்த உறவுதான். நேரடியாக ஆசிரியரை சந்திக்காமல் மெய்யான கல்வி இல்லை. நமக்கு ஆசிரியரை தெரிந்திருக்கவேண்டும். அதைவிட நம்மை ஆசிரியருக்குத் தெரிந்திருக்கவேண்டும்

மூன்று: உடன்பயிலும் மாணவர்கள். சகபாடிகள் என்பவர்கள். அவர்களும் ஏறத்தாழ நம் மனநிலை கொண்டவர்களாக இருக்கவேண்டும். மாணவர்களின் ஒட்டுமொத்த மனநிலை ஒவ்வொருவருக்கும் கல்விக்குரிய ஊக்கத்தை அளிக்கிறது

அப்படி ஓரு கல்வியை உருவாக்கவே முயல்கிறோம். நம் பள்ளிக்கல்விமுறையே அதற்கு எதிரானது. ஆகவேதான் ஒரு பள்ளிக்கூட அறையில், ஒரு பொதுக் கட்டிடத்தில் இவற்றை நடத்தவில்லை. ஆன்லைன் கல்வி என்பது இன்னும் பெரிய தமாஷ். அங்கே ஆசிரியர் இல்லை, கல்விநிலை  இல்லை, மாணவர்களும் இல்லை. அரைகுறையாக ஒரு காணொளியை கண்டு , தனக்குத் தோன்றியதை கற்பனைசெய்துகொண்டு, அறிந்துவிட்டோம் என்னும் மாயையான நம்பிக்கையை அடைகிறோம். உண்மையில் அது அறிதல் அல்ல, அறியாமை.

தத்துவம், கலைகள் போன்ற நுண்மையான கல்வியில் ஆன்லைன் கல்வியை முழுமையாக தவிர்ப்பதே நல்லது– கற்காமலே இருப்பதுகூட ஆன்லைன் கல்வியைவிட நல்லதுதான். ஏனென்றால் தவறான கல்வியோ அல்லது பொய்யான நம்பிக்கையோ வராமலாகிறது. ஆன்லைன் கல்வி கற்ற ஒருவர் கற்றுவிட்டோம் என நம்பி மெய்யான கல்வியை தவிர்க்கக்கூடும். கற்காமலேயே இருக்கும் ஒருவருக்கு என்றாவது கல்வி அமையும் வாய்ப்பு உண்டு. எளிய நடைமுறைவிஷயங்கள், வெறும் தகவல்சார்ந்த அறிதல்களுக்கு ஆன்லைன் கல்வி உகந்ததாக இருக்கலாம்.

இவை நேரடியான ஆசிரியர்- மாணவர் உரையாடலாக அமையும் கல்வி. தன் முன் அமர்ந்திருப்பவர்களுக்கு, அவர்களின் தகுதியை மதிப்பிட்டு, அந்த தருணத்தின் மதிப்பை ஒட்டி ஓர் ஆசிரியர் வகுப்பை நடத்துகிறார். அதை பதிவுசெய்து சம்பந்தமே இல்லாதவர்களுக்கு பார்க்கக்கொடுப்பது அபத்தம். ஒரு கல்வியை தொடங்கும் ஒருவர் அடிப்படை நிலையில், பல குழப்பங்களுடன் இருக்கிறார். ஆசிரியர் உதவியுடன் அவர் மெல்லமெல்லத்தான் முன்னகர்வார். அந்நிலையில் எந்த அறிதலுமில்லாத குதர்க்கங்களுக்கு அவர் செவிகொடுக்க நேர்ந்தால் கல்வி அத்துடன் முடியும். பலசமயம் குழப்பங்கள் நிகழ்ந்து இருக்கும் அறிதலும் திரிபடையும். ஆகவே மெய்யான கல்வி அந்தரங்கமானதாகவே இருக்கமுடியும்.

நாங்கள் உத்தேசிப்பது ஒரு முழுமையான தீவிரமான கல்வி. அதில் பங்குபெற்ற எவருக்கும் அதன் மதிப்பை சொல்லத்தேவையிருக்கவில்லை. மெய்யான கல்வி அதுவே என்றும் அப்படி ஒரு கல்வி உண்டு என்றும் பிறருக்குச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஅகப்பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைபைபிளை அறிதல், கடிதம்