கவிதை, மரபுக்கவிதை

அன்புள்ள திரு ஜெயமோகன் வணக்கம்

மரபிலக்கியப் பயிற்சி வகுப்பில் இம்முறை ஒரு புதிய முயற்சி தானாகவே மலர்ந்தது.பங்கேற்பாளர்கள் பலரும் வெண்பா எழுதுவதில் விருப்பம் காட்டினர். எனவே அதன் அடிப்படை இலக்கணங்களை ஒரு முறை நினைவு படுத்தினேன். ஏறக்குறைய எல்லோருமே எழுத முயன்றார்கள். பிழை திருத்தங்கள் நடந்த பிறகு அநேகம் பேருக்கு தங்களால் வெண்பா எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

வெண்முரசு படையிலிருந்து வெண்பாமுரசுகள் புறப்படுவதற்கான அத்தனை அபாய சமிக்ஞைகளும் தென்பட்டன.

வெள்ளிமலை போகும் வழி

ஜெயமோகன் சொல்லாத சொல்

அந்தியூர் தந்த மணி

போன்ற ஈற்றடிகள் தரப்பட்டாலும் பாதுகாப்பு கருதி முதல் ஈற்றடியையே அனேகம் பேர் பாவித்தார்கள். வீம்பேறிகள் இன்னிசை வெண்பா நேரிசை வெண்பா என முயற்சிக்க சோம்பேறிகள் குறள் வெண்பாவுடன் நிறுத்திக் கொண்டார்கள்.

(திட்டும் உரிமை ஆசிரியருக்கு உண்டல்லவா)

மாணவர் ஸ்ரீகாந்த் பார்வையில் படும் அனைத்தையும் வெண்பாவிற்கான பாடுபொருள் ஆக்க சங்கல்பம் கொண்டு விட்டார்.

அந்தியூர் மணியின் பல்சர் வாகனம் அவர் பார்வையில் பட்டது.

பல்சர்நேர்நேர் தேமா அடுத்து வாகனம் வராது// ஊர்தி//ஊஹூம் என அவஸ்தைப்பட்டு குணா படம் கமல்ஹாசன் கடிதம் கடுதாசி என்று தடுமாறுவது போல யோசித்து விட்டு உதவி கேட்டு வந்தார்.

பல்சர் எனும்ஊர்திஎன்று தொடங்கிபெட்ரோல் குடிக்குதேஎன்று முதல் அடியை எழுதியதும்அல்சர் வருமோ அதற்குஎன ஸ்ரீகாந்த் குறுகிய காலத்தில் குறள் வெண்பா பாடி சாதனை படைத்தார் .

மலையிறங்கிய பிறகு எவ்வளவு பேர் வெண்பா முயற்சிகளை தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்து ரம்யா மனோகரன் மட்டும் தொடர்ந்து எழுதி எழுதி வெண்பா வடிவத்தை எட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த முதல் தகவல் அறிக்கை உங்களுக்கு

அன்புடன்

மரபின் மைந்தன் முத்தையா 

முந்தைய கட்டுரைபயணத்தில் நாம் அடைவது என்ன?
அடுத்த கட்டுரைஆன்லைனும் குருகுலமும்