அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். உங்கள் முழுமையறிவு உரையை கேட்கையில்
1.இன்றைய நுகர்வு மனநிலையில் முயற்சி எடுத்து இருந்து அழகியல் சுவை உருவாக்கத்தை வடிவமைக்க கற்றுக் கொள்ள முடியும். ரசனை கல்வியாக்கி கற்றுக் கொள்ளுதல் வழி.
2.நுகர்வு மனநிலையில் இருந்து அழகியல் சுவை ரசனைக்கு உயர்த்திக் கொள்ள முடியும். ரசனை கல்வி கண் திறக்கும்
3.நுகர்வு மனநிலைக்கு மறுபக்கம் துறவு மனநிலை என குழம்பாமல் நுகர்வினை பக்குவப்படுத்தி அதை நுட்பமாக, ரசனையாக உயர் தளர்த்துக்கு இட்டுச் செல்ல முடியும். ரசனை கல்வி வழித்துணையாகும்.
என விருப்பமும்,நம்பிக்கையும் வந்தது.
நீங்கள் ஒரு முறை வாஷிங்டன் டிசி வந்திருந்த பொழுது உங்களுடன் இங்குள்ள ஓவிய அருங்காட்சியகம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் இருந்து வந்து நீங்கள்தான் உள்ளூர்காரர்களான எங்களுக்கு முழு ஓவிய அருங்க்காட்சியகத்தினையும் சுற்றிக் காட்டினீர்கள். அங்கிருக்கும் ஓவியங்களை பற்றி விளக்கி புரிய வைத்திர்கள். பெரும் வகுப்பாகவே நிகழ்ந்தது.
இந்த கல்வி வழியாக கீழ்காணும் இடங்களை இந்தப் முழுமையறிவு பாதை அணுகுகின்றது என தோன்றுகின்றது.
1) அழகியல் கல்வி கற்று அதில் விழிப்புணர்வு கொள்வது
2) அழகியலை அணுகி அதை பழகிக் கொள்வது
3) அழகியலில் பங்கேடுத்து அனுபவங்களை உருவாக்குவது
4) அழகியலின் பன்முகத்தன்மையை கற்றுக் கொள்ளுவது
5) அன்றாட வாழ்வில் அழகியலை ஒருங்கிணைந்துக் கொள்ளுவது
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்,
இதை இன்னும் கொஞ்சம் பெரிய ஒரு வட்டத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்குக் கொண்டுசெல்லலாம் என்பது எண்ணம். என் தளத்திற்கு வருபவர்களில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே பெரும்பாலானவர்கள். கலைகளில், பொதுவான அறிவியக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இருந்தால் அவர்களைச் சென்றடைய முயல்கிறோம். ஆகவே இந்த அறிமுக உரைகள். பெரிதாக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் இக்காணொளிகளைக் காணலாம். ஓவியக்கலை அல்லது ஆலயக்கலை அல்லது யோகம் போன்றவற்றுக்கு வரலாம். அவ்வாறு வந்தவர்கள் மெல்ல வாசிப்புக்கும் வருகிறார்கள் என்பதே எங்கள் அனுபவம்
ஜெ
எங்கள் வலைத்தளம் unifiedwisdom.guru
எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்
எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்
எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta












