நாத்திகன் கோயிலுக்குச் செல்லலாமா?

அன்புள்ள ஜெ

ஆலயங்களைப் பற்றிய உங்கள் உரையை கண்டேன். நான் ஒரு நாத்திகன். சிற்பக்கலையை ரசிக்க மட்டும் நான் ஆலயத்திற்குப் போவது சரியாகுமா? ஆலயங்களை நான் மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள் இல்லையா? பக்தர்கள் அப்படிச் சொல்லலாமே?

செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்குமார்

இன்று ஒரு தரப்பினர் தங்கள் வழிபாட்டுக்காக கோயில்கட்டுகிறார்கள் என்று கொள்வோம். அதை அவர்கள் வழிபாட்டுக்காக மட்டும் கட்டியிருக்கிறார்கள் என்று கொள்வோம். அங்கே வழிபடாத ஒருவர் செல்வது பிழை. ஆனால் நம் ஆலயங்கள் நேற்றைய மன்னர்கள் கட்டியது. அன்றைய அரசுகளின் சொத்து அது.

அந்த அரசுகளின் தொடர்ச்சிதான் இன்றைய அரசு. நாம் இன்றைய அரசின் குடிமக்கள். நமக்கு எல்லா கோயில்களிலும் உரிமை உண்டு. நாம் சாமிகும்பிடுகிறோமா கலையை ரசிக்கிறோமா என்பதை கண்காணிக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

கோயில்கள் சாமிகும்பிடுபவர்களுக்கு மட்டும் உரியவை அல்ல. அவை இந்தியக் கலைச்செல்வங்கள். இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் உரியவை. விரிவான நோக்கில் உலகக் கலைச்செல்வங்கள். உலகக்குடிமக்கள் அனைவருக்கும் உரியவை.

கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு பிறர் இடர் விளைவிக்கக்கூடாது. அந்த மனநிலையை கலைக்கும் எச்செயல்களும் நிகழக்கூடாது. கோயில்களின் கலைச்செல்வங்கள் முழுமையாகவே பேணப்பட்டகாவேண்டும்.

அந்த நோக்கில் பார்த்தால் பக்தர்கள் வழிபடுகிறோம் என்று சிலைகள் மேல் வெண்ணையைப் பூசி மீண்டும் மீண்டும் வழித்தெடுப்பது, வெள்ளை அடிப்பது, பெயிண்ட் பூசுவது, கோயில்களுக்குள் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டுவது என நம் கலைச்செல்வங்களை அழிப்பதைப்பற்றி எல்லா குடிமக்களும் அக்கறை கொள்ளவேண்டும். பக்தர்களைத்தான் இன்று கலையார்வம் கொண்டவர்கள் கட்டுப்படுத்தவேண்டும்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபௌத்த மெய்யியல்  – தியான முகாம்
அடுத்த கட்டுரைஆயுர்வேதமும் அறிவியக்கமும்